கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் வள்ளலார் சித்தி பெற்ற திருமாளிகையில் திருஅறை தரிசனம் புதன்கிழமை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனத்தைக் வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள வள்ளலார் சித்தி பெற்ற வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது.
முன்னதாக, வடலூர் ஞானசபை வளாகத்திலிருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழை ஊர்வலமாக மேட்டுக்குப்பம் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. செல்லும் வழியில் இந்தப் பேழைக்கு பார்வதிபுரம், நைனார்குப்பம், கருங்குழி கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, மேட்டுக்குப்பத்தில் கிராம மக்கள் சீர்வரிசைப் பொருள்கள் அடங்கிய தட்டுகளுடன் பேழையை வரவேற்று திருமாளிகைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வள்ளலார் முத்தேக சித்தி பெற்ற திருஅறை பக்தர்கள் தரிசனத்துக்காக பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.
இந்த திருஅறை தரிசனத்தை காண உள்ளூர் மட்டுமன்றி, வெளியூர் பக்தர்களும் மேட்டுக்குப்பத்தில் குவிந்தனர். 6 மணி நேரமே திறந்திருந்த திருஅறை தரிசனத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
இந்த நிகழ்வையொட்டி, திருமாளிகை வளாகத்தில் சன்மார்க்க சொற்பொழிவுகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலர் ஆர்.கருணாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






