இறைவன் இருக்கிறானா? இல்லையா? விதியை வெல்வது பற்றி அப்பைய தீட்சிதர் கூறுவது..!

என்ன விதி? என விதியை நோவுறது மனித இயல்பாகிப் போய்விட்டது. எப்பவுமே எனக்கு மட்டும்....
இறைவன் இருக்கிறானா? இல்லையா? விதியை வெல்வது பற்றி அப்பைய தீட்சிதர் கூறுவது..!
Published on
Updated on
2 min read

என்ன விதி? என விதியை நோவுறது மனித இயல்பாகிப் போய்விட்டது. எப்பவுமே எனக்கு மட்டும் நடக்கிறதென்னவோ, தாறுமாறா நடக்கிறதே, எனக்கு நேரமே சரியா இராதுபோல என்று நேரத்தையும்  நொந்துக்குவோம்.

இன்னும் சிலரோ, நான் எதைச் செய்தாலும் வில்லங்கமாகவே ஆகிறதே, இறைவன் இருக்கிறானா? இல்லையா! என இறைவனிடனிமும் கடுமை காட்டுவோம். நீ அங்கெல்லாம் போகதடா, உனக்கு காலம்  போதாமக் கிடக்கிறதென்று, பிள்ளைகளைக்கூட வழி தடுப்பர் சில பெற்றோர்கள். இதெல்லாம் ஏன் நடக்கிறது? இதெல்லாம் நடவாமல் இருக்க வழியே இல்லையா? என யோசனைகள் ஆராயப்படும்.

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது......, காலம், நேரம், விதி போன்றவைகளுக்கும் கால நேர விதி இருக்கிறது. நாம் முன்பு சேமித்து வைத்திருந்ததை இப்போது எடுத்துச் செலவழிக்கிறோம்  அவ்வளவுதான். அனுபவிக்க வேண்டிய வினைப்பயனை, ஏதொரு துரதிருஷ்டவசத்தால் அனுபவிக்காமல் தள்ளிப்போனால், அதை அனுபவிப்பதற்காக, நாம் மறுபடியும் பிறப்பெடுக்கும் நிலை உருவாகும்.

ஆகவே, கேடு வினைப்பயன்களை இப்பிறவியிலேயே அனுபவித்துக் கழித்து விடவேண்டும். அப்பைய தீட்சிதர் எனும் தவசீலர், தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல  சாதனைகள் புரிந்தவர் ஆவார். இவருடைய காலம் 1520 முதல் 1593 வரை, 73 ஆண்டு கால வயது வரை வாழ்ந்த சீலர்.

பாமர மக்களிடம் சிவ தத்துவத்தையும், அத்வைதத்தையும், புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்திக் காட்டியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும்  இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். இவருடைய புகழ் வடநாட்டிலும், காசி வரையில் பரவியிருந்தது.

இந்து சமயத்தின் தாங்குசக்திகளான கருமம், பக்தி, ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே வாழ்ந்து காட்டி மறைந்தவர். தீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித  வயிற்று வலி (சூளை நோய்) அவரை மிகவும் வாட்டி எடுக்க, அதன் வேதனையை, விரும்பி ஏற்ற வண்ணம், அதை ஒழிக்க மருந்து எடுத்துக் கொள்ளாது இருந்து அனுபவித்து வந்தார்.

இவர் சிறந்த யோக சக்திகள் உடையவர் ஆதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியமானவருடன் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தாலோ, அந்தச் சமயத்தில்,.........ஒரு தர்ப்பை புல்லை தன் அருகில் போட்டு விட்டு, அந்த புல்லின் மேல் அந்த வலியை தன் தவ சக்தியால் இறக்கி வைத்துவிடுவார். அதன்பின்பு, ஆலோசனைகளிலும், வேலைகளிலும் ஈடுபடுவார்.

தன் மீது இறக்கி வைக்கப்பட்ட வயிற்றுவலியைப் பெற்றுக் கொண்ட, அந்தப் புல்லானது, அது பாட்டுக்கு இப்படி அப்படி என்று துள்ளிக்கொண்டே இருக்கும். வேலைகளும், ஆலோசனைகளும்  இறுதிபட்டவுடன், புல்லிடமிருந்து அந்த வயிற்று வலியை திரும்ப தனக்குள் வாங்கிக் கொள்வார்.

ஒரு பண்டிதருடன் இவ்வாறு ஒருமுறை வாதத்தில் ஈடுபட்டபோது, வழக்கம் போல, தமது வலியைத் தற்காலிகமாக தர்ப்பை புல்லின் மேல் இறக்கி வைத்துவிட்டு வாதம் புரியலானார். புல்லும்  அதுபாட்டுக்கு துள்ளிக் குதித்தது. ஒரு கட்டத்தில் வாதம் மிகவும் தீவிரமடைய, உட்கார்ந்திருந்த இருவரும் நின்றுகொண்டு வாதம் புரியலாயினர். அந்தச் சமயத்தில் புல் துள்ளுவது அதிகரித்து சற்று  உயரமாகவே துள்ளிக் குதித்தது.

இதை ஆச்சரியத்துடன் பார்த்த அந்தப் பண்டிதர் தீட்சிதரிடம்,......இவ்வளவு தவ வலிமை கொண்ட நீங்கள் ஏன் நிரந்தரமாக அந்த வலியை போக்கிக்கொள்ளக்கூடாது? எதற்கு புல்லின் மீது இறக்கி  வைத்துவிட்டுத் திரும்பவும் ஏற்றுக்கொள்கிறீர்கள்? என்று கேட்டார்.

இந்த வயிற்று வலி என் கர்ம வினையால் எனக்கு வந்தது. நமது முந்தைய செயல்களினால் ஏற்படும் கர்ம வினையை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க எண்ணக்  கூடாது. முற்பிறப்பில் நான் செய்த சிறு பாவத்தின் பலன் தான் இந்த சூளை நோய். இப்போது நான் இதை அனுபவிக்கவில்லை எனில், இதை அனுபவிப்பதற்காகவே நான் இன்னுமொரு பிறவி எடுக்க  நேரிடும். அதற்காகத் தான் புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டுத் திரும்பவும் ஏற்றுக்கொள்கிறேன்! என்றாராம்.

மிகப் பெரிய தவசீலர்களே கர்மாவிலிருந்து தப்பிக்க நினைக்காமல் அதை அனுபவித்துத் தீர்க்கவே முனைந்திருக்கிறார்கள். நாமெல்லாம் எம்மாத்திரம்?

சிவ சிந்தனைகளால் மட்டுமே விதியை வெல்லலாம் 
"வென்றிடலாகும் விதி வழி தன்னையும்" என்றார் திருமூலர்.

சிவம் சாருவோம், சிவ நெறி கொள்வோம், தேவாரம் வாசிப்போம், சைவம் வளர்ப்போம், அடியார்க்கு உதவுவோம், ஈசனாலய உழவாரம் கலப்போம், ஆலய கட்ட உபயம் செய்வோம். முழுக்க முழுக்க  சிவனடியார்களால் உருவானவைதான், நவகயிலாயங்களில் கேது தலமான இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில். இப்போது, இக்கோயிலுக்கு ஏழுநிலை இராஜகோபுரம் கட்டும் பணி உபயதாரர்களால்  உயர்வு பெற்று வருகிறது.

இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் ஏழுநிலைத் திருக்கோபுரத்திற்கு உபயதாரர்கள் அனுப்பும் உபயங்கள், விரைந்து வந்து சேர்ந்து நான்காம் நிலைத்தள பணியை எட்டி உயர்ந்து வருகின்றன. நாம்  மனமுருகி சிவ தொண்டுக்கு உதவி, உபயம் செய்தால் நம் சந்ததிக்கு எவ்வளவோ புண்ணியம் தனமாகும். வினைப்பயனை இப்பிறவியிலேயே கொஞ்ச கொஞ்சமாகக் கழித்து விடலாம்.

தொடர்புக்கு: 
கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு
கோவில்பட்டி - 628 501
தூத்துக்குடி மாவட்டம்
தொலைபேசி: 99946 43516 / 9842263681

- கோவை.கு.கருப்பசாமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com