திருவண்ணாமலையில் உள்ள இடுக்குப் பிள்ளையார் கோயில் பற்றி சமீப நாள்களாக நடைபெற்ற சம்பவங்களால் அனைவரின் மத்தியில் பேசப்படும் ஒரு கோயிலாக மாறியுள்ளது. இடுக்குப் பிள்ளையார் கோயில் எங்கு உள்ளது? என்ன பலன்? யாருக்கு நுழைய தடை? இக்கோயில் பிரசித்தி பெற்றதன் காரணம் என்ன? என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
திருவண்ணாமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களுள் அக்னி தலமாகப் போற்றப்படுகிறது. அண்ணாமலையாரைத் தரிசிக்க உள்ளூரில் மட்டுமல்லாது வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அமாவாசை, பௌர்ணமி மட்டுமல்லாது விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சிவ பெருமானைத் தரிசித்துவிட்டுத் திரும்புகின்றனர். திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலப்பாதை மொத்தம் 14 கி.மீ. ஆகும். இயற்கையான மலையைச் சுற்றி தினந்தோறும், சித்தர்களும், ரிஷிகளும் பக்தர்களோடு பக்தர்களாக மலைவலம் வருவதாக ஐதீகம்.
கிரிவலம் செய்யப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பலன் உள்ளது. ஒருசிலர் மாதாமாத பௌர்ணமி நாளில் தவறாமல் கிரிவலத்திற்குச் சென்றுவிடுவார்கள். ஏனெனில், இக்கோயிலைக் கிரிவலம் வந்தால் நினைத்து நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை.

கிரிவலப் பாதையில்..
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது இடுக்குப் பிள்ளையார் கோயில். குபேரன் கோயிலுக்கு அருகில் உள்ளது.
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலின் உப கோயிலான கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ இடுக்கு பிள்ளையார் கோயில், நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயிலின் நுழைவு வாயில் சுமாா் ஒரு அடி அகலமும், ஒன்றே முக்கால் அடி உயரமும் கொண்டது.
இக்கோயில் பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருந்தாலும், பக்தர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றது. கிரிவலம் வரும் பக்தர்கள் பலரும் இடுக்குப் பிள்ளையாரை தரிசிக்காமல் செல்வது இல்லை.
பக்தர்கள் இந்த நுழைவு வாயில் வழியே உள்ளே சென்று பிள்ளையாரை வழிபட்டுவிட்டு வெளியே வருவது நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழக்கத்திலிருந்து வரும் நடைமுறையாகும்.
குறுகலான பாதை
இடுக்குப் பிள்ளையாரை தரிசிக்கச் செல்ல மூன்று வாசல்கள் உள்ளன. பின்வாசல் வழியாக நுழைந்து, நடுவழியைத் தாண்டி பின்பு முன்வாசல் வழியாக வர வேண்டும். இக்கோயில் மிகவும் குறுகலான பாதையைக் கொண்டிருக்கும் என்பதால், கோயிலுக்குள் நுழைய படுத்துத் தவழ்ந்து மெதுவாக கைகளை ஊன்றியவாறு தான் செல்ல வேண்டும்.
குறுகலான பாதை என்பதால், உடல் பருமன் உள்ளவர்கள் சென்று வருவதற்கு சற்று கடினம். மெலிந்து இருப்பவர்கள் சர்வசாதாரணமாக உள்ளே சென்று வந்துவிடுவர். இக்கோயிலில் நந்தி இருப்பது மேலும் விசேஷம்.

என்ன பலன்?
இந்த பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்து வந்தால், குழந்தைப் பாக்கியம்,நோய்கள், உடல் வலி தீரும். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலுக்குள் நுழைய நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
யாரெல்லாம் கோயிலுக்குச் செல்ல தடை
இடுக்குப் பிள்ளையார் கோயிலில் அண்மைக் காலமாக நடைபெற்ற அசம்பாவிதங்களால் இக்கோயிலுக்குள் நுழைய ஒருசில தடையைக் கோயில் நிர்வாகம் சமீபத்தில் விதித்துள்ளது.
அந்தவகையில், உடல் பருமன் உள்ளவர்கள் நுழையும்போது ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், இனிவரும் காலங்களில் உடல் பருமனானவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்கள் இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்குள்ளே சென்று வழிபடக் கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்புப் பதாகையும் கோயில் முன் நிறுவப்பட்டுள்ளது. ஒரு அடி அகலம் கொண்ட நபர்கள் மட்டுமே உள்ளே செல்லும் வகையில் கோயில் முகப்பில் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு
இடுக்கு பிள்ளையாா் கோயிலில் பாதுகாப்புப் பணியில் பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலைக்கு பக்தர்கள் அதிகளவில் வருவதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையின் மூலம் போதிய பாதுகாப்பு வழங்க சுழற்சி முறையில் போதிய காவலர்களை அனுப்பக் கோரி இடுக்கு பிள்ளையார் கோயில் நிர்வாகம் சாா்பில் கோரப்பட்டுள்ளது.
உதவி எண் அறிவிப்பு
பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவசரகால உதவிக்கு தொடர்புகொள்ளத் திருக்கோயில் பணியாளர் - 9047937733, தீயணைப்புத் துறை -9445086172, காவல் துறை - 9498100439, மருத்துவத் துறை - 843811175 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிவலப் பாதையில் உள்ள இடுக்குப் பிள்ளையாரை தரிசிப்போம், நம் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் இடிப்பு!

ஆடி பெளா்ணமி: திருவண்ணாமலையில் 5 லட்சம் பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக ஒசூா் பேருந்து நிலையத்தில் திரண்ட பக்தா்கள்: கூடுதல் பேருந்துகளை இயக்காததால் தவிப்பு

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையாா் கோயிலில் சிக்கிய பெண் பக்தர்!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



