

திருத்தணி முருகன் கோயிலில், மாசி மாத பிரம்மோற்சவம் பிப்ரவரி 19 -இல் கொடியேற்றத்துடன் தொடங்கி, மார்ச் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆண்டு தோறும் திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான பிரம்மோற்சவம் பிப்ரவரி 19 -ஆம் தேதி இரவு அங்குரார்ப்பணம், விநாயகர் வீதியுலாவுடன் தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து, 20 -ஆம் தேதி காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும்.
அன்று இரவு உற்சவர் முருகப்பெருமான் கேடய வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து,
21 -ஆம் தேதி காலை வெள்ளி சூரிய பிரபையிலும், இரவு பூத வாகனத்திலும், 22 -ஆம் தேதி காலை சிம்மவாகனத்திலும், இரவு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 23 -ஆம் தேதி காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி நாக வாகனத்திலும், 24 -ஆம் தேதி காலை, அன்ன வாகனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்திலும், 25 -ஆம் தேதி மாலை புலி வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும், மேலும் 26 -ஆம் தேதி வெள்ளி மயில் வாகனத்திலும் உற்சவர் முருகப்பெருமான் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
தொடர்ந்து, 27 -ஆம் தேதி காலை யாளி வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் முருகப்பெருமான் பவனி
வருகிறார்.
அன்று நள்ளிரவு 1 மணிக்கு முருகர், வள்ளியம்மை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர், 28 -ஆம் தேதி காலை கேடய உலாவும், மாலை கதம்பப் பொடி விழாவும், இரவு ஆறுமுக சுவாமி தேர் பவனியும் நடைபெறும். மார்ச் 1-ஆம் தேதி அதிகாலை தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
அன்று இரவு கொடி இறக்கமும், 2 -ஆம் தேதி சப்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் செ. சிவாஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.