ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம் -தூக்கு செல்வம்; பக்.712; ரூ.800; கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை-600 014, ✆ 044-42009603
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, மரணத்தின் வெகு அருகில் சென்று மீண்டு, வாழ்நாள் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று, 31 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் அடைபட்டிருக்கும் செல்வம் என்பவரின் சிறை அனுபவங்களை ஒளிவு மறைவின்றி இந்நூல் பதிவு செய்துள்ளது.
இப்படியொரு நரக வேதனை சிறை அனுபவத்தை இதுவரை யாரும் பதிவு செய்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணும் அளவுக்கு உள்ளத்தை உலுக்கி எடுக்கும் ஆற்றலும், நமது நினைவுளோடு நிரந்தரமாக தங்கக்கூடிய அசாதாரணத் திறனையும் இந்நூல் கொண்டுள்ளது.
கைதிகளின் இருள் உலகை மட்டுமல்லாது காவல் துறையினர், சிறை அதிகாரிகள், நீதிபதிகளின் போலி பிம்பங்களையும் இந்நூல் தகர்க்கிறது.
தமிழக சிறைகளிலேயே பாளையங்கோட்டை சிறையில் மட்டும்தான் ஜாதிகள் அடிப்படையிலான தொகுதிகள் வெளிப்படையாக உள்ளன; ஒரே மாதிரியான குற்றத்துக்கு வெவ்வேறான தண்டனை; சிறையில் இருந்து விடுதலையான குற்றவாளிகள் கொடூர எண்ணங்களுடன் வெளியேறுவதற்கு சிறைச் சூழல்களும், சிறை அதிகாரிகளுமே காரணம் உள்ளிட்ட நூலாசிரியரின் பல்வேறு விமர்சனங்கள் காவல் துறை, நீதித் துறை, சிறைத் துறைகளின் அலட்சியப்போக்கை சுட்டிக் காட்டுகின்றன.
சிறு குற்றம் செய்தவர்கள் தொடங்கி கொலையாளிகள், சாமியார்கள், சிலைக் கடத்தல்காரர்கள், விடுதலைப் புலிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருடன் சிறைக் கைதியான நூலாசிரியருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் திகைப்பில் ஆழ்த்துகின்றன.
நல்ல புத்தகம் ஆயிரம் சிறைச்சாலைகளை மூடிவிடும். நூலாசிரியர் வாசித்த நூற்றுக்கணக்கான நூல்கள் அவரது கடந்த கால தவறுகளை உணர்த்துகின்றன. ஆனால், காலம்கடந்த ஞானத்தால் பலன் இல்லாமல், அவர் சிறையில் அடைபட்டுள்ளார்.
தவறான புரிதல், இளமையின் தறிகெட்ட வேகம், ஆத்திரத்தால் நடந்த குற்றம், சிறைச்சூழல் என இந்நூலில் பதிவான ஒவ்வொரு நிகழ்வும் எப்போது வாசித்தாலும் கொடூரமாகவே தெரியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.