"தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே" என்ற பாடல் மூலம், தம்மை துதிப்போருக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் சிவலோகம் ஆளும் பதமும் அருளும் தலம் என சுந்தரமூர்த்தி சுவாமிகளால் போற்றப் பெற்றது நாகை மாவட்டம், திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்.
கால வரையறைக்கு அப்பாற்பட்ட தொன்மையான திருக்கோயில்களில் ஒன்று, வாஸ்து தலம், சுகப்பிரசவம் அருளும் தலம், தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்ற கோயில், தேவாரப் பதிகம் பெற்ற இரு கோயில்களை ஒரே வளாகத்தில் கொண்ட மூன்று கோயில்களில் ஒன்று, முக்கால பாவங்களுக்கும் விமோசனம் அளிக்கும் ஒரே தலம், சமயக்குரவர்களில் ஒருவரான அப்பர் ஐக்கியமான தலம் என அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்டது இக்கோயில்.
இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்
கோயிலின் சிறப்புகள்
அகழ் சூழ் அழகு மிகு இக்கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்மிகு அக்னீஸ்வரர் திருப்பெயருடன் காட்சியளிக்கிறார். மூலவருக்கு அருள்மிகு சரன்யபுரீசுவரர், புன்னகவனநாதர், கோணப்பிரான் என்ற திருப்பெயர்களும் விளங்குகின்றன. அம்பாள் அருள்மிகு கருந்தார்குழலி, சூளிகாம்பாள் ஆகிய திருப்பெயர்களில் அருளுகிறார்.
பாப விமோசனத்துக்காக இத்தலத்தில் வழிபாடு மேற்கொண்ட அக்னி பகவானுக்கு இறைவன் சிவபெருமான் அருள்மிகு சந்திரசேகரராக காட்சியளித்தத் தலம் இது. இதனால், இத்தலத்து இறைவனுக்கு அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி என்ற திருப்பெயர் விளங்குகிறது. இதையொட்டி, இத்தலத்தில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் வைகாசி பிரம்மோத்ஸவத்தில், அருள்மிகு சந்திரசேகரர் அக்னி பகவானுக்குக் காட்சியளிக்கும் ஐதீக விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோயிலின் பிராகாரத்தில் ஸ்ரீ அக்னி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
வாஸ்து பரிகாரத் தலம்
சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர் பங்குனித் திருவிழாவில் பக்தர்களுக்கு அமுது படைக்கப் பொருள் இல்லையே என்ற வருத்தத்துடன் திருப்புகலூர் திருத்தலத்துக்கு வந்துள்ளார். அப்போது, கோயில் நடை அடைக்கப்பட்டிருந்ததால், கோயில் வாசலில் இருந்த செங்கற்களை தலையணையாக வைத்து கோயில் வாசலிலேயே அவர் படுத்துறங்கியுள்ளார். உறக்கம் தெளிந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் கண் விழித்தபோது, திருப்புகலூர் இறைவனின் திருவருளால், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தலையணையாக வைத்திருந்த செங்கற்கள் அனைத்தும் பொன் கற்களாக மாறியிருந்ததாம்.
செங்கற்களை பொன் கற்களாக மாற்றிய தலம் என்பதாலும், பிரம்மன், அக்னி பகவான், சனி பகவான் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றத் தலம் என்பதாலும் இத்தலம் வாஸ்து பரிகாரத் தலமாக விளங்குகிறது.
வாஸ்து தோஷம் நீங்க, இத்தலத்தில் 3 செங்கற்களை வைத்து வாஸ்து தோஷ நிவர்த்தி பூஜை செய்து, அந்தக் கற்களை வீட்டின் கன்னி மூலை, குபேர மூலை மற்றும் ஈசான மூலையில் வைத்து வழிபாடு செய்தால் வாஸ்துதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல புது வீடு கட்டுபவர்கள் இத்தலத்தில் செங்கற்களை வைத்து வாஸ்து பூஜை செய்து, அந்தக் கற்களை வைத்து வீடு கட்டும் பணியை மேற்கொண்டால், வீடு கட்டும் பணி தடைபடாமல் நடைபெறும் என்பதும் நம்பிக்கை.
பாணாசுரன் என்ற அசுரன், சிவபக்தையான தன் தாய் மாதினியாரின் சிவ பூஜைக்கு, அழகு மிகுந்த சிவலிங்கங்களைக் கொண்டுச் சேர்ப்பது வழக்கம். அந்த வகையில், இத்தலத்து சுயம்பு மூர்த்தியை பாணாசுரன் பெயர்த்துச் செல்ல முற்பட சிவலிங்க திருமேனியை அவனால் அசைக்கக் கூட முடியாத நிலை இருந்துள்ளது. அதனால், பூமியுடன் சிவலிங்கத்தை பெயர்த்துச் செல்லத் திட்டமிட்ட அசுரன், கோயின் நான்கு புறங்களையும் சுற்றி அகழ் எடுத்துள்ளான். அப்போது, அகழ் அனைத்தும் நீர் ஊற்றால் நிரம்பியுள்ளது. இதனால், செய்தவறியா நிலைக்குள்ளான பாணாசுரன், தன் தாயின் சிவ பூஜைக்கு தன்னால் உதவ இயலவில்லையே எனக் கருதி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டுள்ளான்.
அப்போது, அசரீரி ஒன்றெழுந்து "உமது தாயாரின் சிவபூஜைக்கு தாமே எழுந்தருளுவோம்" என அருளியுள்ளது. 108 சிவலிங்கங்களில் தங்களை அறிவது எப்படி? என அசுரன் வினவியுள்ளான். அதற்கு, "யாம் புன்னை பூ சூடி வலப்புறம் சாய்ந்தருள்வோம்" என இறைவன் அசரீரியாக அருளி, அதன்படி காட்சியளித்தாராம். அதனால், இத்தலத்து இறைவனுக்கு கோணபிரான் என்ற திருப்பெயரும் விளங்குகிறது.
கோயிலின் நான்கு புறமும் அகழியைக் கொண்ட இக்கோயிலின் தென்புறம் உள்ள தீர்த்தம் மட்டும் அக்னி தீர்த்தமாகக் குறிப்பிடப்படுகிறது. மற்ற 3 புறங்களிலும் உள்ள தீர்த்தங்களும் அசுரனின் பெயரால் பாண தீர்த்தமாகவே குறிப்பிடப்படுகிறது. புன்னைமரம் தலவிருட்சமாக உள்ளது.
திருநள்ளாறுக்கு முன்பாக வழிபட வேண்டிய தலம்
சனி பகவானால் பீடிக்கப்பட்டிருந்த நள மகாராஜா திருநள்ளாறு அருள்மிகு தர்பாரண்யேசுவரர் திருக்கோயிலுக்குச் செல்லும் முன்பாக, இத்தலத்துக்கு வந்துள்ளார். இங்கு, பாண தீர்த்தத்தில் அவர் மூழ்கி எழுந்தபோது, "இங்கிருந்து 7 கல் தொலைவில் திருநள்ளாறில் உம்மிடம் இருந்து விலகிக் கொள்கிறேன். உமக்கு இனி அனைத்தும் நன்மையே நடக்கும் " என்று சனி பகவான் அசரீரியாக அருளினாராம்.
இந்தக் கோயிலையும் வலம் வரலாம்: சனி தோஷம் நீக்கும் நள்ளாற்று நாயகன் - திருநள்ளாறு திருக்கோவில்
அதன்படி, இக்கோயிலின் பிராகாரத்தின் வடப்புறத்தில் சனீஸ்வர பகவானுக்கும், நள மகராஜாவுக்கும் தனி சன்னிதி உள்ளது. இங்குள்ள சனீஸ்வர பகவான் பொங்கு சனீஸ்வரராக, அனுக்ரக மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். எனவே, திருநள்ளாறுக்குச் செல்லும் முன்பாக இத்தலத்தில் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது.
முக்கால விமோசன தலம்
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்துக்கும் பாவ விமோசனமும், நன்மையும் அருளும் பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் என மூன்று மூர்த்திகளும் தனித்தனி சன்னதிக் கொண்டு அருளும் தலமாக விளங்குகிறது இத்தலம்.
ஸ்ரீபூதேஸ்வரர்: கோயிலின் முதல் பிராகாரத்தின் தென்புறம் தனி சன்னதியில் அருளும் அருள்மிகு பூதேஸ்வரர், கடந்த கால பாவங்களைப் போக்கி அருளக் கூடியவராக உள்ளார். கடந்த ஜென்ம பாவங்கள் மற்றும் பித்ரு சாப நிவர்த்திக்கு இங்கு வழிபடுவது சிறப்பு. அமாவாசை நாளில் பூதேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் பித்ரு சாப தோஷ நிவர்த்தி கிட்டும்.
இந்தக் கோயிலுக்கும் சென்றுவரலாம்: குழந்தைப்பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்
ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்: மூலவரின் வடப்புறம் தனி சன்னதிக் கொண்டு காட்சியளிக்கும் அருள்மிகு வர்த்தமானேசுவர், நிகழ்காலத்தில் நாம் அறியாமல் செய்த பாவங்களைப் போக்கி நன்மை அருளுபவராக விளங்குகிறார். வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இவருக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு மேற்கொள்வது சிறப்பான பலன்களை அளிக்கும். இச்சன்னதியின் வடப்புறம் அருள்மிகு மனோன்மணி அன்னை காட்சியளிக்கிறார். அருள்மிகு வர்த்தமானேசுவரர் சுவாமியை சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார்.
ஸ்ரீபவிஷ்யேசுவரர் : முதல் பிராகாரத்தின் வடப்புறத்தில் தனி சன்னதிக் கொண்டு மேற்கு நோக்கி அருளும் அருள்மிகு பவிஷ்யேசுவரர் வருங்காலத்தை வளமாக்கி அருள்பவராக காட்சியளிக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அருளுபவராக இவர் குறிப்பிடப்படுகிறார். அவரவர் ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீபவிஷ்யேசுவரரை வழிபடுவது சிறப்பு.
சதய நட்சத்திர வழிபாட்டுத் தலம்
இத்தலம் சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய முக்கிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. சதயம், ஆயில்யம், தனுசு ஆகிய ராசிகளுக்கான பரிகாரத் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. அருள்மிகு அக்னீஸ்வர சுவாமியை சதய நட்சத்திர நாளில் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்
அப்பர் ஐக்கிய தலம்
சமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமான், தனது 81 ஆவது வயதில் இத்தலத்துக்கு வந்து உழவாரப் பணிகளை மேற்கொண்டு, பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசைகளுக்கு அப்பால் நின்று முக்தி அடைந்தார் என்பது இத்தலத்து வரலாறு. இதன்படி, இக்கோயிலில் அப்பர் ஐக்கியமான ஐதீக திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் உத்ஸவமாக நடைபெறுகிறது.
அப்பர் பெருமான் சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறியது, உழவாரப் படையின் உயர்வு, அரம்பையர் நடனம், ஐக்கிய காட்சி என அப்பர் ஐக்கியமான ஐதீக நிகழ்வுகள் அனைத்தையும் நினைவுக்கூரும் வகையில் இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக சித்திரை சதய நட்சத்திர நாளின் நான்காம் சாமத்தில் அப்பர் பெருமான் ஜோதியாக இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்வு, பக்தர்கள் உள்ளம் உருகி, கண்ணீர் மல்கி, நெகிழ்வுடன் தரிசிக்கும் வகையில் நடைபெறும். இங்கு, அப்பர் பெருமானுக்கு முதல் பிராகாரத்தில் தனி சன்னதி உள்ளது.
முருகநாயனார் அவதார தலம்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான முருகநாயனார் அவதரித்த தலம் இது.
அதிகாலை பொழுதில் மலர்களைப் பறித்து, உயர்ந்த மலர்களை மாலைகளாகத் தொடுத்து இத்தலத்தில் அருளும் அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு அணிவித்து, சிவபூஜை செய்து மகிந்து வந்தவர் இவர். இத்தலத்துக்கு திருஞானம்சம்பந்தர் பெருமான் வருகை தந்தபோது அவருடன் அளவளாவி மகிழ்ந்து, நண்பரானவர். பின்னர், திருநல்லூரில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் பெருமணத்தில் பங்கேற்று, அவருடன் இறை ஜோதியில் ஐக்கியமானவர்களில் முருகநாயனாரும் ஒருவர். இவர், அருள்மிகு வர்த்தமானேசுவரர் சன்னதியில் சுவாமிக்கு எதிரே கரம் கூப்பிய நிலையில் காட்சியளிக்கிறார்.
பிரசவ இறப்பு இல்லாத தலம்
இத்தலத்து அம்பாள் அருள்மிகு சூளிகாம்பாள் ஏழைப் பெண்ணுக்கு மகப்பேறு (சூல்) பார்த்து அருளிய பெருந்தகையாள் எனக் குறிப்பிடப்படுகிறது. திருப்புகலூர் அருகே உள்ள போலகம் என்ற கிராமத்தில் ஒரு ஏழைப் பெண் பிரசவ வலியால் வேதனைப்பட்டுள்ளார். அன்னை சூளிகாம்பாள் அப்பெண்ணின் தாயார் ரூபத்தில் அங்குச் சென்று மகப்பேறு பார்த்தருளியுள்ளார்.
இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: எண்ணிய முடிக்கும் கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சனேயர் கோயில்
மறுநாள் அவரது தாய் ஊருக்குத் திரும்பிய போது, மகளுக்கு யார் பிரசவம் பார்த்தது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து கோயில் வரை கிடந்த வெள்ளை சேலையின் துண்டுகள், மகப்பேறு பார்த்துச் சென்றது அம்பாள் தான் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. இதனால், பரவசமடைந்த அப்பகுதி மக்கள் அம்பாளுக்கு மருத்துவ காணியாக ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளனர். அந்த நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டே இன்றளவும் இத்தலத்து அம்பாளுக்கு இரவு நிவேதனம் நடைபெறுகிறது.
அம்பாள் மருத்துவச்சியாக வந்து மகப்பேறு பார்த்தவர் என்பதால், தினமும் சாயரட்சை பூஜையின் போது அம்பாளுக்கு வெள்ளை சாற்றி வழிபாடு நடத்தப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு வேறு எந்தத் தலத்திலும் இல்லை என்பதும், அம்பாளின் திருவருளால் இப்பகுதியில் மகப்பேறு இறப்பு இல்லை என்பதும் ஆன்மிகச் சிறப்பு.
திருமணமாகாத பெண்கள், அம்பாளுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபட்டால் திருணம் கைகூடுகிறது. கர்ப்பிணிகள் இத்தலத்து அம்பாளை வழிபட்டு தமக்கு சுகப்பிரசவம் ஆகினால் வெள்ளைப் புடவை சாற்றி வழிபடுவதாக பிரார்த்தித்தால், சுகப்பிரசவம் உறுதியாகிறது. சுகப்பிரசவமான பெண்கள் நேர்த்திக் கடனாக வெள்ளைப் புடவை சாற்றி வழிபாடு நடத்துவது, அம்பாளின் அனுக்கிரகத்துக்குச் சான்று என்கின்றனர் பக்தர்கள்.
விழாக்கள்
இங்கு சித்திரை மாதத்தில் 10 நாள்கள் உத்ஸவமாக நடைபெறும் அப்பர் ஐதீக விழா, அக்னி பகவானுக்கு அருள்மிகு சந்திரசேகரர் காட்சியளித்த ஐதீகத்தையொட்டி நடைபெறும் வைகாசி பிரமோத்ஸவம் ஆகியன இத்தலத்தின் முக்கிய விழாக்களாக, சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கோயில் நிர்வாகம்
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன நிர்வாகத்துக்கு உள்பட்டது இக்கோயில். வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்து அருளுகிறார். இக்கோயில், முதல்நிலை கோயில் என்பதால் முதல்நிலை அதிகாரி ஒருவர் அரசால் நியமிக்கப்பட்டு, பொருளாளராகப் பணியாற்றி வருகிறார்.
எண்ணற்ற பரிகாரங்களுக்கான ஒரே தலமாகவும், அளப்பரிய ஆன்மிகப் பெருமைகளைக் கொண்டதாகவும் உள்ள இத்தலம், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து திட்டச்சேரி, திருமருகல் வழியில் 25 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவாரூரிலிருந்து வடக்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து தெற்கே 33 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
போக்குவரத்து வசதி
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டப் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
ரயிலில் வருவோர் சன்னாநல்லூர், நன்னிலம் ரயில்நிலையங்களில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் இத்திருக்கோயிலை அடையலாம்.
விமானத்தில் வருவோர், திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து சாலை வழியாக கோயிலை வந்தடையலாம். திருச்சி ரயில் நிலையத்திலிருந்து ஒரு சில ரயில்களும் இயக்கப்படுகின்றன.
கோயில் முகவரி
அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில்,
திருப்புகலூர் அஞ்சல்,
நாகை வட்டம்,
நாகை மாவட்டம் - 609704.
தொடர்புக்கு - 9443588339
படங்கள்: எச். ஜஸ்வந்த் குமார்.