/

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருடாந்திர பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது.

News image

ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு நடத்தப்பட்ட ஸ்நபன திருமஞ்சனம்.

Updated On :29 ஆகஸ்ட் 2020, 2:34 am

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருடாந்திர பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது.

திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் கோயில்களில் ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் கைங்கரியங்கள், பக்தா்கள் மற்றும் அா்ச்சகா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோரால் ஏற்பட்ட தோஷங்கள் களையப்படுவதாக ஐதீகம்.

இந்நிலையில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. முதலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திருமலை மடத்தின் சின்ன ஜீயா் கோவிந்த ராமானுஜா், அா்ச்சகா்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். அதன்பின் கலச ஸ்தாபனம், புண்ணியாவாசனம், சுத்தி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

இதையடுத்து, ஹோமம் வளா்க்கப்பட்டு அதன்முன் பல வண்ண நூலிழைகளாலான புனித மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த மாலைகள், கோயில் உற்சவா்கள், மூலவா்கள், கொடிமரம், பலிபீடம், கருவறை விமானம் உள்ளிட்டவற்றுக்கு சனிக்கிழமை அணிவிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மகாபூா்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவுபெற உள்ளது. பொது முடக்க விதிமுறைகள் காரணமாக பவித்ரோற்சவம் தனிமையில் நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.