
மண் தோன்றியதோ, மங்கை தோன்றியதோ என்று சொல்லும் அளவுக்கு, உலகம் தோன்றுவதற்கு முன்பே, உத்தரகோசமங்கை கோயில் தோன்றியதாகக் கூறும் வழக்கம் உண்டென்றால், இந்த கோயிலின் தனிச் சிறப்பைப் பற்றி தனியாக சொல்லவும் வேண்டுமோ..
சொல்லத்தான் வேண்டும்.. இன்று குடமுழுக்குக் கண்டிருக்கும் திருஉத்தரகோசமங்கை என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோயில், ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் உள்ளது அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில். மங்களேசுவரி சமேத மங்களநாத சுவாமி இக்கோயிலில் அருள்புரிகிறார்.
பார்வதிக்கு உபதேசம்!
மீனவரின் மகளாகப் பிறந்த பார்வதி தேவிக்கு சிவபெருமான், விமோசனம் கொடுத்து, திருமணம் செய்து, வேதாகம ரகசியத்தை உபதேசம் செய்த இடம் திரு உத்தரகோசமங்கை. "உத்தரம்' என்றால் உபதேசம் என்றும், "கோசம்' என்றால் ரகசியம் என்றும் பொருள். "மங்கை' என்றால் பார்வதி. உத்தரம் - கோசம்- மங்கை- இவை மூன்றும் இணைந்து திருஎன்ற அடைமொழியுடன் திருஉத்தரகோசமங்கை என்ற பெயர் ஏற்பட்டது. மங்களநாதசுவாமி கோயில் என்ற பெயரை விடவும், திருஉத்தரகோசமங்கை கோயில் எங்களே பக்தர்களால் அழைக்கப்படுகிறது. அது மட்டுமா? ஆதி சிதம்பரம், பூலோக கைலாயம், சிவபுரம், தட்சிண கைலாயம், பொன்னம்பலம், சிற்றம்பலம் என்று பல பெயர்களால் இத்தலம் சிறப்பிக்கப்படுகிறது.
இத்தலத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், இத்தல இறைவனை வேதவியாசர், மிருகண்டு மகரிஷி, மயன், பாணாசுரன், மண்டோதரி, பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார் போன்றோர் வழிபட்டுள்ளனர் என்ற தகவலும் காணக் கிடைக்கிறது. ஒவ்வொரு கோயிலிலும் இரவு நடைபெறும் பள்ளியறை பூஜையின் போது பாடப்படும் "திருப்பொன்னூஞ்சல்' பாடலை மாணிக்கவாசகர் இந்தத் தலத்தில்தான் அருளினார் என்பதும், அருணகிரிநாதர், இத்தல இறைவனைப் போற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார் எனவும் இத்தலம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
எந்த தலத்துக்கும் இல்லாத சிறப்பு..
சிவபெருமானின் திருவடியை பிரம்மா பார்த்ததாக தாழம்பூ பொய் உரைத்ததால் சிவன் அதனை தனது பூஜையிலிருந்து ஒதுக்கி வைத்தார். அதனால்தான் எந்தக் கோயிலிலுமே எந்த கடவுளுக்கும் தாழம்பூ சாத்தப்படுவதும் இல்லை. பூஜையிலும் சேர்க்கப்படுவதுமில்லை.
ஆனால் இக்கோயிலில் மட்டும் சிவபெருமானுக்கு தாழம்பூ படைத்து வணங்கப்படுகிறது. அதற்குக் காரணம், தவறை உணர்ந்துகொண்ட பிரம்மா இக்கோயிலில் ஒரு தீர்த்தம் உண்டாக்கினார். அதை பிரம்ம தீர்த்தம் என்கிறார்கள். அதேபோல் தாழம்பூ தவமிருந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. இருவருக்கும் காட்சியளித்த இறைவன் இத்தலத்தில் தாழம்பூவை பூஜைக்குப் பயன்படுத்துவதற்கு உறுதியளித்ததாக ஐதீகம்.
மரகத நடராஜர்
ஒவ்வோர் ஆண்டும் சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஆனால் இக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்திற்கும், ஸ்படிக லிங்கத்துக்கும் நாள்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை பக்தர்கள் மிக அருகே அமர்ந்து காணும் பாக்கியமும் கிடைக்கப்பெறும். கோயிலில் சரியாக 12 மணிக்கு மரகத நடராஜர் சந்நிதியில் உள்ள மரகத லிங்கத்துக்கும், ஸ்படிக லிங்கத்துக்கும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்தக் கோயில் வளாகத்திற்குள்ளே நடராஜருக்கென்று தனி சந்நிதி உள்ளது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதக்கல்லால் ஆன நடராஜர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
மார்கழி மாதம், திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கிறது. நடராஜருக்கு தினசரி அபிஷேகம் இல்லாததால் அவரது பிரதிநிதிகளாக இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆருத்ரா தரிசனத்தன்று பச்சை மரகதக்கல் நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
பச்சை மரகதக்கல் மிகவும் மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்கும் சக்தி இல்லாதது. எனவே இந்தச் சிலையை சந்தனக் கலவையைப் பூசி பாதுகாத்து வருகின்றனர். திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப் பூச்சு கலைக்கப்படுகிறது. அன்று முழுவதும் பக்தர்களுக்கு நடராஜர் தரிசனம் தருவார். அன்றைய நாளில் நடராஜருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பின்னர் அதிகாலை 4 மணிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சூரிய உதயத்துக்கு முன்பாக விசேஷ தீபாராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.
சுயம்பு மூர்த்தி
இத்தல இறைவன் சுயம்புவாக இலந்தை மரத்தடியில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அந்த இலந்தை மரம் கோயிலில் வீற்றிருக்கிறது.இத்தலம் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டிருப்பதால், இலந்தை மரத்துக்கும் அத்தனை வயது என்று கணக்கிடப்படுகிறது. இலந்தை மரமே இத்தல விருட்சமாகவும் வணங்கப்படுகிறது.
இத்தலத்தில் மாணிக்கவாசகரே லிங்கவடிவில் அருள்பாலிக்கிறார். ஸ்படிக லிங்கம் அமைந்திருப்பதும் கூடுதல் சிறப்பு.
அம்பிகை சந்நிதிக்கும் கோபுரம்
உத்தரகோசமங்கை கோயிலில் ஈசன் சந்நிதிக்கு எதிரே ஏழுநிலைகொண்ட அரசகோபுரமும், அம்பிகை சந்நிதிக்கு எதிரில் சிவசக்தி என்ற பெயரில் ஐந்துநிலைகொண்ட கோபுரமும் அமைந்திருக்கிறது.
சஹஸ்ர லிங்கம்
ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சஹஸ்ர லிங்கம் இக்கோயிலில் அமைந்துள்ளது. சில குறிப்பிட்ட சிவாலயங்களில் மட்டுமே சஹஸ்ர லிங்கத்தை வழிபட முடியும். இந்த ஆயிரம் சிவலிங்கங்களுக்கும் தனித்தனி திருநாமங்களும் இருக்கின்றன என்பதுதான் வெகுசிறப்பு.
எங்கே இருக்கிறது?
ராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள திருஉத்தரகோசமங்கை விலக்குச்சாலை வழியாகச் சென்றால் இந்தத் திருக்கோயிலை அடையலாம். ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்
கோயில் நடை நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.