மேஷம், விருச்சிக ராசிக்காரர்களுடன் இருக்கிறீர்களா? இதைப் படியுங்கள்! 

எந்த ஒரு கிரகமும் அதன் சொந்த வீட்டில் இருந்தால் அதன் சக்தி மூன்று மடங்காக இருக்கும். கிரகத்தின் சொந்த..
மேஷம், விருச்சிக ராசிக்காரர்களுடன் இருக்கிறீர்களா? இதைப் படியுங்கள்! 
Published on
Updated on
2 min read

எந்த ஒரு கிரகமும் அதன் சொந்த வீட்டில் இருந்தால் அதன் சக்தி மூன்று மடங்காக இருக்கும். கிரகத்தின் சொந்த வீட்டிற்கு ஆட்சி வீடு என்று பெயர். அதேபோல் ஒரு சில வீடுகள் கிரகங்களுக்கு உச்ச வீடாகவும், நீச வீடாகவும் இருக்கும். உச்ச வீடுகளில் இருக்கும்பொழுது அந்த கிரகத்திற்கு உச்ச பலம் இருக்கும். அதாவது, அந்த கிரகம் ஐந்து மடங்கு சக்தியுடன் இருக்கும். நீச வீட்டில் இருக்கும் சமயத்தில் அந்த கிரகம் பலம் இழந்து இருக்கும்.

ஒருவரது உடல் உறுதிக்கும், மனஉறுதிக்கும் செவ்வாய் தான் காரகன். மேஷம், விருச்சிக ராசிக்கு செவ்வாய் (சொந்த வீடு) அதிபதியாகும். கடகம் - நீசவீடு. மகரம் - உச்சவீடு.  மிதுனம், கன்னி  - இவை இரண்டும் பகை விடுகள். சிம்மம், தனுசு, மீனம் இந்த மூன்றும் நட்பு வீடுகள். 

சூரியனுக்கு தெற்கில் திரிகோண மண்டலத்தில் தெற்கு முகமாக வீற்றிருப்பவர் அங்காரகன் என்று வரலாறுகள் கூறுகின்றன. சிவபெருமான் யோகத்திலிருந்தபொழுது  அவருடைய நெற்றிக் கண்ணில் வியர்வை உண்டாகி அது பூமியின் மீது விழுந்தது. அந்த வியர்வையே பின்னர் ஆண் குழந்தையாக மாறியது. பூமாதேவி அந்தக்  குழந்தையை எடுத்து வளர்த்தாள். முருகப் பெருமானின் சகோதரர் இவர் என்பதால் செவ்வாய் என்ற அங்காரகனை முருகப்பெருமானின் அம்சமாக வளர்த்து வந்தார் என்பது புராணக் கதை. 

மிருகசீரிஷம் - சித்திரை - அவிட்டம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் அங்காரகன். பொதுவாக அரசியல் தலைவர்கள், காவல் அதிகாரிகள், தளபதிகள், நீதிபதிகள், பொறியியல் வல்லுநர்கள் முதலியோருக்கு அங்காரகன் அருள் கண்டிப்பாக இருக்கும். புரட்சியைச் செய்கின்ற அனைவரும் அங்காரகன் ஒளியைப் பெற்றவர்கள். கண்டிப்பு, தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரைப் பந்தாடும் ஆற்றல் இவற்றையும் தருபவர் அங்காரகன்.

தமிழ்நாட்டில் செவ்வாய் என்ற அங்காரகனுக்கு மூன்று பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. அவை, பழனி, வைத்தீஸ்வரன் கோயில், திறுச்சிறுகுடி ஆகியனவாகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலுக்குச் சென்று வந்தால் தோஷங்கள் விலகும் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும். அதுமட்டுமல்ல, வியாதிகள் குணமாவதற்கும் - நிலம், பூமி, மனை வாங்குவதற்கும் அங்காரகன் அருள் வேண்டும். இந்த கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் உங்கள் பகுதியிலுள்ள செவ்வாய்க் கிரகத்தை வலம் வந்தால் போதும் நன்மைகள் கிடைக்கும். 

சித்திரை மாதம் முதலாவது செவ்வாய்க்கிழமையில் வீரபத்திர மூர்த்தியை வழிபட்டால் - அங்காரகனது அருளும் சேர்ந்து கிடைக்கும்.

செவ்வாயால் உஷ்ணக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு, ரத்தப்போக்கு, விரைகளில் வலி, வீக்கம், சொறி சிரங்குகள், குஷ்டம், அடிபடுதல், விரோதிகளால் தாக்கப்பட்டுக் காயம்  உண்டாகுதல், அங்ககீனம் ஏற்படுதல், பில்லி, சூன்யம், போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாதல், தீ விபத்துக்குள்ளாதல் அறுவை சிகிச்சை செய்து கொள்வதனால் தொல்லைக்குள்ளாதல் போன்றவை ஏற்படும். அவரவர்கள் தங்கள் ஜாதகப்படி செவ்வாய் எந்நிலையில் உள்ளது என்பதை அறிந்து பரிகாரம் செய்துகொள்ளலாம். 

மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சொந்த வீடு என்பதால், இயற்கையாகவே இவர்களுக்குத் தற்பெருமை அதிகமாக இருக்கும். உஷ்ணம் தொடர்பான கிரகம் என்பதால் கோபம் சற்று அதிகமாக ஏற்படும். அனைவரும் தன்னைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே கூடுதலாகச் சிரமப்படுவார்கள். அதேசமயம் துணிச்சல் அதிகமாக இருக்கும். எந்த காரியத்தையும் யோசிக்காமல் சட்டென்று முடிவெடுப்பார்கள். 

அங்காரகனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கவேண்டும் என்றால் மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பிரதி செவ்வாய்க்கிழமையில் அங்காரகன் (செவ்வாயை) வழிபட வாழ்வில் ஏற்படும் அனைத்து இன்னல்களும் நீங்கும். 

வீர த்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி

தந்நோ பௌம ப்ரசோதயாத் 

இது அங்காரகனுடைய காயத்ரி மந்திரம், இவற்றை தினமும் 27 முறை காலையிலும், மாலையிலும் சொல்லிக்கொண்டே வந்தால் அவர்களுக்கு வியாதியே வராது என்பது  கண்கண்ட உண்மை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com