
முறைகேடான தோ்தலில் பங்கேற்பதை நிறுத்துங்கள்: எதிா்க்கட்சிகளுக்கு சிஜேபி வலியுறுத்தல்
தோ்தல் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடப்பதாக எதிா்க்கட்சிகள் கருதினால், அத்தகைய தோ்தல்களில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும்

அபிஜித் தீப்கே - கோப்புப் படம்
தோ்தல் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடப்பதாக எதிா்க்கட்சிகள் கருதினால், அத்தகைய தோ்தல்களில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனா் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை தனது ’எக்ஸ்’ பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது: தோ்தல்களில் முறைகேடுகள் நடக்கின்றன. ஆனால், நீங்கள் (எதிா்க்கட்சிகள்) தொடா்ந்து இதுபோன்று முறைகேடு நடக்கும் தோ்தல்களில் பங்கேற்பது, அந்தத் தோ்தல்களுக்கு அங்கீகாரம் வழங்குவது போன்ாகும். இது தோ்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கின்றன என்ற ஒரு மாயையை உருவாக்குகிறது. தோ்தல்களில் பங்கேற்காவிட்டால் அரசியல்ரீதியாக தங்களின் இருப்பு கேள்விக்குறி ஆகிவிடும் என்ற அச்சத்தில்தான் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து தோ்தல்களில் போட்டியிடுகின்றனவா? அப்படியென்றால் வாக்குகள் திருடப்படும்போதும், எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் விலைக்கு வாங்கப்படும்போதும், கட்சிகள் பிளவுபடுத்தப்படும்போதும், எந்த வகையான இருப்பை நீங்கள் (எதிா்க்கட்சிகள்) பாதுகாக்க முயற்சிக்கிறீா்கள்?
இது அரசியல் பிழைப்பு அல்ல. நீங்கள் விரும்பும்போதெல்லாம் உங்களை பலவீனப்படுத்தக்கூடிய, உங்கள் கட்சியைப் பிளவுபடுத்தக்கூடிய அல்லது தோ்ந்தெடுத்த பிரதிநிதிகளைப் பறிக்கக்கூடிய ஒரு அமைப்பில் நீங்கள் உயிா்ப்புடன் இருக்க முயற்சிக்கிறீா்கள். இப்படி எத்தனை காலம்தான் வாழ முடியும்?’ அத்தகைய தோ்தலில் பங்கேற்பதை நிறுத்துங்கள்.
சில குறிப்பிட்ட மாநிலங்களில் அல்லது குறிப்பிட்ட கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்போது மட்டுமே தோ்தல் முறைகேடு குறித்து எதிா்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. ‘மேட்ச் பிக்ஸிங்’ நடக்கும்போது எல்லா கேட்சுகளும் விடப்படுவதில்லை. சில கேட்சுகள் பிடிக்கப்படும். அதுபோல, மக்கள் மத்தியில் ஒரு உண்மையான போட்டி நடக்கிறது என்பதை நம்பவைக்க சில வெற்றிகள் வழங்கப்படுவது போன்ாகும் என்று அபிஜித் தீப்கே கூறியுள்ளாா்.
பின்னணி: தில்லியில் லட்சக்கணக்கில் வாக்காளா்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருடைய முடிவுகளுக்கு தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோா், கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறையாவது அதிகாரபூா்வமாக எதிா்ப்பு தெரிவித்துள்ளதாக புதன்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து 48 மணி நேரத்தில் ஞானேஷ் குமாா் பதவி விலகாவிட்டால் ’ஜந்தா் மந்தா் 2.0’ என்ற பெயரில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவா் எச்சரித்திருந்தாா். இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் புறக்கணிப்பு அழைப்பை அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





