சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் 

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள்
Updated on
4 min read

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதியன்று வரும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, பாடல் பெற்ற சில சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஸ்வேத விநாயகர் - திருவலஞ்சுழி

திருவலஞ்சுழி கோயில் பற்றிய பதிகம் - பாடியவர் பாடியவர்கள் குமாரவயலூர் பாலச்சந்திரன் மற்றும் எம். சுந்தர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 25-வது தலமாக விளங்குவது திருவலஞ்சுழி. திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். அதனால்தான், பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளிவந்தது. தங்கள் தவறை உணர்ந்த தேவர்கள், அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில், பொங்கிவந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன்பின், விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள்.

அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்ய திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன், ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில், இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி இன்றும் அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர்தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாற்றுவார்கள். மேலும், பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாயகரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவிவிடுவார் அர்ச்சகர். அதனால், இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

இந்த விநாயகர் சந்நிதியிலுள்ள கல் ஜன்னல் அக்கால சிற்பக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

வீரஹத்தி விநாயகர் - வேதாரண்யம்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 125-வது தலமாக விளங்குவது வேதாரண்யம். ராமன் இவ்விடத்தில் சமுத்திர ஸ்நானம் செய்து, ராவணனைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. ராமன் பூஜித்த ராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்தில் உள்ளது. ராவணனைக் கொன்றதால் ராமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை இத்தலத்திலுள்ள விநாயகர் விரட்டி அடித்ததால், இவர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி, கோவிலின் மேற்கு வெளிப் பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது.

பிரளயம் காத்த விநாயகர் - திருப்புறம்பியம்

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 46-வது தலமாக விளங்குவது திருப்புறம்பியம். ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில், சிவபெருமான் இத்தலத்தை பிரளயத்திலிருந்து பாதுகாக்கும்படி விநாயகருக்குக் கூறுகிறார். விநாயகரும் பொங்கிவந்த ஏழு சாகரங்களையும், இத்தலத்திலுள்ள திருக்குளத்துக்கு கீழ்கரையில் இருக்கும் ஏழுகடல் கிணறு என்று இப்போது அழைக்கப்படும் கிணற்றில் அடக்கி, பிரளயத்தில் இருந்து இத்தலம் அழியாமல் பாதுகாத்தார். அச்சமயம் வருண பகவான் நத்தைக்கூடு, கடல்நுரை, கிளிஞ்சல் ஆகிய கடல் பொருட்களால் ஒரு விநாயகர் திருமேனியை உருவாக்கி, அவரை பிரளயம் காத்த விநாயகர் என்று பெயரிட்டு இத்தலத்தில் வழிபட்டார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறும். அபிஷகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகர் திருமேனியால் உறிஞ்சப்பட்டுவிடும். தேன் அபிஷேக முடிவில் இத்திருமேனி செம்பவள நிறத்தில் காட்சி அளிக்கும்.

வருடத்தில் மற்ற நாட்களில் இந்த விநாயகருக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை.

பொள்ளாப் பிள்ளையார் - திருநாரையூர்

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 33-வது தலமாக விளங்குவது திருநாரையூர். இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் "பொள்ளாப் பிள்ளையார்" என அழைக்கப்படுகிறார். "பொள்ளா" என்றால் "உளியால் செதுக்கப்படாத" என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியார் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர்.

அனந்தேசர் என்ற பக்தர் இவருக்கு பூஜை செய்து வந்தார். சுவாமிக்குப் படைக்கும் நைவேத்யத்தை பக்தர்களுக்குக் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்வது அவரது வழக்கம். வீட்டிலிருக்கும் அவரது மகன் (சிறுவன்) நம்பியாண்டார் நம்பி அவரிடம் பிரசாதம் கேட்கும்போது, "விநாயகர் சாப்பிட்டுவிட்டார்" என சொல்லிவிடுவார். ஒருசமயம், அனந்தேசர் வெளியூர் செல்லவேண்டி இருந்ததால், மகனை பூஜை செய்ய அனுப்பினார். அவன் விநாயகருக்கு நைவேத்யம் படைத்தான். தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தான். ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். ஆனாலும், நைவேத்யம் அப்படியே இருந்தது. இதனால் சிறுவன் நம்பி, சுவாமி சிலையின் மீது முட்டி நைவேத்யத்தை ஏற்றுக்கொள்ளும்படி முறையிட்டான். விநாயகர் அவனுக்கு காட்சி தந்து நைவேத்யத்தை எடுத்துக்கொண்டார். இப்படி தன் மீது நிஜபக்தி செலுத்துவோரின் வேண்டுதல்களை ஏற்று அருள்பவராக இத்தல விநாயகர் விளங்குகிறார்.

திருமுறை காட்டிய தலம்

பொள்ளாப் பிள்ளையாரின் எல்லையற்ற கருணையினால்தான் தேவாரப் பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. மூவர் பாடிய தேவாரப் பாடல்களை தொகுக்க ராஜராஜ சோழன் முயற்சித்தான். அவனுக்குப் பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டான். நம்பி, விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறை சுவடிகள் இருப்பதாகக் கூறியது. (இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது). சோழ மன்னனும் திருமுறைகள் வைக்கப்படிருந்த அறையை திறந்து திருமுறைகளை வெளிக்கொணர்ந்தது வரலாறு.

செவி சாய்த்த விநாயகர் – அன்பில் ஆலாந்துறை

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 57-வது தலமாக விளங்குவது அன்பில் ஆலாந்துறை. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செவி சாய்த்த விநாயகர் என்று பெயர். ஒருமுறை திருஞானசம்பந்தர், கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது, கொள்ளிடம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. காவிரியின் தென்கரையிலிருந்த சம்பந்தரால் கொள்ளிட நதியைக் கடந்து கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்றபடியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்துவந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக, விநாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்துக் கேட்டு ரசித்தார். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் பாட்டை ரசித்த அக்காட்சியை சிற்பமாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இவ்வாலயத்தில் காட்சி தருகிறது. பார்த்து இன்புற வேண்டிய சிற்பம்.

காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.

துணையிருந்த விநாயகர் - திருப்பனையூர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 73-வது தலமாக விளங்குவது திருப்பனையூர். முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது. அவனது தாய்மாமன் "இரும்பிடர்த்தலையார்" என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து, இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல விநாயகர் "துணையிருந்த விநாயகர்" என்னும் பெயர் பெற்றார்.

வாதாபி கணபதி – திருசெங்காட்டங்குடி

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 79-வது தலமாக விளங்குவது திருசெங்காட்டங்குடி. விநாயகர் வழிபாடு தமிழகத்தில் உருவாகக் காரணமாக இருந்தவர் இத்தலத்திலுள்ள வாதாபி விநாயகர். பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்த பரஞ்ஜோதி, ஒருசமயம் வடநாட்டுக்குப் போருக்குச் சென்றார். சாளுக்கிய மன்னன் புலிகேசியை வென்று, சாளுக்கிய நாட்டின் தலைநகரமான வாதாபி என்ற ஊரில் இருந்த கணபதி சிலையை, தன் வெற்றியின் அடையாளமாக தமிழகம் கொண்டு வந்தார். தன்னுடைய சொந்த ஊரான இத்தலத்தில் அந்தச் சிலையை பிரதிஷ்டை செய்தார். வாதாபியிலிருந்து வந்ததால் இந்த விநாயகர் வாதாபி கணபதி என்ற பெயர் பெற்றார். இந்த விநாயகர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருவது விசேஷம்.

விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com