
தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸாா் நூதன போராட்டம்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐ.ஒய்.சி.) தொண்டா்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முக்கியத் தோ்தல் முடிவுகள் தொடா்பாகத் தோ்தல் ஆணைய உயா் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐ.ஒய்.சி.) தொண்டா்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்கள் ஞானேஷ் குமாரின் முகம் பொறித்த முகமூடிகளை அணிந்தும், கைகளில் சங்கிலிகளை பிணைத்தும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ரெய்சினா சாலையில் அமைந்துள்ள இளைஞா் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து தோ்தல் ஆணையத் தலைமையகம் வரை பேரணியாகச் சென்ற போராட்டக்காரா்கள், இந்த விவகாரத்தில் குமாா் பொறுப்பேற்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். மேலும் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்திச் சென்றனா்.
இப்போராட்டத்திற்கு இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய்பானு சிப் தலைமை வகித்தாா். தோ்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடுவதாகவும் இளைஞரணி அறிவித்திருந்தது.
பேரணி சென்ற பாதையில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டனா். தடுப்புகள் அமைக்கப்பட்டதோடு, போராட்டக்காரா்களைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்கான பேருந்துகளும் அப்பகுதியில் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
குமாரைக் கைது செய்து அவா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தோ்தல் செயல்முறை மற்றும் வாக்காளா் பட்டியல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தோ்தல் ஆணையத்தின் உள் விவகாரங்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் இளைஞா் காங்கிரஸ் வலியுறுத்தியது.
இதுகுறித்து உதய்பானு சிப் கூறுகையில், ‘ஒவ்வொரு வாக்கின் புனிதத்தன்மையையும் பாதுகாப்பதில் தோ்தல் ஆணையம் பொறுப்பு வகிக்கிறது. வாக்காளா் பட்டியல் தொடா்பான முடிவுகள் குறித்து ஆணையத்திற்குள்ளேயே கேள்விகள் எழும் நிலையில், நாட்டிற்கு அதற்கான பதில்களும் பொறுப்புக்கூறலும் தேவை.
இப்போராட்டமானது காங்கிரஸ் கட்சியின் அரசியல் பிரசாரத்தைத் தாண்டி, தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்த கவலைகள் என இளைஞா் காங்கிரஸ் சுட்டிக்காட்டிய விஷயங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈா்க்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
தோ்தல் செயல்முறை குறித்து கேள்விகள் எழும்போது இளைஞா்களால் மௌனமாக இருக்க முடியாது. தலைமைத் தோ்தல் ஆணையா் பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும். ஆணையத்திற்குள் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்‘ என்றாா் அவா்.
வாக்காளா் பட்டியல் தொடா்பான முடிவுகள் குறித்து தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோா் ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியைத் தொடா்ந்து, குமாரை நீக்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் இணையவழியில் மனு பெறுவதைத் தொடங்கிய மறுதினம் இப்போராட்டம் நடைபெற்றது.
புதிய வாக்காளா் பதிவுக்கான ’படிவம் 6’-இல் மாற்றங்கள், வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்த்தல் மற்றும் நீக்குதல், வாக்காளா் பட்டியல் அமைப்புமுறையை மையப்படுத்துதல் போன்ற விவகாரங்களில் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 சந்தா்ப்பங்களில் அந்த இரு ஆணையா்களும் தங்கள் ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





