அம்மை நோயைப் போக்கி அருளும் புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தஞ்சை - நாகை சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கருவறையிலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்
கருவறையிலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்


தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த 88 கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தஞ்சை - நாகை சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத்   திசைகளிலும் அஷ்ட சக்திகளைக் காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்குக் கிழக்குப் புறத்தில் அமையப் பெற்ற சக்தியே  அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன்.

கோபுரத் தோற்றம்
கோபுரத் தோற்றம்

தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ஆம் ஆண்டில் திருத்தல யாத்திரை மேற்கொண்டபோது கண்ணபுரம் என்றழைக்கப்படும்  சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அரசனின் கனவில் அம்பிகை தோன்றினார். அப்போது, தஞ்சைக்குக் கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னைக்காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வழிபடும்படி கூறினாராம் அம்பிகை.

அதன்படி வெங்கோஜி மகாராஜாவும் தஞ்சைக்கு வந்து புன்னைக்காட்டுக்குச் சென்றார். அந்தக் காட்டுக்கு வழியமைத்த மகாராஜா, அம்பிகை  இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்கு சிறிய கூரை அமைத்துப் புன்னைநல்லூர் எனப் பெயர் சூட்டினார். மேலும், அந்தக் கிராமத்தையும் அந்தத் திருக்கோயிலுக்கே வழங்கினார்.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள கருவறையில் உள்ள அருள்மிகு மாரியம்மன்.
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள கருவறையில் உள்ள அருள்மிகு மாரியம்மன்.

பின்னர், 1739 - 1763 ஆம் ஆண்டுகளில் ஆண்ட பிரதாப மகாராஜா, இந்தத் திருக்கோயிலுக்கு அருள்மொழிப்பேட்டை என்ற கிராமத்தை மானியமாக அளித்தார். மேலும் இத்திருக்கோயிலுக்கு வருவோர் அம்பாள், ஈசுவரனை வழிபடுவதுடன், பெருமாளையும் வழிபடுவதற்காக அம்பாளின் கோயிலுக்கு வட திசையில் அருள்மிகு கோதண்டராமர் கோயிலையும் கட்டி மானியங்களையும் வழங்கினார்.

கண் கொடுத்த தெய்வம்

இதைத் தொடர்ந்து, 1763 - 1787 ஆம் ஆண்டுகளில் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்விக்கு அம்மை நோயால் கண் பார்வை மங்கியது. அரசனின்  கனவில் ஓர் அந்தணச் சிறுமி போல தோன்றிய அம்பிகை,  தனது சன்னதிக்குப் புதல்வியுடன் வந்து வழிபடும்படி கூறி மறைந்தாராம்.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலின் முன்புறத் தோற்றம்.  
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலின் முன்புறத் தோற்றம்.  

அரசனும் அரசகுமாரியுடன் சென்று அம்பிகையை வழிபட்டவுடன் அரசகுமாரி தனது பார்வையைத் திரும்பப் பெற்றார். இதில், மகிழ்ச்சி அடைந்த அரசன்  அம்பிகைக்கு சிறியதொரு கோயிலைக் கட்டினார். மேலும், இந்தத் திருக்கோயிலைச் சுற்றி திருச்சுற்று மாளிகையையும் அமைத்தார். பிற்காலத்தில் இந்த மன்னரே ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளைக் கொண்டு புற்று உருவாய் இருந்த அம்பிகைக்கு மாரியம்மன் உருவத்தை வடிவமைத்து சக்கர பிரதிஷ்டையும் செய்தார். மேலும், கைலாசநாதர் என்ற சிவன் கோயிலையும் கட்டினார்.

கோயில் நுழைவு வாயில்
கோயில் நுழைவு வாயில்

இதையடுத்து, 1798 - 1832 ஆம் ஆண்டுகளில் அரசாண்ட சரபோஜி மகாராஜா, இந்தத் திருக்கோயிலில் மகா மண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய திருச்சுற்று ஆகியவற்றைக் கட்டி,  அம்பிகைக்குத் திருக்குடமுழுக்கு நடத்தினார்.

சிவாஜி மகாராஜா மூன்றாவது திருச்சுற்றைக் கட்டி வைத்து, மேலும் பல திருப்பணிகளைச் செய்தார். வெளி மண்டபம், போஜன சாலை, வடக்குக் கோபுரம் ஆகியவற்றை 1892 ஆம் ஆண்டில் சிவாஜி மன்னரின் துணைவியார் காமாட்சியம்பா பாயி சாகேப் கட்டினார்.

இரண்டாம் சிவாஜி ராஜா காலமான கி.பி. 1855 ஆம் ஆண்டில் கல்காரம் வரை  கட்டப்பட்டிருந்த ராஜகோபுரம் ஏழுநிலை கொண்ட அழகிய ராஜகோபுரமாக கட்டப்பட்டுள்ளது.

கோபுரத் தோற்றம்
கோபுரத் தோற்றம்

அபிஷேகம் கிடையாது

இந்தத் திருக்கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனிச் சிறப்பு. எனவே, கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

அபிஷேகத்துக்காக அம்பாளின் வலது புறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துர்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துர்க்கை, அம்பாள் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், ஆகம விதிப்படி நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கொடி மரம்
கொடி மரம்

தைலக்காப்பு

மூலவராக விளங்கும் புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது, ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண்திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

அப்போது, கருவறை அம்பாளுக்கு 48 நாள்களுக்கு நாள்தோறும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும். தைலாபிஷேக நேரத்திலும், தைலக்காப்பின் போதும் அம்பாளுக்கு வெப்பம் அதிகமாகும். அதைத் தவிர்க்க அம்பாளுக்குத் தயிர்ப்பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும்.

உள்தொட்டி, வெளித்தொட்டி இரண்டிலும் நீர் நிரப்பி அம்பாளின் வெப்பம் தணிக்கப்படும். ஆண்டுதோறும் கோடை நாள்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து, முத்தாக வியர்வை, வியர்த்துத் தானாகவே மாறிவிடுவது வழக்கம். இது, இப்போதும் தொடர்கிறது. இதனால், இந்த அம்பிகையை முத்து மாரியம்மன் என பக்தர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.

அம்மை மண்டபம் 

அம்மை மண்டபம்
அம்மை மண்டபம்

குழந்தைகள், பெரியவர்களுக்கு அம்மை நோய் ஏற்படும்போது அம்பாளுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எந்தவித சிரமமும் இன்றிக் குணமடைகின்றனர். மேலும், அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்து குணமடைந்து செல்வது மரபாக இருந்து வருகிறது. அம்மை கண்டவர்கள் தங்கியிருந்து குணமடைந்து செல்ல தனி அம்மை மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

விழாக்கள்

அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் முத்துப் பல்லக்கு, பூச்சொரிதல், திருவிளக்குப் பூஜைகள் ஆகியவையும் ஆவணி மாதம் ஆண்டுத் திருவிழாவும் கடைசி  ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும் புரட்டாசி மாதம் தெப்ப உற்சவமும்  நவராத்திரி விழாவும் மார்கழியில் லட்சத் திருவிளக்கு விழாவும் மாசி முதல் சித்திரை மாதம் வரை பால்குட விழாவும் நடைபெறும்.

வெல்லக்குளம்

திருக்கோவிலின் உள்புறத்தில் வெல்லக்குளம் உள்ளது. உடம்பில் கட்டி, பரு ஏற்படுபவர்கள் அம்பாளை வேண்டிக் கொண்டு வெல்லம் வாங்கி வந்து  வெல்லக்குளத்தில் இடுவர். வெல்லம் தண்ணீரில் கரைவது போல முகப்பரு, கட்டிகளும் கரைந்துவிடும் என்பது நம்பிக்கை. இது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.

வெல்லக்குளம்
வெல்லக்குளம்

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம்

இந்தத் திருக்கோயிலில் எப்போதும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோடைக் காலத்தில் அம்பாளுக்கு பிரார்த்தனை செய்துகொண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அபிஷேகம் செய்வது நீண்டகாலமாக வழக்கத்தில் உள்ளது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோயிலுக்கு பல்வேறு ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்பாளைத் தரிசித்து பேரானந்தம் அடைகின்றனர். கோடைக்காலத்தில் அம்பாளுக்கு பிரார்த்தனை செய்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து அபிஷேகம் செய்து பரவசம் அடைகின்றனர்.

கொடி மரம்
கொடி மரம்

காணிக்கை

மேலும், பக்தர்கள் தங்களது பிரார்த்தனையின் பேரில் முடி காணிக்கை செலுத்துதல், உயிர்க்கோழி செலுத்துதல், உடல் உறுப்புகளைத் தங்கம், வெள்ளியால் செய்து செலுத்துகின்றனர். ஆடு, மாடுகளையும் காணிக்கையாகச் செலுத்தி மன நிம்மதி அடைகின்றனர்.

கண் கொடுக்கும் காரிகையாய், கண் கண்ட தெய்வமாய், அம்மை நோயைப் போக்கியருளும் அம்பாளாய், புண் போக்கும் தெய்வமாய், தன்னை வணங்கும் அடியார்க்கு இணங்கி அருள் செய்யும் பேரன்னையாய் விளங்கும் இந்தப் புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் 1950, 1987, 2004 ஆம் ஆண்டுகளில் பல்வேறு திருப்பணிகளுடன் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

கோயில் நுழைவுவாயில் அருகேயுள்ள குளம்
கோயில் நுழைவுவாயில் அருகேயுள்ள குளம்


கோயிலுக்குச் செல்வது எப்படி?

விமானம் மூலம் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி சாலை வழியாக இக்கோயிலை அடையலாம். 

ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கி சாலை வழியாக 5 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலைச் சென்றடையலாம்.

பேருந்தில் வருபவர்கள் தஞ்சைப் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாரியம்மன் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

அம்மன் சன்னதி பிரகாரம்
அம்மன் சன்னதி பிரகாரம்

நடைதிறப்பு

இக்கோயிலில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நடை திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
புன்னைநல்லூர்,
தஞ்சாவூர் மாவட்டம் - 613 501.
தொடர்புக்கு: 04362 - 267740

படங்கள் - எஸ். தேனாரமுதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com