தெய்வ தரிசனம்... வலிப்பு நோய் நீக்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர்!

வலிப்பு நோய் நீக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது.
maatruraivaratheeswarar
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர்
Updated on
5 min read

காவிரி வடகரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 67-வது தலமாக விளங்குவது திருப்பாச்சிலாச்சிராமம். இன்றைய நாளில் திருவாசி என்று அழைக்கப்படும் இத்தலத்தில், முயலகன் என்ற கொடிய வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கொல்லிமழவன் மகளுக்காக, திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அந்த நோயைப் போக்கிய சிறப்பு பெற்றது இந்தத் தலம்.

இறைவன் பெயர்: மாற்றுரைவரதீஸ்வரர், சமீவனேஸ்வரர்

இறைவி பெயர்: பாலாம்பிகை, பாலசுந்தரி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என இரண்டு பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில், சுமார் 14 கி.மீ. தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் அரை கி.மீ. செல்ல, இந்த ஆலயத்தை அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவாசி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்,
திருவாசி,
பிச்சாண்டார் கோவில் – வழி,
திருச்சி மாவட்டம் – 621 216.

ஆலய தொடர்புக்கு
மோகன் குருக்கள். தொலைப்பேசி: 0431 - 2908109, 98656 64870.

இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


வலிப்பு நோய் நீக்கிய வரலாறு

இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) எனும் தீராத நோய் இருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, பெருமான் அருள்புரியும் கோயிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை இத்தல இறைவனிடமே விட்டுவிட்டுச் சென்றான்.

ராஜ கோபுரம்
ராஜ கோபுரம்

அச்சமயத்தில், திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்துவிட்டு, மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்துக்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன், சம்பந்தரை அன்புடன் வரவேற்று, தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர், சிவனை வேண்டி "துணிவளர் திங்கள் துளங்கி விளங்க" எனும் பதிகம் பாடி இறைவனை வணங்கினார்.

பதிகத்தின் கடைசிப் பாடலான திருக்கடைக்காப்பு பாடி முடித்தவுடன், மழவன் மகள் முயலகன் நோயிலிருந்து விடுபட்டு மெல்ல எழுந்து தனது தந்தையிடம் சென்றாள். அவளது நோயை சிவபெருமான் ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில், இங்குள்ள நடராஜர் காலுக்குக் கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. அதற்குப் பதில், சர்ப்பத்தின் மீது பெருமான் நடனமாடுகிறார்.

நரம்புத் தளர்ச்சி, வாத நோய், வலிப்பு நோய், சர்ப்பதோஷம், மாதவிலக்குப் பிரச்னைகள் போன்றவை, இத்தல இறைவனை வழிபட்டு, திருஞானசம்பந்தர் இயற்றிய இத்தல பதிகத்தை நாள்தோறும் சிரத்தையுடன் ஓதி வந்தால் குணமாகும்.

இந்த ஆலயத்தில் உள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில், கொல்லிமழவன் மகளுக்கு சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்தப் பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது.

நால்வர் சன்னதி
நால்வர் சன்னதி

இத்தலத்துக்கு வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், சிவன் இருக்கிறாரா இல்லையா என்ற அர்த்தத்தில் இகழ்ந்து, "வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்" என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகத்தின் கடைசிப் பாடலில் "திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுகள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல. ஆதலின், அவற்றை இவர் பொறுத்துக்கொள்ளுதல் வேண்டும். அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று குறிப்பிடுகிறார்.

சிறிதுநேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், பொன் முடிப்பு தரவே, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள், தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக்கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்துவிட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்துக் காட்டியதையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக்காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த ஆலயம், ஐந்து நிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் விளங்குகிறது. இத்தலத்தில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். ராஜகோபுரத்தின் கீழே அதிகாரநந்தி, மனைவியுடன் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரக சந்நிதியில், சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி உள்ளனர்

துர்கை
துர்கை

திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டித் தவமிருந்து, அவரை மணந்தாள். இவள் இத்தலத்தில் பாலாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் இவளுக்கே முதல் பூஜை நடக்கும். அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அருகில் அன்னமாம்பொய்கை தீர்த்தம் இருக்கிறது.

அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். திருமணமாகாத பெண்கள், நல்ல வரன் அமையவும், திருமணத் தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் அழைத்து வந்து, அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தைப் பருகி வர, மூன்று வாரங்களுக்குள் பாலாரிஷ்டம் என்ற பாலதோஷம் உள்ள குழந்தைகள் தோஷம் விலகி பூரண குணமடைவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப்பட்ட இத்தலத்தில், வைகாசி விசாகத்தில் திருத்தேர் உலா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கே, சுவாமிக்கு தினசரி நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தொடர்ந்து 48 நாட்கள், இத்தலத்தில் உள்ள நடராசருக்கு அர்ச்சனை செய்துவந்தால், தீராத நோய்கள், வலிப்பு நோய், வயிற்று வலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறலாம். கோயிலில் உள்ள மாற்றுறைவரதேஸ்வரரை திங்கள்கிழமைகளில் இலுப்பை, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், பொருளாதார நிலை உயரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

இறைவன் கருவறை விமானம்
இறைவன் கருவறை விமானம்

வலிப்பு நோயை நீக்கியருளிய திருஞானசம்பந்தரின் இத்தல திருப்பதிகம்

துணி வளர் திங்கள் துளங்கி விளங்க

சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்

பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ

வாரிடமும் பலி தேர்வர்

அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலா

ஆசிராமத்து உறைகின்ற

மணி வளர் கண்டரோ மங்கையை வாட

மயல்செய்வதோ இவர் மாண்பே.

கலை புனை மான் உரி தோலுடை ஆடை கனல்

சுட ரால் இவர் கண்கள்

தலை அணி சென்னியர் தார் அணி மார்பர்

தம் அடிகள் இவர் என்ன

அலை புனல் பூம்பொழில் சூழ்ந்த் அமர்

பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

இலைபுனை வேலரோ ஏழையை வாட

இடர் செய்வதோ இவர் ஈடே.

வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை

வேண்டுவர் பூண்பது வெண்நூல்

நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக

நண்ணுவர் நம்மை நயந்து

மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சில்

ஆசிராமத்து உறைகின்ற

செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதை

செய்வதோ இவர் சீரே.

கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்கக்

கனல் தரு தூ மதிக்கண்ணி

புன மலர் மாலை அணிந்சு அழகாய புனிதர்

கொல் ஆம் இவர் என்ன

வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சிலா

ஆசிராமத்து உறைகின்ற

மனமலி மைந்தரோ மங்கையை வாட

மயல்செய்வதோ இவர் மாண்பே.

மாந்தர்தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி

வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை

முதிரவோர் வாய்மூரிபாடி

ஆந்தைவிழிச் சிறு பூதத்தர் பாச்சில்

ஆசிராமத்து உறைகின்ற

சாந்து அணி மார்பரோ தையலை வாடச்

சதுர்செய்வதோ இவர் சார்வே.

நீறுமெய் பூசி நிறைசடை தாழ நெற்றிக்

கண்ணால் உற்று நோக்கி

ஆறு அது சூடி ஆடரவு ஆட்டி ஐவிரல்

கோவண ஆடை

பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சில்

ஆசிராமத்து உறைகின்ற

ஏறு அது ஏறியல் ஏழையை வாட இடர்

செய்வதோ இவர் ஈடே.

பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை

வெண் நூல் புனை கொன்றை


கொங்கு இள மாலை புனைந்து அழகாய குழகர்

கொல் ஆம் இவர் என்ன

அங்கு இளமங்கை ஓர் பங்கினர்

பாச்சிலாச்சிராமத்து ஊறைகின்ற

சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்

சதிர்செய்வதோ இவர் சார்வே.

ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து

இராவணனை ஈடு அழித்து

மூவரிலும் முதலாய் நடுவாய

மூர்த்தியை அன்றி மொழியாள்

யாவர்களும் பரவும் எழில் பாச்சில்

ஆசிராமத்து உறைகின்ற

தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்

சிதைசெய்வதோ இவர் சேர்வே.

மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழ்

அது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை

என இவர் நின்றதும் அல்லால்

ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலா

ஆசிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ பைந்தொடி வாடப் பழிசெய்வதோ இவர் பண்பே.

நாணொடு கூடிய சாயினரேனும்

நகுவர் அவர் இருபோதும்

ஊணொடுகூடிய உட்கும் நகையால்

உரைகள் அவை கொள வேண்டா

ஆணொடு பெண்வடிவு ஆயினர் பாச்சில்

ஆச்சிராமத்து ஊறைகின்ற

பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப்

புனைசெய்வதோ இவர் பொற்பே.

அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க

ஆச்சிராமத்து உறைகின்ற‘

புகைமலி மாலை புனைந்து அழகாய

புனிதர் கொலாம் இவர் என்ன

நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி

நற்றமிழ் ஞானசம்பந்தன்

தகை மலி தண் தமிழ் கொண்டு இவை

ஏத்தச் சார் அகிலா வினைதானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com