பழனியில் இன்று மாலை தாரகாசூரனை வதம் செய்கிறார் தண்டாயுதபாணி!

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பழனியில் இன்று சூரசம்ஹாரம் மிக விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான..
பழனியில் இன்று மாலை தாரகாசூரனை வதம் செய்கிறார் தண்டாயுதபாணி!

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பழனியில் இன்று சூரசம்ஹாரம் மிக விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை  திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த வியாழக்கிழமை காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒரு வாரம் மலைக் கோயிலில் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.

கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மதியம் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு, சூரர்களை வதம் செய்யும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு மலைக் கோயில் நடை அடைக்கப்பட்டு, சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைகிறார். இதனால், மலைக் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைவார். அங்கிருந்து, திருஆவினன்குடி கோயிலுக்குச் செல்வதற்கு முன் வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

அதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு, மலைக் கோயிலில் சம்ப்ரோட்சண பூஜையை அடுத்து, அர்த்தஜாம பூஜை நடைபெறுகிறது.

புதன்கிழமை, மலைக் கோயிலில் வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com