ராகு - கேது தோஷம் போக்கும் நாகநாதசுவாமி கோவில், திருப்பாதாளீச்சரம் (பாமணி)

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 104-வது தலமாக இருக்கும் திருபாதாளீச்சரம், ஒரு சிறந்த பரிகாரத் தலம். தற்போது இது பாமணி என்று வழங்கப்படுகிறது.
Updated on
4 min read

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 104-வது தலமாக இருக்கும் திருபாதாளீச்சரம், ஒரு சிறந்த பரிகாரத் தலம். தற்போது இது பாமணி என்று வழங்கப்படுகிறது.
 

     இறைவன் பெயர் : நாகநாதசுவாமி, சர்ப்பபுரீசுவரர்
     இறைவி பெயர் : அமிர்தநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

மன்னார்குடிக்கு வடக்கே 3.5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மன்னார்குடியிலிருந்து பாமணிக்குச் செல்லும் சாலையில் சென்று, பாமணியை அடைந்து, அங்குள்ள உரத் தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். மன்னார்குடியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு

ஆலய முகவரி

அருள்மிகு சர்ப்பபுரீசுவரர் திருக்கோயில்,
பாமணி, பாமணி அஞ்சல்,
வழி மன்னார்குடி,
மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614 014.

இக்கோயில், தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

சுகல முனிவர் என்பவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் வளர்த்த காமதேனு தரும் பாலைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வந்தார். ஒரு சமயம், அவர் வளர்த்த காமதேனு பால் சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்குப் பால் குறைந்துவிடுமே என்று கோபித்து காமதேனுவை அடித்தார். அதுகண்டு வருந்திய காமதேனு, ஓடிச்சென்று லிங்கத்தை வழிபட்டதால் தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவதுபோல சிவலிங்கத்தின் மீது முட்டி ஓடி, இத்தலத்திலுள்ள பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது. அப்போது இறைவன் காட்சி தந்து பசுவை உயிர்ப்பித்தார். காமதேனு முட்டியபோது சுயம்பு லிங்க மூலத்திருமேனி மூன்று பிரிவாகப் பிளந்தது. சுயம்பு லிங்கமாதலால், மேற்புறம் சொர சொரப்பாக உள்ளது. முப்பிரிவாகப் பிளந்த லிங்கம், இப்போது செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.

பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டு, சர்ப்ப உடலுடனும், மனித முகத்துடனும் தனஞ்சய முனிவராக இத்தல இறைவனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கப் பெற்றார். ஆகவே, இத்தலம் பாதாளீச்சுரம் என்று பெயர் பெற்றது. பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று. இறைவன் கருவறையில் மூலவருக்கு இடதுபுறம் தனஞ்சய முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. நாகலிங்கப் பிரதிஷ்டையும் காணப்படுகிறது.
 

கோவில் அமைப்பு

இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள் புகுந்தால், வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது வாயிலில் 3 நிலை சிறிய கோபுரம் உள்ளது. கோபுரத்தின் முன்னே நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம் உள்ளன. கோபுர வாயிலின் இருபுறமும் துவார கணபதி, மற்றும் தண்டாயுதபாணி சிறிய சந்நிதியில் காட்சி தருகின்றனர். உட்கோபுர வாயிலைக் கடந்தால் நேரே புற்று மண்ணால் ஆன சுயம்பு லிங்கமாக மூலவர் நாகநாதர் தரிசனம் தருகிறார். கருவறை பிராகாரத்தில் சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி, சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவக்கிரகம், நால்வர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை உள்ளது.
 

மனித முகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது. அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவுக்கும் தலைவன் ஆதிசேஷன். வேறு எங்கும் காணமுடியாத இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு - கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவர்த்தி அடைவர் என்பது நம்பிக்கை. மேலும், திருமணத் தடை, புத்திர பாக்கியம், கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்த வேறுபாடுகள் நீங்கவும் இத்தல இறைவனை வழிபட்டால் பலன் கிடைக்கும். மண்ணால் அமையப்பெற்ற லிங்கங்களுக்கு பிற கோயில்களில் அபிஷேகம் செய்யமாட்டார்கள். ஆனால், இங்கு ஆதிசேஷன் புற்றுமண்ணால் அமைத்த நாகநாதசுவாமிக்கு அபிஷேகம் உண்டு என்பது தனிச் சிறப்பாகும். இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால், இது சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது.
 

முசுகந்த சக்கரவர்த்தி இத்தல இறைவனை பச்சை திராட்சையால் வழிபட்டு பேறுபெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. ஆகையால், இத்தலத்தில் இறைவனுக்கு பச்சை திராட்சை நிவேதனம் செய்வது ஒரு சிறப்பு அம்சமாகும். மேலும், பிப்பலாயணன் பூஜித்து தனது குஷ்டரோகம் நீங்கப்பெற்றதாகவும், பிரம்மதேவன் இங்கு பூஜித்து மாமரத்தை தல விருட்சமாக ஆக்கியதாகவும் தல வரலாறு குறிப்பிடுகிறது. மாம்பழச் சாறு கொண்டு இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
 

இத்தலத்தில் குருபகவான் சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள் இவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்தத் தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர். சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்துக்கு உரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.
 

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத்து அமர்ந்து அருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.    

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலினால் இனியான் உறைகோயில் பாதாளே.

நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரம்மூன்று எரித்து உகந்தான்
தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்து உகந்தான் உறைகோயில் பாதாளே.

அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
பாய்புனலும் உடையான் உறைகோயில் பாதாளே.

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்
விண்ணியல் மாமதியும் உடன் வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்காடு அரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே.

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம் புரம் மூன்று எரிசெய்து உரை வேதம் நான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
தொல்லை மலையெடுத்த அரக்கன் தலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்கமு அணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.

தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல் காண்பிலராய் அகன்றார்
பூ மருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பா மருவும் குணத்தான் உறைகோயில் பாதாளே.

காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு அன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன் தன் அடியே பரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண்டு இசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறைகோயில் பாதாளே.

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன் இயல் மாடம் மமல்கு புகலிந்நகர் மன்னன்
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.

சம்பந்தரின் பதிகம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்

சம்பந்தரின் பதிகம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com