மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புத்திர தோஷம் நீக்கும் கண்டியூர் பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோயில்

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இருக்கிறது, சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் உள்ள 127 தலங்களில் 12-ஆவது தலமான மங்களாம்பிகை சமேத பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில்.

News image
பிரம்மசிரக் கண்டீஸ்வரர் | மங்களாம்பிகை
Updated On :13 ஆகஸ்ட் 2021, 11:15 am

தினமணி


தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர் என்கிற கண்டியூர். இங்கிருப்பதுதான் சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் உள்ள 127 தலங்களில் 12-ஆவது தலமான மங்களாம்பிகை சமேத பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில்.

சிவபெருமானின் பராக்ரமங்களை விளக்கும் அட்டவீரட்ட தலங்களில்  முதலாவது தலம் இது. பிரம்மனின் தலையைக் கொய்த தலம் திருக்கண்டியூர்.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் பிரம்மன்,  திருமால், சிவன் ஆகிய மூவருக்கும் இத்தலத்தில்தான் தனிக்கோயில்கள் உள்ளன. எனவே, இத்தலத்துக்குத் திருமூர்த்தி தலம் என்ற பெயரும் உண்டு.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் என்பதே திருநாமம். பிரம்ம தேவனின் தலையைக் கொய்தவர் என்பதே இதன் பொருள். 

கோயில் தோற்றம்

கோயில் தோற்றம்

சிவபெருமானுக்கு ஈசானம்,  தத்புருஷம்,  அகோரம்,  வாமதேவம்,  ஸத்யோஜாதம் ஆகிய 5 திருமுகங்கள் இருப்பது போன்றே முற்காலத்தில் நான்முகனும் ஐந்து திருமுகங்களைப் பெற்றிருந்தான். எனவே, தானே படைப்புக் கடவுள் என செருக்குற்றான். அவன் ஆணவத்தை அடக்கச் சிவபெருமான், பைரவரைப் படைத்து அவரைப் பிரம்மாவின் மேல் ஏவி, அவரது ஐந்தாவது தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பைரவரும் தமது இடக்கை நக நுனியால் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தார். அந்தத் தலை அப்படியே அவரது கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது. 

இந்த கோயிலுக்கும் செல்லலாம் | பித்ரு, மாத்ருஹத்தி தோஷம் நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

எனவே, சிவபெருமான் பைரவரைப் பார்த்து, இத்தீவினை தீர நீ ஊர்தோறும் பிச்சையேற்க வேண்டும் எனக் கூற, பைரவரும் பல திருத்தலங்களுக்குச் சென்று பிச்சையேற்றுத் திரிந்தார். கடைசியில் இத்தலத்துக்கு வந்தபோது, பிரம்மனின் தலை, கையைவிட்டு அகன்றது. அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. 

முதல் பிரகாரம்

முதல் பிரகாரம்

நான்முகனும் தனது ஆணவம் அகன்று, தன் மனைவியான சரஸ்வதியுடன் இத்தலத்து இறைவனை வழிபட்டு மீண்டும் தமது படைப்புத் தொழிலைத் திரும்பப் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.

இத்தலத்தில் உள்ள இறைவன் - பிரம்ம சிரக்கண்டீஸ்வரர், வீரட்டேசர், பிரமநாதர், ஆதிவில்வநாதர் எனவும், இறைவி - மங்களாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். 

ராஜகோபுரம்

ராஜகோபுரம்

மகப்பேறு பெற்ற துரோணர்

துரோணர் தமக்கு மகப்பேறில்லாக் குறையைப் போக்க இங்குள்ள இறைவரைத் தும்பை மலரால் அர்ச்சித்து மகப்பேறு பெற்றார்.

அருள் பெற்ற சதாதப முனிவர்

சதாதப முனிவர் சிறந்த சிவபக்தர். நாள்தோறும் பல தலங்களை வணங்குவதுடன், பிரதோஷ நேரத்தில் திருக்காளத்தி சென்று காளத்தி நாதரை வழிபடுவதை நியமமாகக் கொண்டிருந்தார். முனிவர் திருக்கண்டியூர் வந்தபோது காளத்தி செல்லமுடியாமல் தடை ஏற்பட்டுவிட்டது. அதனால், மிக்க வருத்தம் அடைந்து நெருப்பில் வீழ்ந்து தன் உயிரைப் போக்கிக்கொள்ள முற்பட்டார். காளத்தி இறைவன் வில்வ மரத்தில் தானும் உமையுமாய் காட்சி வழங்கி முனிவருக்கு அருள்புரிந்தார். எனவே, இத்தலத்துக்கு ஆதி வில்வாரண்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் வில்வமரம்தான் தல விருட்சம். 

இரண்டாம் பிரகாரம்

இரண்டாம் பிரகாரம்

சித்ரவஜனுக்கு கிடைத்த அருள்

சித்ரவஜன் என்றொரு கந்தர்வன் ஒரு நாள் அழகிய பூங்காவில் தனது மனைவி குணவதியுடன் மகிழ்ந்திருந்தான். அப்போது, அவ்வழியே சென்ற தேவலர் என்ற முனிவர் அக்காட்சியைக் காண சகியாது, அவர்களைச் சபித்தார். அதனால், சித்ரவஜன் அசூரனானான். குணவதி பலாச மரமானாள். அவர்கள் சாப விமோசனம் கோரினர். அகத்தியரின் சீடரான சதாதபர் முனிவரால் சாபம் நீங்கும் என்றார் தேவலர். அசுரனான சித்ரவஜனும் பலாச மரமான குணவதியும் காவிரியின் தென் கரையில் வசித்து வந்தனர். 

தட்சிணாமூர்த்தி சன்னதி

தட்சிணாமூர்த்தி சன்னதி

ஒரு முறை சனி பிரதோஷத்தில் திருக்காளத்தி நாதரை வழிபடச் சென்ற சதாதபர் கண்டியூர் வழியே செல்லும்போது பேய் மழை பிடித்துக் கொண்டது. அதனால், அவர் பலாச மரத்தடியில் தங்கினார். அவ்வுருவில் இருந்த குணவதி மீண்டும் பெண் வடிவம் பெற்றார். ராட்சனான சித்ரவஜனின் மீது சதாதபர் கமண்டல நீரைத் தெளித்ததும் அவர் கந்தர்வனாக மாறினான். இருவரும் சாப விமோசனம் பெற்றனர். 

இந்த கோயிலுக்கும் செல்லலாம் | கண்நோய்களைத் தீர்க்கும் திருக்காரவாசல் கண்ணாயிர நாதர் கோயில்

தக்கன், பகீரதன் அருள் பெற்றது

தக்கன் சிவபெருமானை அவமதித்த குற்றம் தீர இத்தலத்தில் இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். பகீரதன் கண்டியூர் வீரட்டேசுவரை வணங்கி அருள்பெற்று கங்கையைப் பூமிக்கு கொண்டு வந்தான்.

சதாதப முனிவர், காளத்தி நாதர்

முதல் பிரகாரத்தில் இருந்து கருவறைக்குச் செல்லும் முன் இடப்புறம் சப்தஸ்தான லிங்கங்களையும், பஞ்சபூத லிங்கங்களையும், வலப்புறம் சதாதப முனிவரையும், காளத்திநாதரையும் சூரியனையும் வழிபடலாம். 

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி


திருக்கோயில் அமைப்பு

இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து திருநிலைகளை உடையது. இருபுறமும் கருங்கல் துவாரபாலகர்கள் உள்ளனர். திருக்கோயில் மேற்கு நோக்கி காணப்படுகிறது. உள்ளே தண்டபாணி மண்டபம், வெüவால் நெத்தி மண்டபம் உள்ளது. இதில் சப்தஸ்தான கண்ணாடி பல்லக்கு வைக்கப்பட்டுள்ளது. எதிரில் பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவையும் காணப்படுகின்றன. 

கோயில் நுழைவாயில்

கோயில் நுழைவாயில்

இரண்டாவது கோபுரமான அணுக்கண் திருவாயிலின் மீது அம்மையப்பர் திருக்கயிலாலய அமர்ந்து காட்சி தர பிரம்மா, சரஸ்வதி இருவரும் வணங்கி நிற்பது போன்று சுதை வடிவம் உள்ளது.

விநாயகர் சன்னதி

இரண்டாவது கோபுரத்துக்குள் நுழைவதற்கு முன் வலப்புறம் தல விருட்சமான (ஆதி வில்வராண்யம்) வில்வ மரத்தையும், அதனடியில் வீற்றிருக்கும் ராஜகணபதி அருள்பாலிக்கிறார். 

ராஜகணபதி 

ராஜகணபதி 

பிரம்ம சிரக்கண்டீசுவரர் சன்னதி

இக்கோயிலில் இறைவன் சன்னதி, மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளைக் கொண்டது. கருவறையில் இறைவன் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபத்தின் நுழைவுவாயிலில் இரு புறமும் துவாரக பாலகர்களுக்குப் பதிலாக அக்கமாலை ஏந்திய ஞானஸ்கந்தரும், தாமரை மொட்டு ஏந்திய வீரஸ்கந்தரும் இருப்பது விசேஷம். இங்கு மாசி மாதம் 13, 14, 15-ம் தேதிகளில் மாலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மேல் விழுகிறது. இதனால், இந்த மூன்று நாட்களில் வீரட்டேஸ்வரரை சூரியன் பூஜை செய்து வணங்குவதாகக் கூறப்படுகிறது. மங்களாம்பிகை சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. 

பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் சன்னதி முகப்பு

பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் சன்னதி முகப்பு

இறைவன் சன்னதிக்கு அருகிலேயே வடக்குப் பிரகாரத்தில் கிழக்கு திசை நோக்கி நான்முகனின் பெரிய திருஉருவமும் அவரது வலப்பக்கத்தில் சரஸ்வதி தேவியின் திருஉருவமும் உள்ளன. நான்முகனின் நாற்கரங்களில் ஒன்றில் தாமரை மலரும். மற்றொன்றில் உருத்திராட்ச மாலையும் உள்ளது. பிரம்மா சன்னதி அருகே வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சன்னதி அமைந்துள்ளது.

மங்களாம்பிகை சன்னதி

அன்னை மங்களாம்பிகை தெற்கு நோக்கி அமைதி தவழும் முகத்துடன் அருள்பாலிக்கின்றாள். 

மங்களாம்பிகை சன்னதி முகப்பு

மங்களாம்பிகை சன்னதி முகப்பு

பிரம்மா, சரசுவதி சன்னதி

இறைவன் சன்னதிக்கு அருகிலேயே வடக்கு பிரகாரத்தில் கிழக்கு திசை நோக்கி நான்முகனின் பெரிய திருவுருவம் உள்ளது. நான்முகனின் நாற்கரங்களில் ஒன்றில் தாமரை மலரும்; மற்றொன்றில் உருத்திராட்ச மாலையும் உண்டு. 

சரஸ்வதியுடன் பிரம்மா

சரஸ்வதியுடன் பிரம்மா

பிரம்மா சன்னதி அருகே வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சன்னதி உள்ளது. முதல் பிரகாரத்தின் கீழ்புறத்தில் தெற்கு நோக்கி பைரவரும், இதர பரிகார தேவதைகளும் உள்ளனர்.

கீழ்புறத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீசுவரர் சிற்பம் அற்புதமான கலையம்சம் கொண்டது. இதர கோயில்களில் உள்ளதுபோன்று நின்ற கோலத்தில் அல்லாமல் ரிஷபத்தின் மீது ஒரு கையை ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானது. ஆண் பாதியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு ஏந்தியிருக்க, பெண் பாதியில் சேலை அணிந்த காலைக் குத்திட்டு உட்கார்ந்து அதன் மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றித் தலையைச் சுற்றி சாய்ந்து காட்சிக் கொடுக்கும் அற்புதமான ஒன்று. 

இரண்டாவது பிரகாரத்தின் தென் பகுதியில் காளியம்மன் கோயிலும், அதையொட்டி நந்தவனமும் அமைந்துள்ளன. 

பொற்காளியம்மன் சன்னதி

பொற்காளியம்மன் சன்னதி

வரலாற்றுத் தகவல்கள்

இக்கோயில் பல்லவர் காலக் கற்றளி. கருவறையின் வடபுறம் நிருபதுங்க பல்லவனின் சாசனம் உள்ளது. இது, மேற்கு நோக்கிய சிவத்தலமாக விளங்குவதால், இதன் பிரதான கோபுரம் இரண்டாம் பிரகார மதிலின் மேற்கு திசையில் 5 நிலைகளுடன் அமைந்துள்ளது. மேலும், சோழ மன்னர்களான மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன், முதலாம் ராசேந்திரசோழன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் உள்ளன. 

பொற்காளியம்மன்

பொற்காளியம்மன்


திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. மேலும், திருவையாறு சப்தஸ்தானத் தலங்களில் இது ஐந்தாவது தலம். 

இக்கோயிலில் சித்திரை மாதத்தில் சப்ஸ்தானம், வைகாசியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம் போன்றவை பிரதான திருவிழாக்களாக நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் காலை சந்தி 9 - 9.30; உச்சிக்காலம் பகல் 11.30 - 12; சாயரட்சை மாலை 6 - 6.30; அர்த்தஜாமம் 8 - 8.30 என பூஜைகள் நடைபெறுகின்றன. 

சண்டிகேஸ்வரர்

சண்டிகேஸ்வரர்

திருமணம் ஆகாமல் தடைப்படும் ஆண், பெண் இரு பாலரும் இங்கு வந்து பரிகாரம் செய்து நான்முகனை வழிபட திருமணம் கைகூடுகிறது என்பது நம்பிக்கை. மேலும் பிரம்மஹத்தி தோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம் போன்றவை இத்தலத்து இறைவனை வழிபட நீங்கும். 

நடை திறப்பு நேரம்

இக்கோயில் நாள்தோறும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும். 

துர்க்கை சன்னதி

துர்க்கை சன்னதி



போக்குவரத்து வசதி

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி வழித்தடப் பேருந்துகளில் ஏறி கண்டியூரில் இறங்கிக் கொள்ளலாம். வெளியூர்களிலிருந்து ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூரில் இறங்கிப் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலம் செல்லலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி தஞ்சாவூர் வழியாகச் சென்றடையலாம்.

முகவரி

நிர்வாக அலுவலர்,
அருள்மிகு பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில்
கண்டியூர், திருவையாறு வட்டம், 
தஞ்சாவூர் மாவட்டம்-613 202.

தொடர்புக்கு: விக்னேஷ் குருக்கள் - 94435 61731.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.