கிரகங்களின் கண்ணாமூச்சி விளையாட்டு!

அகப்பட்டுக்கொண்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பதெல்லாம்..
குரு பகவான்
குரு பகவான்
Published on
Updated on
3 min read

– ஜோதிடர் சோ.சந்திரசேகரன்

ஜோதிடத்தில் ஒன்பதாம் இடமென்பது மிகச் சிறந்த இடமாகும். இதைத் திரிகோண ஸ்தானம் என்பார்கள். ஒன்றாம் இடம், 5-ம் இடம், ஒன்பதாம் இடம் ஆகியவை திரிகோண ஸ்தானங்கள்.

ஒன்றாம் இடம், நான்காம் இடம், ஏழாம் இடம், பத்தாம் இடம் ஆகியவை கேந்திர ஸ்தானங்கள். ஜோதிட சாஸ்திரத்தில், கேந்திர ஸ்தனமும், திரிகோண ஸ்தானமும் மிக உயர்வாகப் போற்றப்படுகின்றன. கேந்திர ஸ்தானத்தைக் காட்டிலும் திரிகோண ஸ்தானம் மிக உயர்வாகவே கருதப்படுகிறது. 5-ம் இடத்து அதிபதியோ அல்லது அங்குள்ள கிரகங்களோ அல்லது 9-ம் இடத்தின் அதிபதியோ அல்லது அதிலுள்ள கிரகங்களோ நல்ல பலன்களையே செய்யும் என்று கூறுவார்கள். எல்லா ஜோதிட நூல்களும் இக்கருத்தை ஆமோதிக்கின்றன.

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, மேற்கூறிய கருத்துகள் எப்படி ஒத்துப்போகின்றன என்று பார்ப்போம்.

இந்த ஜாதகர் பிறந்த தேதி 02-11-1943. நேரம் காலை 11.25. ஊர் மதுரை இவருக்கு லக்கினாதிபதி குரு; அவர் 9-ல். அதாவது திரிகோண ஸ்தானத்தில் குருவானவர் லக்கினாதிபதி மட்டும் இல்லாது, ஒன்பதாம் இடத்திலும் உள்ளார். லக்கினத்தையும் பார்க்கிறார். பல நல்லதுகளைச் செய்ய வேண்டும். அதுவும் அவர் சுய தசையில் செய்தாக வேண்டும். அப்படிச் செய்தாரா என பார்ப்போம்.

இவருக்கு குரு தசை 16.06.2007–ல் ஆரம்பமானது. அது 16 ஆண்டுகள், அதாவது 15.06.2023 முடிய நடைபெறும். இதில் பல நல்லவற்றை இவருடைய குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். அதாவது, இவருடைய 64-வது வயது முதல் நடைபெறவுள்ள குரு தசையில் பல நல்லவற்றை எதிர்பார்த்து இருந்தனர். நடந்தது என்ன? என்பதுதான் அனுபவபூர்வமான உண்மை.

இவருக்கு 2007 முதல் சிறிது சிறிதாக மறதி ஏற்பட்டது. இது வயதின் கோளாறு என்று ஆரம்பத்தில் எளிதாக எடுத்துக்கொண்டனர். 2010 முதல் மறதியின் தாக்கம் அதிகமாயிற்று. அவர் தான் யார் என்பதையே மறக்க ஆரம்பித்தார்.

தன் மனைவி, மக்கள், சுற்றத்தினர் யாரையும் தெரியாமல் மறதியில் இருந்தார். தற்போது, கண்ணாடியில் காணும் தன் உருவத்தையே “யாரோ ஒருவன் என் உருவத்தில் இங்கு வந்திருக்கிறான்” எனக் கூப்பாடு போட ஆரம்பித்தார். கண்ணாடியை உடைக்கவும் செய்தார். 2015-ம் ஆண்டிலும் இதே நிலைதான். பார்க்காத வைத்தியம் இல்லை. அலோபதி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் என பல வைத்திய முறைகளையும் செய்து பார்த்தாகிவிட்டார்.

குரு தசை ஆரம்பித்து எட்டு வருடங்களாக இந்த நிலைதான். முன்னேற்றம் இல்லை. பல ஜோதிடர்களிடம் கேட்டுப் பார்த்தார்கள். சிலர் கோட்சாரத்தைக் காட்டி சரியில்லை என்றார்கள். இன்னும் சிலர் “இவர் ஜாதகத்தில் பித்ருகாரகனான சூரியனுடன் கேந்திராதிபத்தியம் பெற்ற புதன் சேர்ந்திருப்பதால் இது பித்ருதோஷம்’’ என்றார்கள். ஆகையால், பல பரிகாரங்களைக் கூறினார்கள்.

‘’எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்றிருப்பவர்களுக்கு எதையாவது செய்து நோய் தீராதா என்று சொன்னதையெல்லாம் செய்தார்கள்.

பலன் - எந்த முன்னேற்றமும் இல்லை. அவருடைய கழிவுகளை மற்றவர்கள் அகற்ற வேண்டிய நிலையில்தான் இருக்கிறார். இத்துடன் இவருடைய அல்லல்களை நிறுத்திக்கொள்வோம்.

“அகப்பட்டுக்கொண்டவனுக்கு அஷ்டமத்தில் சனி; ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு” என்பதெல்லாம் என்னவாயிற்று? லக்கினாதிபதி திரிகோண ஸ்தானம் ஏறியும் அவர் தசை ஏன் நல்லதைச் செய்யவில்லை.

லக்கினத்துக்கு குருவின் பார்வை இருந்தும், இந்த புத்தி மாறாட்டம், அதுவும் குரு தசையிலேயே இருக்கிறதே, ஏன்? என பல கேள்விகளுக்குப் பதில் தேவையாக இருக்கிறது.

இந்த ஜாதகத்தின் பாவகத்தைப் போடுவோம். அதாவது Placidus முறையில் பாவகத்தைப் போடுவோம். அதாவது Raphels Table of Houses உதவியுடன் பாவகக் கட்டத்தைப் போடுவோம். கீழே இருப்பதுதான் பாவகக் கட்டம்.

இந்த பாவகம் தெரிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை. தெரியாதவர்களுக்கு விளக்கம்..

லக்கினம் தனுசுதான். அது 28 பாகை 49 கலைகளுக்குத்தான் ஆரம்பமாகிறது. முதல் பாவகம் தனுசில் 28 பாகை 49 கலைகளில் ஆரம்பித்து, கும்பத்தில் 0 பாகை 35 கலைகளில் முடிகிறது.

இரண்டாம் பாவகம் கும்பத்தில் 0 பாகை 35 கலைகளில் ஆரம்பித்து மீனத்தில் 4 பாகை 14 கலைகளில் முடிகிறது. இவ்வாறு, ஒவ்வொரு பாவகமும் எந்தப் பாகையில் ஆரம்பித்து, எந்தக் கலைகளில் முடிகிறது எனக் காட்டியுள்ளோம்.

மேற்கண்ட ஜாதகத்தில், குரு 8-ம் பாவகத்தில் இருக்கிறார். அது, 1 பாகை 26 கலைகளில் இருக்கிறது. அது மகம் நட்சத்திரத்தில், அதாவது கேதுவின் சாரத்தில் இருக்கிறது. ஆக, கேதுவின் பலனைத்தான் குரு பெருமளவில் கொடுப்பார்.

கேது, இரண்டாவது ராசியில் இருந்தாலும், முதல் பாவத்தில்தான் இருக்கிறார். கேது, சனியின் வீட்டில் இருப்பதால் சனியின் பலனைக் கொடுக்க வேண்டும்.

சனி 6-ம் பாவகத்தில் 3 பாகை 09 கலைகளில் இருக்கிறார். ஆக, கேதுவானவர் ஒன்றாம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிப்பதால், அவர் உடல் சம்பந்தமான நோய்களைக் கொடுப்பவர் ஆகிறார். அவர் சாரத்தில் குரு இருப்பதால், குருவுக்கு நோயைக் கொடுக்கும் அதிகாரம் வந்துவிடுகிறது. ஆக, குரு தன் தசையில் உடல் நோயைக் கொடுத்துவிட்டார்.

இவருக்கு ஏன் மனது, புத்தி சம்பந்தமான நோய் வர வேண்டும். ஜாதகத்தை சற்று அலசிப் பாருங்கள்.

சனியானவர் சந்திரனை 180 பாகை பார்வையால் 6-ம் வீட்டிலிருந்து பார்க்கிறார். இந்தப் பார்வைக்கு opposition எனப் பெயர். இது ஒரு கெட்ட பார்வை. ஆக, இவர் மனது சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஆளாக்கக் கூடியவர்.

அடுத்ததாக, புத்திக்கு அதிபதியான புதன், ராகு - கேதுவின் 90 பாகைப் பார்வையில் வருகின்றார். இந்தப் பார்வைக்கு Square எனப் பெயர். இதுவும் ஒரு கெட்ட பார்வையே.

சந்திரன் மற்றும் புதன் கெட்டிருப்பதால், ஜாதகருக்கு மனது மற்றும் புத்தி சம்பந்தமான நோய்கள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

குரு, நோயைக் கொடுக்கும் அதிகாரம் பெற்றதால், அவர் தசையில் மனநோய்க்கு இவர் ஆளானார்.

இன்னொரு வேடிக்கையையும் பாருங்கள்.

இவருக்கு ராசிக் கட்டத்தில் ராகுவானவர் 8-ம் வீட்டில் இருக்கிறார். ஆக, இவருக்கு ராகு தன் தசையில் சொல்லொணாக் கஷ்டங்களைக் கொடுத்திருக்க வேண்டும். அதுதான் இல்லை.

ராகு தசையில் நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்தார். இவர் அரசாங்கத்தில் பணிபுரிந்து வந்தார். ராகு தசையில் எந்தக் கஷ்டங்களும் இன்றி வாழ்க்கையை நடத்தினார்.

ராகு, புதன் நட்சத்திரமான ஆயில்யத்தில் இருந்ததால், புதன் கொடுக்க வேண்டிய பலன்களைக் கொடுத்தார். ஆக, ராகு தசையில் நல்ல பலன்களைப் பெற்ற இவர், லக்கினாதிபதியான 9-ம் வீட்டில் உள்ள குரு தசையில் தான் யார் என்று தெரியாமலேயே வாழ்ந்துவரும் வாழ்க்கையைப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com