திருமணத் தடை நீக்கும் பாலக்கரை வெளிகண்டநாத சுவாமி திருக்கோயில்

திருச்சி, பாலக்கரை, வாய்க்கால் மேட்டுத் தெரு பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாதசுவாமி திருக்கோயில்.
அருள்மிகு வெளிகண்டநாதசுவாமி - அருள்மிகு சுந்தரவல்லி அம்மன்
அருள்மிகு வெளிகண்டநாதசுவாமி - அருள்மிகு சுந்தரவல்லி அம்மன்
Published on
Updated on
6 min read

திருமணத் தடைகளை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது திருச்சி, பாலக்கரை, வாய்க்கால் மேட்டுத் தெரு பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாதசுவாமி திருக்கோயில்.

திருச்சி பாலக்கரை அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாதசுவாமி திருக்கோயில் கருவறைக் கோபுரம்.
திருச்சி பாலக்கரை அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாதசுவாமி திருக்கோயில் கருவறைக் கோபுரம்.

புகழ் பெற்ற மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், அரங்கமாநகர் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில்,  சக்தி திருக்கோயில்களில் முதன்மையான சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற வயலூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வானமே கூரையாய் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோயில்களை உள்ளடக்கியது திருச்சி மாவட்டம்.

இந்த மாவட்டத்தின்  மாநகரப் பகுதியான திருச்சியில் திக்குகள் தோறும் ஐந்துவித நாதர்கள் எழுந்தருளி, நகரைக் காத்து வருகின்றனர். திருச்சியின் கிழக்கில் அருள்மிகு கயிலாசநாதர், வடக்கில் அருள்மிகு பூலோகநாதர், மேற்கில் அருள்மிகு நாகநாதர் மற்றும் காசி விசுவநாதர், தெற்கில் அருள்மிகு வெளிகண்டநாதர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் எழுந்தருளி, ஒவ்வொரு பிரச்னையையும்  தீர்க்கும் பரிகார நாதர்களாகவும் விளங்கி வருகின்றனர்.

மாநகரின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி பாலக்கரையில், உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள அருள்மிகு வெளிகண்டநாதசுவாமி திருக்கோயில், திருமணத் தடைகளை நீக்கும் தலமாகவும், தீவினைகளை நீக்கி உண்மை வாழ்வை வெளிகாட்டும் தலமாகவும் விளங்கி வருகிறது.

பூவுலகின் மையப்பகுதியாக விளங்கும் சிதம்பரம் நடராஜரின் அவதாரமாக விளங்கும் ஆகாசபுரீசுவரர் என்றழைக்கப்படும் வெளிகண்டநாதர், சுந்தரவல்லி அம்மனுடன் இக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

தல வரலாறு
கோயில் கிழக்கு திசை நோக்கி இருந்தாலும், நுழைவுவாயில் தெற்கில் அமைந்துள்ளது. கி.பி. 880-ஆம் ஆண்டுக்குப் பிறகு திருச்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் அனைத்தும் சோழப்  பேரரசின் பகுதியாக மாறியது.

 திருச்சி பாலக்கரை அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாதசுவாமி திருக்கோயில்
 திருச்சி பாலக்கரை அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாதசுவாமி திருக்கோயில்

விஜயாலயச் சோழனுக்குப் பின் வந்த ஆதித்த சோழன், காவிரிப் பாயும் பகுதிகளில்  எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டினான் என்று சுந்தரச் சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. அதன்படி அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாதசுவாமி திருக்கோயிலும் அதே காலத்தில் உருவானதுதான்.

இறைவன் வெளிகண்டநாதசுவாமி
வெளிகண்டர்  என்றால் பரவெளியைக் காண உதவுபவர் என்று தலவரலாறு கூறுகிறது. ஞானத்தின் வெளிச்சமாக இங்கு வெளிகண்டநாதர் எழுந்தருளியிருக்கிறார் என்பதே சுவாமியின் பெருமையாகும்.
வெளி அடக்கம்  உண்டானால் உள் அடக்கமும் கைக்கூடும் என்பது ஆன்றோர் வாக்காகும். வெளி அடக்கம் என்பது ஐம்புலன்களின் அடக்கம்,  ஐம்புலன்களையும் அடக்க வெளி என்பது என்னவென்று உணரவேண்டும்.

அருள்மிகு வெளிகண்டநாதசுவாமி
அருள்மிகு வெளிகண்டநாதசுவாமி

வெளி என்றால் மாயை,  நம்மை சிற்றின்பத்தில் சிக்க வைக்கும் மாயை. அந்த மாயை உணர வைப்பவர் வெளியைக் கண்ட வெளிகண்ட நாதர். இந்த நாதரைப் பற்றிக் கொண்டால் மாயையிலிருந்து தப்பித்து விடலாம். தீவினைகள் நம்மை அணுகாது என்கிறது கோயில் தல வரலாற்றுப் புராணத் தகவல்கள்.

சதுரப் பீடத்தில் வெளிகண்டநாதர்
மற்றக் கோயில்களில் இல்லாத வகையில், இக்கோயிலில் வெளிகண்டநாதர் சதுரப் பீடத்தில் லிங்கத் திருமேனியாக கிழக்குத் திசை நோக்கி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.  

அருள்மிகு வெளிகண்டநாதசுவாமி
அருள்மிகு வெளிகண்டநாதசுவாமி

இவ்வாறு சுவாமி எழுந்தருளியிருப்பதும் சிறப்பு எனக் கூறப்படுகிறது. சப்தகன்னிகளும் வழிபட்ட இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் ஞானமும் தெளிவும் உண்டாகும். இக்கோயிலுக்கு வந்து தியானம் செய்ய பரவெளி தரிசனம் என்னும் அகண்ட வெளித் தரிசனம் நம் மனதுள் நிகழும் என்கின்றனர் பக்தர்கள்.

கோயில் முன் வளாக மகாமண்டபம் முன்பு எழுந்தருளியுள்ள நந்தியெம்பெருமான்.
கோயில் முன் வளாக மகாமண்டபம் முன்பு எழுந்தருளியுள்ள நந்தியெம்பெருமான்.

அபிஷேகப்பிரியரான வெளிகண்டநாதருக்கு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இறைவி சுந்தரவல்லி அம்மன்
மகாமண்டபத்தின் வலதுபுறத்தில் அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் எழுந்தருளியுள்ளார். நான்குத் திருக்கரங்களில் மேல் இரு கரங்களில் தாமரை மலர்களையும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடனும் நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி காட்சியளிக்கிறார்.  

அருள்மிகு சுந்தரவல்லி அம்மன்.
அருள்மிகு சுந்தரவல்லி அம்மன்.

அலங்காரப் பிரியையான அருள்மிகு சுந்தரவல்லி அம்மன்  திருமண வரம் அருளும் தாயாக விளங்குகிறார்.

திருமணம் கைகூடும்
தை மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தன்று நடைபெறும் சுந்தரவல்லி அம்மன் - வெளிகண்டநாதர் கல்யாண உற்சவத்தில் பங்கேற்று,  அன்றிரவு நடைபெறும் வீதியுலா முடிந்து,  கோயிலுக்கு வந்த பின்னர் சுவாமி - அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலைகள் திருமண வரம் வேண்டி நிற்பவர்களுக்கு அளிக்கப்படும்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெறும் பைரவர் சுவாமி.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெறும் பைரவர் சுவாமி.

அந்த மாலையுடன் திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்து, வீட்டிலுள்ள பூஜையறையில் வைத்து  வாரம் ஒருமுறை கற்பூர ஆராதனை காட்டி, வெளிகண்டநாதர் - சுந்தரவல்லி அம்மனை திருமண வரம் வேண்டி பூஜித்து வந்தால், திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கி, திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

மேலும் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், கணவன் -மனைவி இடையேயான பிரச்னையால் தவிப்பவர்கள்,  நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலுக்கு  வந்து வெளிகண்டநாதரையும், மற்ற சுவாமிகளையும் வழிபட்டால் உரிய பலன்களைப் பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருக்கோயில் அமைப்பு
கோயில் முன்வளாகத்தில் மகா மண்டபமும் அதன் நடுவே நந்தியெம்பெருமானும் பலி பீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன.

சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசர் ஆகியோர் எழுந்தருளியுள்ள சன்னதி.
சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசர் ஆகியோர் எழுந்தருளியுள்ள சன்னதி.

மகாமண்டபத்தின் இடதுபுறத்தில் திருமாலின் வாகனமான கருடாழ்வார் சிலை அமைந்துள்ளது. அதன் அருகிலேயே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் எழுந்தருளியுள்ளனர்.

அர்த்தமண்டப நுழைவுவாயிலின் இடதுபுறத்தில் காட்சியளிக்கும் விநாயகர்.
அர்த்தமண்டப நுழைவுவாயிலின் இடதுபுறத்தில் காட்சியளிக்கும் விநாயகர்.

மகாமண்டபத்தை அடுத்த அர்த்த மண்டப நுழைவுவாயிலில் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறத்தில் தண்டாயுதபாணியும் எழுந்தருளியுள்ளனர்.

அர்த்தமண்டப நுழைவுவாயில் வலதுபுறத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி.
அர்த்தமண்டப நுழைவுவாயில் வலதுபுறத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி.

கோயிலின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இறைவனின் தேவக்கோட்டத்தின் தென்திசையில் தட்சிணாமூர்த்தி அமைந்துள்ளார். குருபெயர்ச்சி காலத்தில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

நவக்கிரகங்கள் சன்னதி.
நவக்கிரகங்கள் சன்னதி.

தேவக்கோட்டத்தின் வடதிசையில் பிரம்மா, துர்க்கை திருமேனிகள் அமைந்துள்ளன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு கன்னியர் எலுமிச்சைப் பழ விளக்கேற்றி, நல்ல கணவரைப் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

திருக்கோயிலில் அமைந்துள்ள நாகர், நாகராணி, நாககன்னிகள்.
திருக்கோயிலில் அமைந்துள்ள நாகர், நாகராணி, நாககன்னிகள்.
 திருச்சுற்றின் மேற்குத் திசையில்  அமைந்துள்ள விநாயகர்.
 திருச்சுற்றின் மேற்குத் திசையில்  அமைந்துள்ள விநாயகர்.

திருச்சுற்றின் மேற்குத் திசையில் கோயிலின் காவல் தெய்வமான முத்துக் கருப்பன், விநாயகர்

திருச்சுற்றின் மேற்குத்திசையில் வள்ளி - தெய்வசேனா சமேதராய் காட்சியளிக்கும் சுப்பிரமணியர் சுவாமி.
திருச்சுற்றின் மேற்குத்திசையில் வள்ளி - தெய்வசேனா சமேதராய் காட்சியளிக்கும் சுப்பிரமணியர் சுவாமி.

வள்ளி - தெய்வசேனா சமேதராய் சுப்பிரமணியர்  சன்னதிகளும், வடக்கில் சண்டிகேசுவரர் பைரவர் சன்னதிகள் மற்றும் சனீசுவரன், நாகர் - நாகராணி  சன்னதிகளும் கோயில் திருச்சுற்றில் அமைந்துள்ளன.

திருச்சுற்றின் மேற்குத் திசையில் காட்சியளித்து வரும் கோயிலின் காவல் தெய்வமான முத்துக்கருப்பன்.
திருச்சுற்றின் மேற்குத் திசையில் காட்சியளித்து வரும் கோயிலின் காவல் தெய்வமான முத்துக்கருப்பன்.
தேவக்கோட்டத்தின் வடக்குத் திசையில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்மா.
தேவக்கோட்டத்தின் வடக்குத் திசையில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்மா.
 தேவக்கோட்டத்தின் வடக்குத்திசையில் எழுந்தருளிய துர்க்கை அம்மன்
 தேவக்கோட்டத்தின் வடக்குத்திசையில் எழுந்தருளிய துர்க்கை அம்மன்

அமர்ந்த நிலையில் சூரியன், சந்திரன்
பொதுவாக சிவாலயங்களில் சூரியன் அல்லது சந்திரன் நின்ற நிலையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

அமர்ந்த நிலையிலுள்ள சூரியன்
அமர்ந்த நிலையிலுள்ள சூரியன்

ஆனால், வெளிகண்டநாதசுவாமி திருக்கோயிலில் கருவறைக்கு நேர் எதிர்திசையில் அமர்ந்த நிலையில் சூரியன், சந்திரன்  எழுந்தருளியிருக்கின்றனர். இது மிகவும் விசேஷமானது என்கிறது திருக்கோயில் தலப் புராணத் தகவல்கள்.

அமர்ந்த நிலையிலுள்ள சந்திரன்
அமர்ந்த நிலையிலுள்ள சந்திரன்

சீனிவாசப் பெருமாள் சன்னதி
அம்மன் சன்னதிக்கு அருகிலேயே அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்மிகு சீனிவாசப் பெருமாள் காட்சியளித்து வருகிறார்.

அம்மன் சன்னதிக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காட்சியளிக்கும் சீனிவாசப் பெருமாள்.
அம்மன் சன்னதிக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காட்சியளிக்கும் சீனிவாசப் பெருமாள்.

சிவன் கோயில்களில் இதுபோன்று சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளுவது அரிதான ஒன்று என்கின்றனர் பக்தர்கள்.

இரு மாதங்கள் முழுவதும் சூரியபூஜை
பொதுவாக தமிழ் மாதங்களில் குறிப்பிட்ட 3 நாள்களில்தான் சிவாலயங்களில் சூரியபூஜை வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆனால்,  இக்கோயிலில்  மாசி மற்றும் ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய பூஜை நடைபெறுகிறது.

கருவறைக்குப் பின் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலிங்கோத்பவர் சன்னதி.
கருவறைக்குப் பின் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலிங்கோத்பவர் சன்னதி.

இது மற்ற கோயில்களைக் காட்டிலும் விசேஷமானது. இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சூரிய ஒளிக் கதிர்கள் இறைவன் லிங்கத்திருமேனி மீது படும் நிகழ்வைக் கண்டுத் தரிசிப்பர். மேலும், நவக்கிரகங்களிலுள்ள சூரியன் மீதும் சூரிய ஒளி படுவதும் சிறப்புக்குரியது.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு
இக்கோயிலில் எழுந்தருளிய பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நீதிமன்ற வழக்குகளால், வாகனப் பிரச்னைகளால் அவதிப்படுவோர்  இப்பூஜையில் பங்கேற்றால் உரிய பலன்களைப் பெறலாம் என்பது பக்தர்களின் கூற்றாக உள்ளது.  

பக்தருக்குப் பிரசாதம் அளிக்கும் கோயிலின் பரம்பரை அறங்காவலர் ஆர். கிருஷ்ணமூர்த்தி.
பக்தருக்குப் பிரசாதம் அளிக்கும் கோயிலின் பரம்பரை அறங்காவலர் ஆர். கிருஷ்ணமூர்த்தி.

மேலும் தங்களைப் பிடித்துள்ள பில்லி, சூனியம் விலகும் என்றும், வியாபாரம் அபிவிருத்தி ஆகும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

கோயில் விழாக்கள்
ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகப் பெருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  அப்போது சிவனுக்கு மட்டுமின்றி, அம்மனுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடத்தப்படுவதும் இக்கோயிலில்தான்.   மாசி,  ஐப்பசி மாதங்களில் சூரியபூஜை வழிபாடு, தை மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் திருக்கல்யாணம் போன்றவை  நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும் மகா சிவராத்திரியன்று நான்குகால பூஜை வெகு சிறப்பாக நடைபெறும்.

இவைத் தவிர மாதந்தோறும் பிரதோஷ, பௌர்ணமி வழிபாடு, பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு போன்றவையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் விநாயகருக்கு சங்கடஹர  சதுர்த்தி, துர்க்கைக்கு துர்காம்பிகா பூஜை போன்ற பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறும்.

அம்மன் சன்னதிக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காட்சியளிக்கும் சீனிவாசப் பெருமாள்.
அம்மன் சன்னதிக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காட்சியளிக்கும் சீனிவாசப் பெருமாள்.

அநேக சித்தர்கள்  இங்கு அரூபமாக வந்து வழிபடுவது வழக்கம் என்கின்றனர். வெளிகண்டநாதரின் பேரருளால் சித்துக்கள் பல கற்ற ஞானியர் பலர், பௌர்ணமிகளில் இங்கு வலம் வருகிறார்கள் எனப்படுகிறது.

நிம்மதியில்லாமல் தவிப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு, தியானம் செய்தால் நிம்மதியையும், நல்ல ஆரோக்கியத்தையும் பெறுவர் என்பது பலன் பெற்ற பக்தர்களின் கருத்தாகவுள்ளது.

எப்படிச் செல்வது?  

திருச்சி மத்திய பேருந்து, சத்திரம் பேருந்து நிலையங்களிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் பாலக்கரை பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

திருச்சி பாலக்கரையில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாதசுவாமி திருக்கோயில் நுழைவுவாயில்.
திருச்சி பாலக்கரையில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாதசுவாமி திருக்கோயில் நுழைவுவாயில்.

தென் மாவட்டங்களிலிருந்தும், டெல்டா மாவட்டங்களிலிருந்தும்,  புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களிலிருந்தும்  வருவோர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து, நகரப் பேருந்துகளில் ஜங்ஷன், தலைமை அஞ்சல் நிலையம், மேலப்புதூர், பீமநகர் வழியாக பாலக்கரை பிரபாத் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நடந்து கோயிலுக்குச் செல்லாம்.

வடக்கு, மேற்கு மற்றும் இதர மாவட்டங்களிலிருந்து வருவோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்து,  நகரப் பேருந்துகள் மூலம் மரக்கடை, காந்திச் சந்தை வழியாக பாலக்கரை பிரபாத் திரையரங்கு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கோயிலுக்குச் செல்லலாம். ரயில் நிலையத்திலிருந்தும், விமானநிலையத்திலிருந்தும் இக்கோயிலுக்கு வருவதற்கு ஆட்டோ, கார் போன்ற வாகனங்களின் வசதி உள்ளன.

கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்
காலை 7.20 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும்
மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடைதிறந்திருக்கும்.

தொடர்புக்கு
இக்கோயிலுக்கு வருபவர்கள்  பரம்பரை அறங்காவலர் ஆர். கிருஷ்ணமூர்த்தியை 9942343879 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி
அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாத சுவாமி திருக்கோயில், பாலக்கரை, திருச்சி-1.

படங்கள்: எஸ். அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.