Enable Javscript for better performance
கருவைக் காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  கருவைக் காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்

  By வி.என். ராகவன்  |   Published On : 16th April 2021 04:00 AM  |   Last Updated : 16th April 2021 09:29 AM  |  அ+அ அ-  |  

  garugavoor-tile

  முல்லைவனநாதர் - கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்

   

  அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் இப்பூவுலகில் மக்கள் பெற்று உய்யும்வண்ணம் பரம கருணாநிதியாகிய சிவபெருமான் திருவருளே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்கள் பல.

  இவற்றில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளுடன் மூவர் தேவாரத்தையும் பெற்று மக்கள் பலரும் நாளும் வந்து தம் காரிய சித்தியை அடையும் தலமாக விளங்கும் திருக்கருகாவூர் திருக்கோயில். 

  இத்தலம் நம் நாட்டின் சிறப்பில் முதலிடம் பெற்று விளங்கும் 275 தேவாரத் தலங்களில் ஒன்று. சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்துக்கு தெற்கே 6 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்துக்கு தென் மேற்கில் 20 கி.மீ. தொலைவிலும், சாலியமங்கலத்துக்கு வடக்கில் 10 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூருக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவிலும் வெட்டாற்றின் தென் கரையிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

  கோயில் ராஜகோபுரம்

  புராணச் சிறப்பு

  தமிழில் 338 பாடல்களில் அம்பலவாணப் பண்டாரத்தால் பாடப்பட்டிருந்த தல புராணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் வழிநின்று இக்கோயிலில் எழுதப்பட்டு, 1958 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்ற தல வரலாற்றில் காணப்படும் சிறப்புகள் சில இங்கு குறிப்பிடப்படுகின்றன.

  இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: ஜென்ம பாவங்கள் நீக்கும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்

  பிரம்மன் பூஜித்தது

  படைப்புக் கடவுளாகிய பிரம்மன் தன் தொழிலின் காரணமாய் ஆணவம் கொள்ள, அதனால் அத்தொழில் கைகூடாமல் போயிற்று. பிரம்மன் இங்கு வந்து தென்மேற்கு மூலையில் தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை நிறுவி நீராடி முல்லை வனநாதப் பெருமானைப் பூஜிக்க மீண்டும் படைப்புத் தொழில் கைவரப் பெற்றான். 

  கோயில் முகப்பு

  கார்க்கியர் சுவர்ணாகரனுக்கு அருள் புரிந்தது

  சுவர்ணாகரன் என்ற வைசியன், தான் செய்த தீவினையின் காரணமாகப் பேயுரு அடைந்து கார்க்கியர் என்ற முனிவரிடம் புகழ் அடைந்தான். அவரும் இக்கருகாவூருக்கு ஒரு திருவாதிரை நன்னாளில் அழைத்து வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் செய்யவே, அவனது பேயுரு நீங்கிப் பெருமானை வழிபட்டான். முனிவரும் முல்லைக் கொடியின் கீழ் இருந்த பெருமானுக்குக் கோயில் ஒன்றை அமைத்தார்.

  இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்

  கௌதமர் பூஜித்த வரலாறு

  ஒரு சமயம் தம்பால் புகலிடம் நலம் பெற்ற முனிவர்களின் சூழ்ச்சியால் கௌதமர் பசுக்கொலைப் பாவத்துக்கு ஆளானார். அப்போது, போதாயனர் என்ற முனிவரின் உரைப்படி கெளதமர் இக்கருகாவூர் வந்து புனித நீரில் நீராடி ஒரு சிவலிங்கத்தை வைத்துப் பூஜித்தார். அப் பசுக்கொலைப் பழியும் நீங்கியது. இவரால் அப்போது பூஜிக்கப் பெற்ற லிங்கம் கௌதமேசுவரர் என்ற பெயருடன் அம்பிகையின் சன்னதி எதிரில் ஒரு தனிக்கோயிலில் இருக்கிறது.

  கோயில் கொடி மரம்

  மன்னர் குசத்துவசனின் சாப நீக்கம்

  குசத்துவசன் ஒருமுறை சத்திய முனிவரின் சொல்லுக்கு மாறாக அவர் இருந்த வனத்தில் வேட்டையாடி அவரது சாபத்தால் கொடும் புலியுருவைப் பெற்றான். பின்னர், அம்முனிவரை அவன் வணங்கி வேண்டிட, அவர் கூறியபடி இத்தலத்தின் சத்தியகூப தீர்த்த விசேஷத்தால் மீண்டும் தன் சுய உருவைப் பெற்றான். இக்கோயிலை முப்போதும் திருமேனி தீண்டும் சிவாச்சாரியார்களுக்கு இல்லங்கள் அமைத்துக் கொடுத்தான். வைகாசிப் பெருவிழாவையும் தொடங்கி வைத்தான்.

  சங்குகர்ணன் பேறு பெற்றது

  சங்குகர்ணன் ஓர் அந்தண குமாரன். தன் வித்யா குருவின் விருப்பப்படி அவரது குமாரியை திருமணம் செய்துகொள்ள மறுத்தான். அதனால், அவரது சாபத்துக்கு ஆளாகிப் பேயுருப் பெற்றான். பின்னர் தன் நல்வினைப் பயனால் இக்கருகாவூர் எல்லையை அடைந்ததும் பேய் உரு நீங்கப் பெற்றான். அன்று மார்கழி திருவாதிரை நாள். பிரம்ம தீர்த்தத்தில் நீராடிப் பெருமான் திருமுன் சிவ பூஜை செய்து நற்பேறு பெற்றான்.

  நித்துருவர்

  நித்துருவர் (கரு காக்கப் பெற்றது)

  நித்துருவர் என்ற முனிவர் வேதிகை என்ற தன் மனைவியுடன் இத்தலத்தில் வசித்து வந்தார். ஒரு முறை இவரது மனைவி கருவுற்று இருந்தபோது, அவளைத் தனியே தன் ஆசிரமத்தில் விட்டுவிட்டு, வருணன்பால் சென்றார். அப்போது, ஊர்த்துவபாதர் என்ற முனிவர் இவரது ஆசிரமத்தை நாடி வந்து தம் பசிக்கு உணவு கேட்டார். இவரது குரலைக் கேட்டும், அச்சமயம் கருவுற்றிருந்த வேதிகை தளர்ச்சி மிகுதியால் எழுந்து வந்து அன்னம் இட முடியவில்லை. இதையறியாத அம்முனிவர் கோபமுற்று இராசயட்சு என்ற நோயினால் வருந்துமாறு சாபமிட்டுச் சென்றார்.

  கோயில் பிரகாரம்

  இதனால், வேதிகையின் வயிற்றுக் கருவுக்கு ஊனம் வர, அவர் இத்தலத்துப் பெருமானையும் பெருமாட்டியையும் வேண்டி துதித்தாள். இதனால், வயிற்றுக் கருக்காக்கப் பெற்றுக் குழந்தை உருக்கொண்டது. பெருமானின் கட்டளைப்படி காமதேனு தன் பாலைச் சுரந்து அளித்தது. பின்னர் வந்த நித்துருவர் இந்நிகழ்வை அறிந்து மகிழ்வெய்தி இனி இத்தலத்தில் கருவுற்ற பெண்களுக்கு எந்த இன்னலும் வராமல் காக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அவ்வாறே இங்கு வசிக்கும் கருவுற்ற பெண்களும், வெளியூரிலிருந்த வண்ணம் இங்குள்ள பெருமானையும், பெருமாட்டியையும் வேண்டி நிற்கும் பெண்களும் வேதனையின்றி நலமாகவே குழந்தைப் பெறுகின்றனர்.

  இந்தக் கோயிலுக்கும் சென்றுவரலாம்: குழந்தைப் பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்

  அருளாளர்கள் வருகை

  திருநாவுக்கரசர் தன் நினைவின்படி திருநல்லூரில் பெருமானது திருவடி தன் தலை மீது சூட்டப் பெற்ற பின் அங்கு தங்கியிருந்த நாள்களில் இத்திருக்கருகாவூருக்கு வந்து பெருமானைத் தரிசித்து இனிய பல சொற்களைக் கொண்டு சொல் மாலைச் சூட்டிச் சென்றார்.

  கோயில் பிரகாரம்

  திருஞானசம்பந்தர் தம் ஐந்தாம் யாத்திரையில் கொங்கு நாட்டிலிருந்து திரும்பிச் சோழ நாட்டின் பல தலங்களையும் தரிசித்து வரும்போது, இங்கு வந்து கருகாவூர் கற்பகத்தின் செந்தழல் வண்ணத்தை ஏத்திப் பாடிச் சென்றார்.

  தலப் பெயர்கள்

  திருக்களாவூர் என மக்களால் அழைக்கப்படும் இத்தலம் மாதவி வனம், முல்லை வனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தல விருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என அழைக்கப்படுகிறது. கரு + கா + ஊர். கரு + தாயின் வயிற்றில் உள்ள (குழந்தை) கருவை, கா - காத்த (காக்கின்ற) ஊர் கருகாவூர் எனப் பெயர் பெற்றது.

  இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்

  கோயில் அமைப்பு

  இந்த ஊரின் நான்கு வீதிகளுக்கு இடையில் பாங்குற அமைந்துள்ள இக்கோயில் 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது. இதற்கு கிழக்கில் ஓர் ராஜகோபுரமும், தென் பக்கம் ஒரு நுழைவு வாயிலும் இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் வடப்பக்கம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து முதலில் அமைந்துள்ள பெரிய பிரகாரத்தில் சுவாமி கோயிலும் இதன் வடப்பக்கம் அம்பிகைக்குக் கோயிலும் தனித்தனி பிரகாரத்துக்குள் அமைந்துள்ளது.

  அறுபத்து மூவர்

  சுவாமி கோயிலுக்கு முன்னால் கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவையும் தென் கிழக்கில் மடப்பள்ளி 63 நாயன்மார்களும், வடகிழக்கில் நடராஜர் சபா முன் மண்டபமும், யாகசாலையும் இருக்கின்றன. இதற்கு அடுத்து மேல் பக்கம் சுவாமிக்கு வடகிழக்கில் நடராஜர் சன்னதியும், நவக்கிரகங்களும், தென் பக்கம் சோமாஸ்கந்தர் சன்னதியும், அருகில் தென் கிழக்கில் தல விநாயகர் கற்பகப் பிள்ளையார் சன்னதியும் உள்ளன.

  சைவ சமயாச்சாரியார்கள்

  உள் பிரகாரத்தில் நடராஜருக்கு எதிரில் சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சன்னதிகளும், தென்பக்கம் தட்சிணாமூர்த்தி நிருதி விநாயகர் சன்னதிகளும், மேல் புறம் அர்த்தநாரீஸ்வரர், மகாலஷ்மி சன்னதிகளும், வடபுறம் ஆறுமுகம், பிரம்மன், துர்க்கை, சண்டேச்சரரும் மற்றும் தல விருட்சமாகிய முல்லைக்கொடியும் அமைந்துள்ளன.

  பிரம்மா

  இறைவன்

  இத்தலத்து ஏகநாயகரும், சுயம்பு மூர்த்தியாகிய மூவலிங்க மூர்த்தி, மாதவி வனேச்சுரர், முல்லை வனநாதர், கர்ப்பபுரீச்சுரர், கருகாவூர் கற்பகம் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் கல்வெட்டில் திருக்கருகாவூர் மகாதேவர் திருக்கருகாவூர் ஆழ்வார் திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்றெல்லாம் குறிக்கப்படுகிறது.

   சுவாமி சன்னதி பிரகாரம்

  திருஞானசம்பந்தர் இங்குப் பாடியுள்ள பதிகத்துள் இவரது செந்தீ வண்ணத்தைப் பாடல்கள் தோறும் வியந்தோதுகிறார். நாவரசர் குருகு வைரம், அமிர்தம், பாலின் நெய், பழத்தின் சுவை, பாட்டில் பண், வித்து பரஞ்சோதி எட்டுருவ மூர்த்தி எனப் பலவாறாக ஏத்திக் கூறியிருப்பதை அப்பாடல்களைப் பயின்று காணின் புலனாகும். இச்சுயம்புலிங்க மூர்த்திக்குப் புனுகுச்சட்டமே அபிஷேகப் பொருளாகும்.

  அம்பாள் சன்னதிக்கு செல்லும் வழி

  இறைவி

  இங்கு அகிலாண்ட கோடி அன்னையாய் அனைத்துயிர்களின் கருவைக் காத்தருளுபவளாய் கண்கண்ட தெய்வமாய் கோயில் கொண்டு அருளும் அம்மை கர்ப்பரட்சகி, கருகாத்த நாயகி, கரும்பனையாள் என அழைக்கப்படுகிறாள்.

  விநாயகர்

  விநாயகர் - முருகன்

  தல விநாயகர் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகிறார். இவர் சுயம்பு மூர்த்தி. இங்கு முருகன் ஆறுமுகத்துடன் தனிப்பெரும் கோயிலில் விளங்குகிறார். 

  சுப்ரமணியர்

  ஒரே வரிசையில் தரிசனம்

  மேலும், இங்கு மூலவராகிய முல்லை வனநாதர் சன்னதி, கர்ப்பரட்சகி அம்மையின் சன்னதி, இடையில் அமைந்துள்ள ஆறுமுகர் சன்னதி ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் இருக்கும் காலத்தில் தரிசிப்பது பெரும் பேறாகும்.

  அதாவது மகேஸ்வர வடிவங்களில் முதன்மையானதும், மக்களுக்கு வேண்டுவனவற்றை வேண்டியபோது தரும் போக மூர்த்தியானதும், சிவாலயத்தே தனியாட்சி செலுத்தித் தேரூர்ந்து விழாக்கொள்ளும் மூர்த்தி ஆனதும் சச்சிதானந்த வடிவான சோமாஸ்கந்த மூர்த்தியே ஆவார்.

  சோமாஸ்கந்தர் சன்னதி

  இந்த சோமாஸ்கந்த அமைப்பில் இங்கு இம்மூன்று அமைந்து தரிசிப்பவர்களுக்கு புத்திரப்பேற்றையும், அப்புத்திரப்பேறு சிதைவின்றிக் கிடைக்க அக்கருவைக் காத்தருளுகின்ற அருள் பேற்றையும் வழங்கும் தலமாக விளங்குகிறது. எனவே, சோமாஸ்கந்தர் வடிவமைப்பில் உள்ள இத்திருக்கோயிலை சுவாமி, அம்மன், சுப்பிரமணியர் மூன்று சன்னதிகளையும் ஒருசேர வலம் வரச் சுற்றுப்பிரகாரம் உள்ளது.

  இதையும் படிக்கலாம்: நாக தோஷம் போக்கும் நாகராஜா திருக்கோயில்

  தீர்த்தங்கள்

  தீர்த்தம் நம் நாட்டில் விளங்கும் பற்பல கிணறு, குளம், ஆறு, கடல் துறை போன்றவை சிவமயத் தன்மைப் பெற்று நீராடியபோது உடற்பிணியையும் போக்குகின்றன. இதை திருநாவுக்கரசர் சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே என்கிறார். இவ்வகையில் இத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள்...

  கோயில் முன் உள்ள க்ஷீர குண்டம்

  க்ஷீரகுண்டர் (பாற்குளம்)

  கோயிலுக்கு முன்னால் அமைந்துள்ள இத்திருக்குளம் தெய்வப் பசுவாகிய காமதேனுவின் காலால் உருவாக்கப்பட்டது. சிவராத்திரி காலத்தில் பெருமான் இங்குதான் தீர்த்தம் அருளுகிறார்.

  சத்திய கூபம்

  சுவாமி கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் உள்ளது. இக்கிணறு கார்த்திகை மாதத்து அனைத்து ஞாயிறுகளிலும் முருகப்பெருமான் இதில் தீர்த்தம் அருளுகிறார்.

  பிரம்ம தீர்த்தம்

  இத்திருக்குளம் இவ்வூருக்குத் தென்மேற்கில் கற்சாலைக்குக் கீழ்ப்பக்கம் இருக்கிறது. மார்கழித் திருவாதிரையில் நடராஜப் பெருமான் சிவகாமி அம்மையாருடன் இங்கு வந்து தீர்த்தம் அருளுகிறார்.

  விருத்த காவிரி

  காவிரியின் கூறாகிய வெட்டாறு இது. இதையே முள்ளிவாய் என்றும் புராணங்கள் கூறும். கோயிலுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள பூஜைப் படித்துறையில் கருகாவூர்ப் பெருமான் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ஆகிய நாள்களிலும் பெருமாட்டி கர்ப்பரட்சகி ஆடிப்பூர நன்னாளிலும் தீர்த்தம் அருளுகிறார்.

  தட்சிணாமூர்த்தி

  தல விருட்சம்

  மிகப் பழைமையான காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் கானகத்தை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்தனர். அப்போது, இறைவனின் உருவத்தை மரத்தடியில் எழுந்தருளச் செய்து வழிபட்டனர். பின்னர் நாகரிக வளர்ச்சியில் காடு கெடுத்து நாடக்கப்பட்ட பின்னர் தெய்வங்களுக்கும் பெருங்கோயில்கள் எழுப்பப்பட்டன.

  இந்த கோயிலுக்கும் செல்லலாம்: நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்

  இவ்வாறு கோயில்கள் அமைக்கப்பட்ட போதிலும், ஆதியிலிருந்த மரத்தை அழிக்காது, அதை இன்றளவும் ஆதி மரம் முல்லையாகும். இதன் பெயராலேயே இத்தலம் முல்லை வனம் (மாதவி வனம்) எனவும், பெருமான் முல்லைவனநாதர் (மாதவிவனேசர்) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முல்லைக்கொடி சுவாமியின் உள்பிரகாரத்தில் சண்டேச்சரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையில் உள்ளது.

  திருவிழாக்கள்

  இக்கோயிலில் சுவாமிக்கு விசாகப் பெருந்திருவிழா, அம்பிகைக்கு ஆடிப்பூரம், நவராத்திரி உற்சவங்கள், நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள், நிறைபணி அன்னாபிஷேகம், கந்தர்சஷ்டி, கார்த்திகை சோம வாரப் பூஜை, அனைத்து கார்த்திகை தீபம் ஞாயிறுகளில் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாத பிரதோஷங்கள் போன்றவை இங்கும் நடைபெறும் திருவிழாக்கள்.

  இதுமட்டுமல்லாமல், உள்ளூர், வெளியூர் மக்களின் முயற்சியால் சுவாமி, அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. மேலும், வெளியூரிலிருந்து மக்கள் வந்து தரிசித்து தங்கள் வேண்டுதலைச் செலுத்தி வருகின்றனர்.

  நித்திய பூஜை

  காரண காமிக ஆகமப்படி இக்கோயில் நாள்தோறும் காலை 5.30 - 6.00 மணிக்கு உஷக்காலம், காலை 8.30 - 9.30 மணிக்கு காலச்சந்தி, பிற்பகல் 12.30 மணிக்கு உச்சிக்காலம், மாலை 5.30 - 6.30 மணிக்கு சாயரட்சை, இரவு 8 மணிக்கு அர்த்தயாமம் ஆகியவை நடைபெறுகின்றன.

  பிரார்த்தனைகள்

  அம்பாள் கருகாத்த நாயகியிடம் திருமணம் கூடிவர, குழந்தைப் பாக்கியம் உண்டாக, சுகப்பிரசவம் ஏற்பட பிரார்த்தனை செய்து அருள் பெறலாம்.

  திருமணம் கூடிவர

  பெண்கள் அம்பாள் சன்னதியில் நெய்யால் படிமெழுகி கோலமிட்டு பிரார்த்தனை செய்து கொள்ள விரைவில் திருமணம் கூடி வரும்.

  குழந்தைப் பாக்கியம் பெற

  குழந்தைப் பேறு இல்லாதவர்கள், அம்பாள் சன்னதியில் நெய்யால் படிமெழுகி கோலமிட்டு பிரார்த்தனை செய்து கர்ப்பரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும். இந்த நெய் பிரசாதத்துடன் அரை கிலோ சுத்தமான நெய் கலந்துவைத்துக்கொண்டு இரவு படுக்கைக்குச் செல்லும்போது சிறிதளவு எடுத்து தம்பதியினர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகையை நினைத்து வணங்கி 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். கணவரால் நாள்தோறும் நெய் சாப்பிட இயலாவிட்டாலும் மனைவி தினமும் நெய் சாப்பிட்டு வர வேண்டும். நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் இதர பழக்கவழக்கங்களில் பத்தியங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லை. இதர மருந்து சாப்பிடுகிறவர்கள் அதையும் தொடரலாம். பெண்கள் மாத விலக்கு காலங்களில் 5 நாள்கள் நெய் சாப்பிட வேண்டாம். இவ்வாறு செய்தால் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அருளால் மகப்பேறு உண்டாகும்.

  இக்கோயிலில் சுவாமியையும், அம்பாளையும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரையும் ஒரு சேர வலம் வந்தால் வேண்டியது கிடைக்கும் என நம்பப்படுகிறது. இக்கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளதால், இத்திருக்கோயில் பிரகாரத்தை ஒரு சேர மூன்று முறை வலம் வரும் தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது வரலாறு.

  துலாபாரம்

  சுகப்பிரசவம் ஏற்பட

  கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக இத்திருக்கோயிலில் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை திருப்பாதத்தில் விளக்கெண்ணெய்யை வைத்து மந்திரித்து கொடுக்கப்படும். இந்த விளக்கெண்ணெய்யை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் சுகப்பிரசவம் ஏற்படும். கர்ப்பம் அடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதாரண வலி தோன்றினால், அப்போது மந்திரித்த விளக்கெண்ணெய்யை வயிற்றில் தடவினால் வலி நின்று நிவாரணம் கிடைக்கும்.

  இந்த கோயிலையும் பார்க்கலாம்: ராகு - கேது சர்ப்ப தோஷங்கள் நீக்கும் திருப்பாம்புரம் பாம்புரநாதர் திருக்கோயில்

  கட்டளை அர்ச்சனை

  மாதந்தோறும் அர்ச்சனை செய்து பிரசாதம் பெற ஆண்டுக்கு ரூ.300 செலுத்த வேண்டும். மேலும், இல்லத்தில் நடைபெறும் காதணி விழா, திருமண விழா போன்ற சுப விசேஷங்களுக்கு உரிய பத்திரிகையும் ரூ.50 மணியார்டர் அல்லது டி.டி. அனுப்பி விவரம் தெரிவித்தால் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

  புனுகு சாத்தல்

  இங்கு எழுந்தருளியுள்ள முல்லைவனநாதர் புற்று மண்ணால் ஆகியதாகும். எனவே, சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. சுவாமியின் திருமேனியில் புனுகுச்சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. தீராத நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு வளர்பிறை பிரதோஷத்தில் புனுகு சட்டம் சாத்தி நோய் நீங்கப் பெறலாம்.

  தங்கத் தொட்டில்

  தங்கத் தொட்டில்

  குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குழந்தைப் பேறு பெற்றவர்களுக்கும் நாட்டிலேயே முதல் முறையாக தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் நெய் மந்திரிக்கும்போது அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தம்பதியர் பெற்றுத் தங்கத் தொட்டிலில் இடுவதும், குழந்தை வரம் பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தங்கத் தொட்டிலில் இடுவதும் இங்கு முக்கிய பிரார்த்தனையாகும். இத்தங்கத் தொட்டிலுக்கு கட்டணம் ரூ.550.

  அபிஷேக நேரம்

  திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி மட்டும் அபிஷேகம் செய்யப்படும். ஞாயிறு அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு செய்வதற்கு தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யலாம்.

  மேலும் விவரங்களுக்கு www.garbaratchambigaitemple.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மேலும், eomullaivananathartkr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04374 - 273423 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 88700 58269 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

  வாகன வசதி

  விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தை அடைந்து, தஞ்சாவூர் வழியாகப் பேருந்து அல்லது கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்றடையலாம். ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையம் அல்லது கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து மூலம் இக்கோயிலுக்கு வரலாம். தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், சாலியமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து திருக்கருகாவூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

  கோயில் முகவரி

  அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில் 

  திருக்கருகாவூர், 

  பாபநாசம் வட்டம், 

  தஞ்சாவூர் மாவட்டம் - 614 302 


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp