ரதிக்கு பதி அளித்தது, சிவன முனிவரின் சாபத்தால் பொலிவிழந்த இந்திரன் மீண்டும் பொலிவுபெற்றது, அக்னித் தேவனின் சாபம் நீக்கியது போன்ற சிறப்புகளுடன், பித்ரு தோஷம் நீக்கும் மற்றும் குழந்தைப்பேறு அருளும் திருக்கோயிலாக விளங்குகிறது பூவாளூர் அருள்மிகு குங்கும சௌந்தரி அம்மன் உடனுறை திருமூலநாதர் திருக்கோயில்.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளுரில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் பூவாளூர் திருப்புகழ் பாடியிருக்கிறார். இதுபோல, ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கோயில் இது.
தனது கணவர் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதிதேவி தவம் செய்த திருக்கோயிலான பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயிலுக்கு மன்மதபுரம் என்றொரு பெயரும் உண்டு. பண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இத்திருக்கோயில் இருந்ததால், பூவாளியூர் என்றழைக்கப்பட்டதாகவும், பின்னர் அது மருவி பூவாளூர் என்றானதாகவும் கூறப்படுகிறது.
மன்மதனுக்கு உயிர் கொடுத்த திருக்கோயில்
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அசுரர்கள் ஓயவில்லை. தேவர்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தனர். தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் நேரடியாக சிவபெருமானிடம் சென்று, தங்களைக் காப்பாற்றுமாறு முறையிட்டனர்.
இதையும் படிக்க | வாஸ்து தோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்
"முருகன் வருவார், காப்பாற்றுவார்' எனக் கூறிவிட்டு, மீண்டும் தவத்தில் அமர்ந்துவிட்டார் சிவபெருமான். ஆண்டுகள் பல கடந்தும் அசுரர்களின் தொல்லை தீரவில்லை. முருகனும் வந்தபாடில்லை. சிவபெருமானின் தவமும் கலையவில்லை.
தேவர்கள் மன்மதனிடம் சென்று, காமக்கணை வீசி சிவனது தவத்தைக் கலையச் செய்யும்படி கூறினர். மன்மதன் இதற்கு மறுத்துவிட்டான். "மறுத்தால் நாங்கள் சாபம் விடுவோம்" என தேவர்கள் பயமுறுத்தவே, பயந்த மன்மதன் சிவபெருமான் மேல் மன்மத பாணத்தை ஏவினான்.
கிழக்கு நோக்கியிருந்த சிவபெருமான், மேற்கு நோக்கித் திரும்ப, அவரின் நெற்றிக்கண் பார்வைபட்டு மன்மதன் எரிந்துபோனான். இந்த நிகழ்வு நடைபெற்ற திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அதன் பின்னர் தனது கணவரை இழந்த ரதிதேவி அழுதாள், கண்ணீர்விட்டுக் கதறினாள். ஆனால் பலனில்லை. உடனடியாக சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினாள். மன்மதன் இல்லாததால் பிரம்மாவும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் தவித்துவந்தார்.
தனது மானசீக புதல்வரை இழந்த மகாவிஷ்ணுவும் வேதனையடைந்தார். அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். இதனால் மனம் இளகிய சிவபெருமான், தவம் செய்துகொண்டிருந்த ரதியின் முன்பு தோன்றினார்.
கண்நோய் இருப்போர் தரிசிக்க.. கண்நோய்களைத் தீர்க்கும் திருக்காரவாசல் கண்ணாயிர நாதர் கோயில்
"உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான். மற்றவர்களின் கண்களுக்கு அரூபமாகத் தெரிவான்'' என்று ரதியிடம் கூறிய சிவபெருமான், மன்மதனை உயிர்பெற்று எழச் செய்த இடம், பூவாளூர் திருமூலநாதர் உடனுறை குங்கும சௌந்தரி அம்மன் திருக்கோயிலில்தான்.
இறைவன் திருமூலநாதர்
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் திருமூலநாதர் கிழக்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார். கருவறையில் அமைந்துள்ள இறைவன் திருமூலநாதர் லிங்கத் திருமேனியில் காட்சியளிக்கிறார். ரதிதேவியின் கடுந்தவத்தால் மன்மதனுக்கு உயிர்கொடுத்த திருக்கோயில் என்பதால் இக்கோயிலில் எழுந்தருளிய சிவன் (திருமூலநாதர்) சிறப்புப் பெற்று விளங்குகிறார்.
மேலும் தவத்தில் சிறந்த சிவன முனிவரின் சாபத்தால் பொலிவிழந்த இந்திரன், அவரது வழிகாட்டலின்படி பூவாளூர் பெருமானை (திருமூலநாதர்) வழிபட்டு மீண்டும் பொலிவுபெற்றார். அதுபோல, அக்னித் தேவனும் இத்திருக்கோயில் பெருமானை வழிபட்டு, தனது சாபம் நீங்கப் பெற்றார்.
தல புராணம்
ஏழு முனிவர்களின் புதல்வர்களாகிய எழுபது முனிவர்கள் சைவ, சாத்திர நுட்பங்கள் தமக்கு அருளுமாறு பெருமானை வேண்டி, சைவ சாத்திர யாகம் செய்தனர். வேள்விக்கு மகிழ்ந்த பெருமான் எழுந்தருளி, எழுபதின்மர் உள்ளிட்ட பிரம்மன் முதலியோருக்கு சைவ, சாஸ்திர நுட்பங்களை அருளியது இத்திருக்கோயிலில்தான் என்கிறது தல புராணம்.
இணைந்து அமைந்த சன்னதிகள்
பொதுவாக சைவ, வைணவத் திருக்கோயில்களில் இறைவன், இறைவி சன்னதிகள் தனித்தனியே அமைந்திருப்பதுதான் வழக்கம். ஆனால், பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயில் இதிலிருந்து மாறுபட்டு அமைந்திருக்கிறது.
இக்கோயிலில் இறைவன் கல்யாண கோலத்தில் இருப்பதால், இறைவியின் சன்னதியும் இறைவன் சன்னதிக்கு இடதுபுறத்திலேயே அமைந்துள்ளது. இறைவன் - இறைவியின் சன்னதிகள் இணைந்து அமைந்துள்ளதால், பிரகாரம் வலம் வரும்போது, இரண்டு சன்னதிகளையும் சேர்த்தேதான் சுற்றியாக வேண்டும். தனியே சுற்ற இயலாது.
இறைவி குங்கும சௌந்தரி அம்மன்
திருமூலநாதர் சன்னதிக்கு அருகிலேயே இறைவி குங்கும சௌந்தரி அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளி, கிழக்குத் திசை நோக்கி காட்சியளிக்கிறார் அம்மன்.
திருமணமாகாத கன்னியர்கள் இக்கோயில் இறைவி குங்கும சௌந்தரிக்கு குங்கும அர்ச்சனை செய்து, அந்தக் குங்குமத்தைத் தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டால் விரைந்து திருமணம் நடைபெறும் என்பது பலனடைந்த பக்தர்களின் கூற்றாகும். மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், குங்கும சௌந்தரி அம்மன் சன்னதியில் தொட்டில் வாங்கிக் கட்டினால், அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்தக் கோயிலைப் பற்றி அறிய.. நட்சத்திர, கிரக தோஷங்கள் நீக்கும் நகர் அப்ரதீசுவரர் திருக்கோயில்
திருக்கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலின் முன் முகப்பைத் தாண்டியதும், அகண்ட மண்டபத்தில் கொடிமர விநாயகர் எழுந்தருளியுள்ளார். கொடிமரம், பலிபீடத்தைத் தொடர்ந்து, நந்தி சன்னதி அமைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கலை மண்டபத்தைக் கடந்துசென்றால், மகா மண்டபத்தின் நுழைவுவாயிலில் துவார பாலகர்கள் திருமேனிகள் அமைந்துள்ளன. தொடர்ந்து அர்த்த மண்டபமும் அதையடுத்து சுவாமி சன்னதி கருவறையும் அமைந்துள்ளது.
இறைவன் சன்னதியை அடுத்து, தனி சன்னதியில் இறைவி குங்கும சௌந்தரி அம்மன் எழுந்தருளியிக்கிறார். அந்த சன்னதி முன்பு கொடிமரம், பலிபீடம், நந்தியும், மகாமண்டப நுழைவுவாயிலில் துவார பாலகிகளின் சுதை வடிவமும் அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன.
இறைவனின் தேவகோட்டத்தில் தென்புறத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மேல்புறத்தில் அண்ணாமலையார், தெற்கில் சிவதுர்க்கை திருமேனிகள் அமைந்துள்ளன. கிழக்குச் சுற்றில் சூரியன், சந்திரன், அக்னி, பிரகாரத்தின் வடக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் சன்னதியும் அமைந்துள்ளன. இதனருகிலேயே பைரவர், சனீஸ்வரர் திருமேனிகள் எழுந்தருளியுள்ளன. இத்திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வம் அமைந்துள்ளது.
தனி சன்னதியில் துர்க்கை
பொதுவாக சிவத்தலங்களில் துர்க்கை அம்மன், கோயிலின் இறைவன் தேவகோட்டத்தில் அமைந்திருப்பார்.
ஆனால், பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயிலில் விஷ்ணு துர்க்கை அம்மன் தனி சன்னதி கொண்டு எழுந்தருளியிருக்கிறார். நவராத்திரிப் பெருவிழாவின் போது இந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிறப்பு வாய்ந்த துர்க்கை அம்மனுக்கு 8 கரங்கள் உள்ளன என்பதும் இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
மகாலிங்க மூர்த்தி
நாயன்மார்கள் வரிசைக்கு எதிரில் மகாலிங்க மூர்த்தி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் லிங்க வடிவில் மகாலிங்க மூர்த்தி காட்சியளிக்கிறார்.
இத்தலத்துக்கும் சென்றுவரலாம்.. திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி சுகந்த பரிமளேசுவரர் கோயில்
வெள்ளை வாரண விநாயகர்
கோயிலின் மேற்குச் சுற்றில் வெள்ளை வாரண விநாயகர் சன்னதி உள்ளது. இவர் தல விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்கு தூய வெள்ளை நிறத்தில் விநாயகர் காட்சியளிப்பது சிறப்புக்குரியது. இவருக்கு அருகிலேயே மற்றொரு விநாயகரும் எழுந்தருளியுள்ளார். வெள்ளை வாரண விநாயகருக்கு நெய் தீபமேற்றி, அருகம்புல் சூட்டி அர்ச்சனைசெய்து வழிபட்டால் புத்திர சந்தானம் இல்லாதவர்களுக்கு அந்த தோஷ நிவர்த்தி ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள். மேலும் வியாபாரிகள் தங்கள் வாழ்வில் மேன்மை அடையவும் வெள்ளை வாரண விநாயகர் அருள்புரிவார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகவுள்ளது.
வள்ளி - தேவசேனா சுப்ரமணியர்
தனி சன்னதியில் வள்ளி, தேவசேனா சமேதராய் வேலுடனும் ஆறு தலைகளுடனும் எழுந்தருளி காட்சியளிக்கிறார் அருள்மிகு சுப்ரமணியர். அருணகிரிநாதரால் போற்றிப் பாடப்பெற்ற பெருமான் இவர்.
இந்த சன்னதிக்கு அருகிலேயே அருள்மிகு தண்டாயுதபாணி சன்னதியும் அமைந்துள்ளது. பழநி முருகன் கோயிலில் உள்ளது போன்று முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.
கஜலட்சுமி - ஜேஷ்டாதேவி
இத்திருக்கோயிலில் கஜலட்சுமி, நாகர், ஜேஷ்டாதேவி திருமேனிகள் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் ஜேஷ்டாதேவிக்கு வளர்பிறை அஷ்டமியன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அறுபத்து மூவர் நாயன்மார்கள்
திருச்சுற்றின் தெற்கில் நால்வர் மற்றும் அறுபத்து மூவர் நாயன்மார்களின் திருமேனிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு நாயன்மாரின் பெயரும் அவர்களுக்குரிய குரு பூஜை நட்சத்திர நாளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பொதுவாக நால்வர் வரிசை என்பது சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற முறையிலே அமைவதுதான் வழக்கம். ஆனால், பூவாளூரில் சற்றே மாறுபட்டு நால்வர் வரிசை அமைந்திருக்கிறது. இங்கு மாணிக்கவாசகர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற வரிசையில் திருமேனிகள் அமைந்திருக்கின்றன.
பித்ரு தோஷ நிவர்த்தி
இத்திருக்கோயிலின் வெளிப் பகுதியில் வலதுபுறம் அமைந்துள்ள கயா பற்குனி (தற்போது பங்குனி ஆறு) ஆற்றின் கரையில் தனிக் கோயில் கொண்டு அமர்ந்துள்ளார் ஸ்ரீ தென் கயா பற்குனி ருத்ர சித்தர். இவருடைய யோகா ஜோதி, இத்திருக்கோயிலில்தான் எப்போதும் இருந்துகொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
பித்ரு சாபம், தோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து, கயா பற்குனியில் நீராடி, தர்ப்பணங்கள், சிரார்த்த ஹோம வழிபாடுகள் செய்து திருமூல நாதரையும், குங்கும சௌந்தரி அம்மனையும் வழிபட்டு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷங்களையெல்லாம் இங்குள்ள பித்ரு காவல்தேவ மூர்த்திகள் ஏற்று, தோஷ நிவர்த்தி ஏற்படுவதுடன் பரிபூரண பலன்கள் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
திருமுறை கோயில் இத்திருக்கோயிலில் எழுந்தருளிய சுப்ரமணியரைப் பற்றி அருணகிரிநாதர் பாடிய பாடல்கள் பூவாளூர் திருப்புகழ் என்றழைக்கப்படுகின்றன. இதுபோல, மற்ற திருப்புகழ்ப் பாடல்கள் அடங்கிய தொகுப்புகள் கொண்டு, இறைவன் - இறைவி சன்னதிக்கு அருகில் திருமுறை கோயில் (சன்னதி) அமைந்துள்ளது.
மேலும் கோயில் சன்னதி விநாயகருக்கு அருகிலேயே பூவாளூர் திருப்புகழ் குறித்த கல்வெட்டுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோயிலைப் பற்றி அறிய.. சட்ட சிக்கல்களைத் தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் கோயில்
வாக்கு வாளம்மன்
திருக்கோயிலின் வலதுபுறத்தில் அருள்மிகு வாக்குவாளம்மன் கோயில் அமைந்துள்ளது.
இதன் கருவறையில் சப்த மாதர்களின் திருமேனிகள் அமைந்துள்ளன. இந்த அம்மன் பூவாளூரின் காவல் தெய்வமாகப் போற்றப்படுகிறார். திருமூலநாதர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
குடமுழுக்குகள்
கடந்த 1961, ஜூன் 26 ஆம் தேதி திருமுருக கிருபானந்தவாரியரால் திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, 2000, செப்டம்பர் 11-ஆம் தேதியும், பின்னர் 2016, மார்ச் 18-ஆம் தேதியும் குடமுழுக்கு கள் நடைபெற்றிருக்கின்றன.
திருவிழாக்கள்
இத்திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தவிர கந்தசஷ்டி திருவிழா, திருவாதிரைப் பெருவிழாவும் திருவிழாக்களாக நடைபெறுகின்றன.
நடை திறந்திருக்கும் நேரம்
தினமும் நான்கு கால பூஜை நடைபெறும் திருக்கோயில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படிச் செல்வது?
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பூவாளூர் அமைந்துள்ளது. நெ.1. டோல்கேட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், லால்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது.
தென் மாவட்டங்களிலிருந்து கார் போன்ற வாகனங்களில் வருபவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், நெ.1. டோல்கேட், வாளாடி, மாந்துறை, லால்குடி வழியாக பூவாளூர் வந்தடையலாம்.
மேற்கு, வடக்கு, மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் நெ.1 டோல்கேட், வாளாடி, மாந்துறை, லால்குடி வழியாகவும், தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களிலிருந்து திருவையாறு, லால்குடி வழியாகவும் கோயிலை வந்தடையலாம்.
இந்தக் கோயிலுக்கும் சென்று வரலாம்: வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெருவளநல்லூர், குமுளூர் போன்ற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் வந்து பூவாளூரில் இறங்கிக் கொள்ளலாம். லால்குடியிலிருந்து ஆட்டோ வசதிகளும் உள்ளன. லால்குடி பேருந்துகளில் வந்தும் மாறிக் கொள்ளலாம்.
ரயில், விமானம் மூலம் வருபவர்கள் திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள் வழியாகவோ, புறவழிச் சாலை வழியாகவோ நெ.1. டோல்கேட் வந்து, லால்குடி வழியாக திருக்கோயிலை வந்தடையலாம்.
தொடர்பு முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு குங்கும சௌந்தரி அம்மன் உடனுறை திருமூலநாதர் திருக்கோயில்,
பூவாளூர், லால்குடி வட்டம்,
திருச்சி மாவட்டம்.
படங்கள் : எஸ். அருண்.