தருமமிகு சென்னை- சந்தியா நடராஜன்; பக்.248; ரூ.300; சந்தியா பதிப்பகம், சென்னை-600 083; ✆ 044- 24896979.
நகரங்களின் வரலாறாக பெரும்பாலான நகரங்களை, பிரபலங்களைக் கொண்டு எழுதி, சந்தியா பதிப்பகமானது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நூல் சென்னையின் பெயருடன் வந்திருக்கிறது.
இந்த நூலை சந்தியா நடராஜன் எழுதியிருப்பதுடன் சென்னையின் வாழ்க்கையும், வரலாற்றையும் அனுபவத்தையும் 'வாழ்க்கையின் வசந்தகாலம்' என்றும் குறிப்பிடுகிறார். 90% சென்னைவாசிகள் அவரது கூற்றை ஏற்பர்.
செங்கோட்டை பாசஞ்சர், விமான நிலைய விண்ணகரம், மேன்சன்- அல்லியே புகாத அர்ஜுன தர்பார், பர்மா பஜார், திவ்ய தேசத்தில் இஸ்லாமிய உலகம், ஆங்கிலோ- இந்திய சமூகம், சௌகார்பேட்டை ஜூலேலால் உலகம், வெள்ளாள- வன்னிய தேனாம்பேட்டை, வடசென்னை, தி.நகரும் தமிழ்ப் பதிப்புப் பணியும், சிந்தாதிரிபேட்டை தவிர புதிய நகரங்கள் குறித்தும் விரிவாக ஏராளமான தகவல்களுடனும் படுசுறுசுறுப்பான எழுத்தில் இந்த நூலை உருவாக்கியுள்ளனர்.
நடராஜன் சென்னை சுங்கத் துறையிலும், மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையிலும் பணிபுரிந்துள்ளார். சென்னையில் அறியப்படாதவற்றை அறிந்துகொள்ளவும், சொல்லப்படாதவற்றை மக்களுக்குச் சொல்லவும் பணியின் நிமித்தம் கிடைத்த தகவல்கள் உதவியிருக்கின்றன.
குஜராத்திகள், மார்வாரிகள், சிந்திக்கள் ஆகியோரின் சென்னை வாழ்க்கையை விவரித்தல் வெகு அழகு. அஜித்தின் தாயார் சிந்திக்காரர் என்று அறிமுகம் செய்கிறார். 'கிடங்குத் தெரு' நாவல் செந்தூரம் ஜெகதீஷ் எழுதியது. அவரும் ஓர் சிந்திக்காரர் என்கிறார். சுவாமி படங்களின் மொத்தக் குத்தகையாளியான ஜே.பி.கண்ணா புகழ்பெற்ற சிந்திக்காரர் என்கிறார் நூலாசிரியர்.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள 'சிவசாமி ஐயர் பேலஸ்' சிம்சன் அனந்தராமகிருஷ்ணனிடம் சென்றதும், தற்போது சிருங்கேரி மடத்துக்குச் சென்ற தகவலும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.