சட்டச் சிக்கலைத் தீர்க்கும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி திருக்கோயில்

கும்பகோணம் அருகே நால்வரால் பாடல் பெற்றது, திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி திருக்கோயில்.
திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாதசுவாமி.
திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாதசுவாமி.
Published on
Updated on
5 min read

சோழ வள நாட்டில் நால்வரால் பாடல் பெற்றதுடன், மதுரை ஆதினத்துக்குச் சொந்தமான திருக்கோயில்களில் ஒன்றானது, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி திருக்கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தேனபிஷேக பெருமான், பிரளயம் காத்த பெருமான் என பெயர் கொண்டுள்ள தேனபிஷேக விநாயகர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயத்துக்கு புறம்பாய் இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயரைப் பெற்றது. பிரளயம் ஏற்பட்டபோது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

பிரளயம் காத்த விநாயகர்.
பிரளயம் காத்த விநாயகர்.

செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்ன தலம் என்பது தொன் நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற இக்கோயில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 46-ஆவது தலம்.

பிற்கால சோழப் பேரரசு உருவாகக் காரணமான சிறப்புமிக்க போர் நடந்த ஊர் இது. இப்போரின் வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்த சோழன் இங்கிருந்த செங்கற்கோயிலை அழகிய கருங்கல் கோயிலாக மாற்றிக் கட்டினார்.  

கோயில் ராஜகோபுரம்
கோயில் ராஜகோபுரம்

இறைவன் சாட்சிநாதர்

மதுரையில் வசித்த வணிகன் ஒருவன் உடல்நிலை சரியில்லாத தன் மாமனைப் பார்க்க திருப்புறம்பியம் வந்தான். மாமன் இறக்கும் தருணம் தன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டுக் கண்ணை மூடினான். அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை செல்லும் முன் வணிகன் இத்தலத்துக்கு வந்தான். இரவு தங்கியிருந்தபோது அரவு கடித்து இறந்துவிட்டான். அப்பெண் சிவபெருமானிடம் முறையிட்டாள்.

இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார். பெண்ணைக் கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம் விவரம் கூறியபோது வணிகனின் முதல் மனைவி, இரண்டாவது பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணமாகவில்லை என்றும், அவள் மானங்கெட்டவள் எனவும் பழிகூறினாள். இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம், மடைப்பள்ளி, கிணறு இவற்றோடு மதுரை சென்று திருமணம் நடந்ததற்குச் சாட்சி பகன்றார் இறைவன். வணிகப் பெண்ணுக்காக மதுரைக்கு எழுந்தருளி சாட்சி கூறியதால், இத்தல இறைவனுக்குச் சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

இறைவன் சாட்சிநாதர்
இறைவன் சாட்சிநாதர்

சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடல் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. மதுரை சுந்தரேசுவரர் திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் சாட்சி கூறிய படலத்துக்குச் சான்றாக இப்போதும் வன்னி மரமும், மடைப் பள்ளியும் இருப்பதைக் காணலாம். செட்டிப் பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்குச் சாட்சியாக இருந்த வன்னிமரம் இத்தலத்தின் இரண்டாம் பிரகாரத்திலுள்ளது. ஆனால், இம்மரம் தல மரமன்று. தலமரம் புன்னை மரமே.

இப்புராணத்தை ஒட்டியே இறைவனான புன்னைவனநாதர், அருள்மிகு சாட்சிநாதர் எனப் போற்றப்படுகிறார். நீதி சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற ஈசனை வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். ஆயில்ய நட்சத்திரத்தின் பரிகாரத் தலம் இது.

இறைவி கரும்படு சொல்லியம்மை

இத்தலத்தின் இறைவி கரும்படு சொல்லியம்மை என அழைக்கப்படுகிறார். கடுஞ்சொற்களைப் பேசுவோர் இவ்வம்மையை வழிபட இனிமையான சொற்களைப் பெறுவர். வாக்கு வன்மை பெறும். திக்குவாய், குழறிப் பேசும் குழந்தைகள் இவ்வம்மைக்கு அபிஷேகம் செய்த தேனை நாக்கில் தடவிவர சொல்லாற்றல் பெறுவர்.

கரும்படு சொல்லியம்மை
கரும்படு சொல்லியம்மை

இசை வல்லுநர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அம்பாளின் சன்னதியில் தங்களது ஆற்றலைச் சமர்ப்பித்தால், அந்த ஆண்டு முழுவதும் நல்வாய்ப்புகள் அமையும் என்பது நம்பிக்கை. குரல் வளம் இல்லாத குழந்தைகளுக்கு அவர்களது நட்சத்திரத்தில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

பிரளயம் காத்த விநாயகர்

ராகு அந்தர கற்பத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் திருப்புறம்பியம் திருத்தலத்தைக் கருணையால் அழியாவண்ணம் காத்தவர் பிரளயம் காத்த விநாயகர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல் நுரை ஆகிய கடல்  பொருள்களாலான மேனியைக் கொண்டவராக பிரளயம் காத்த  விநாயகர் எனும் தேனை  உறிஞ்சும் தேனபிஷேக பெருமானாக விநாயகப் பெருமான் இக்கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

தேன் உறிஞ்சும் விநாயகர்

வருண பகவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும்  இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மற்ற நாள்களில் அபிஷேகம் கிடையாது. விநாயகர் சதுர்த்தி திருநாளில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் தேன் அபிஷேகம் விடிய விடிய நடக்கும். முழுக்க முழுக்கத் தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.

விநாயகர் சதுர்த்தியில் பிரளயம் காத்த விநாயகருக்குத்  தேனபிஷேகம்
விநாயகர் சதுர்த்தியில் பிரளயம் காத்த விநாயகருக்குத்  தேனபிஷேகம்

அபிஷேகம்  செய்யப்படும் தேனானது, விநாயகர் திருமேனியில்  உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் இப்போதும் கண்கூடாக நிகழ்ந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தியன்று பிரளயம் காத்த விநாயகரைத் தரிசனம் செய்தால் சர்வ சங்கடங்களும் நிவர்த்தியாகும்.

ஸ்ரீகுகாம்பிகை

ஆறுமுகனாம் (குழந்தை வடிவ) குகப் பெருமானை அன்னை தன் மகனை இடையில் ஏற்றியிருப்பது போல ஏற்றி அரவணைத்தவாறு அற்புதக் காட்சி தரும் அருள்மிகு குகாம்பிகை. இவ்வன்னைக்கு பெளர்மணி நாளன்று சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது.

குகாம்பிகை
குகாம்பிகை

குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், திருமணப் பிராப்தம் வழங்கி அருள் பாலிப்பவர் குகாம்பிகை.

ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி

ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ளார். தமிழகத்திலேயே தனிக்கோயிலில் குரு பகவான் எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம் இது.
 

தனிக்கோயில் கொண்டுள்ள குரு பகவான்
தனிக்கோயில் கொண்டுள்ள குரு பகவான்


சனகாதி முனிவர்களுக்கு நான்கு வேதங்களை உபதேசிக்கும் அற்புதமூர்த்தி தட்சிணாமூர்த்தி. கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், தொழில் போன்றவற்றுக்கு அருள்பாலிக்கும் தென்முகக் கடவுள்.

கோயில் அமைப்பு

இக்கோயிலின் ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றவுடன் நாம் காண்பது விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம். நேரே பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியவற்றைக் காணலாம். நந்தி மண்டபத்தின் விமானத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சுதை சிற்பங்களைக் காணலாம்.

முதல் பிரகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் போன்றோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளிட்டவை உள்ளன. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுவாமியின் கருவறைச் சுற்றுச்சுவர்களில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்களைக் காணலாம்.

சாட்சிநாதர்
சாட்சிநாதர்

இரண்டாவது பிரகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது. குளத்தின் தென்கரையில் தட்சிணாமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு விறகு கொண்டு வந்த ஒரு ஏழைக்கு இறைவன், தட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தவர் இவர்தான். இதற்கு மேலே சாட்சிநாதர் சன்னதி உள்ளது. தட்சிணாமூர்த்திக்குரிய முக்கிய தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

சிறப்புகள்

திருமண வரம் வேண்டியும் குழந்தைச் செல்வம் வேண்டியும் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனை வழிபடுகின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நீதிமன்ற வழக்குகளில் தீர்வு கிடைக்க வேண்டுவோர் பங்கேற்கும் பரிகாரம் பூஜைகள் நடைபெறுகின்றன.

திருவிழாக்கள்

வைகாசி மாதத்தில் வணிகர் நாடகமும் (சிவனின் 64-ஆவது திருவிளையாடல்), ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவும், குருப்பெயர்ச்சி திருவிழாவும், மாசி மாதத்தில் 10 நாள்கள் பெருந்திருவிழாவும் போன்றவை நடைபெறும்.

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
பூஜை விவரம் -  நான்கு கால பூஜை.

கோயில் ராஜகோபுரம்
கோயில் ராஜகோபுரம்

செல்லும் வழி

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவிலுள்ள இன்னம்பூர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற இந்தத் தலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. ரயிலில் வருவோர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கிப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் செல்லாம். விமானத்தில் வருவோர் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி தஞ்சாவூர், சுவாமிமலை வழியாகச் சென்றடையலாம்.

கோயில் முகவரி
அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில்
திருப்புறம்பியம்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் - 612303

தொடர்புக்கு:  9894652238 (சிவஸ்ரீ ராஜசேகர சிவாச்சாரியார்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com