ஜோதிட ரீதியாக காதல் வெற்றி பெற விதிகள் என்ன?

காதல் அனைத்து உயிர்களிலும் உண்டு. இவர் நமக்கு வாழ்க்கைத் துணையாக வரமாட்டாரா..
ஜோதிட ரீதியாக காதல் வெற்றி பெற விதிகள் என்ன?

காதல் அனைத்து உயிர்களிலும் உண்டு. இவர் நமக்கு வாழ்க்கைத் துணையாக வரமாட்டாரா என எல்லோரும் ஏங்கி இருப்போம். பருவ வயதில் அனைவருக்கும் ஏதாவது  ஒரு எதிர் பாலினத்தவரிடம் கண்டிப்பாக காதல் மலர்ந்து இருக்கும்.

காதல் ஒரு இனம்புரியாத இன்ப மயமான உணர்வு. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் இனிமை. அவளும் நோக்கினாள் அவனும் நோக்கினான். (ராமன்,  சீதை). தமிழ் கடவுள் முருகனே காதல் திருமணம் செய்தவர் தானே. தெய்வங்களையும் விட்டுவைக்கவில்லை இந்த காதல். காதலின் அடுத்த கட்ட நகர்வு தான் திருமணம்.  ஆண் பெண் இருவருடைய ஜாதகத்திலும் லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஏழாம் அதிபதி, சந்திரன், சுக்கிரன் நன்றாக வலுப்பெற்று சுபர் பார்வையில் இருக்க, காதல் வெற்றி  பெறும். பொதுவாக பருவ வயதில் வரும் ராகு தசையும், சுக்கிர தசையும் இயற்கையிலேயே காதல் எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

சுக்கிரன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் இயற்கையிலேயே காதல் எண்ணம் மேலோங்கும். காதல் மன்னன் ஆகவே அவர் காணப்படுவார். அதேநேரத்தில் சுக்கிரன்  வலுவாக இருந்தால் மட்டுமே காதல் ஜெயித்துவிடாது. மன உறுதியை குறிக்கும் சந்திரனும் வலுவாக இருக்க வேண்டும். எந்த ஒரு பலனும் லக்கினத்தை அடிப்படையாக  வைத்தே என்பதால் லக்னம், லக்னாதிபதி வலுப்பெற வேண்டும்.

ஏழில் ராகு + செவ் அல்லது ராகு + சுக்ரன் அமைந்து குரு பார்த்து அந்த திசை நடப்பில் இருந்தால் காதல் கைகூடும். 7ல் இருக்கும் பாவகிரகங்கள் கலப்பு அல்லது காதல்  திருமணத்தை உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் எப்பேர்பட்ட நேரத்திலும் காதலர்கள் கைபிடிக்க மனஉறுதி வேண்டும். பிரச்னை வந்தால் எதிர்கொள்ள செவ்வாயும் பலமாக  இருக்க வேண்டும்.

தாம் தேடும்/காதல் கொள்ளும் நபர் எப்படி இருப்பார்? (ஒரு சில உதாரண ஜாதக அமைப்புகள்)

கன்னி லக்கினத்திற்கு, ஆண் பெண் இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளும் காதல் நிலைக்குக் காரகரான புதன் ஆட்சி பெற்று அதன் அதிபதியாக இருந்தாலும்,  அவர் களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டில் நீச்சம் அடைவதால், இந்த லக்கின ஜாதகர், இவர் விரும்பிப் போகும் ஒரு பெண் ஏதேனும் ஒரு குறை உடையதாக  இருக்கக்கூடும். குறை உள்ள பெண்ணாக இருந்தால் மட்டுமே இவருக்கு பிடிக்கும். குறை என்பது வெகு சாதாரணமான சுவாசம், சுவை, மணம் தெரியாத குறையாகக் கூட  இருக்க வாய்ப்பு. ஏன் எனில் புதன் 7 நீச்சமடைவது மட்டுமின்றி ஒரே, பாதகாதிபதியும் ஆவதால் தான் இந்த லக்கினகாரர்களுக்கு அவ்வாறு அமையும். அப்படியே இந்த லக்கின ஜாதகர் தேடிப்போகும். தனது துணைவருக்குக் குறை இல்லை எனும் பட்சத்தில், அந்த குடும்பம், மரியாதை தெரியாத குடும்பமாக அமைந்துவிடும். அப்படியென்றால்,  கன்னி லக்கின ஜாதகர்கள் எல்லோருக்கும் இப்படித்தான் நிகழும் என்றால், நிச்சயம் கிடையாது. அதற்கான வேறு சில விதிவிலக்குகளால், அதாவது குருவின் பார்வை,  தொடர்பு பெறும் போது அவை நடவாமல் போக வாய்ப்பாகும். 

மீன லக்கின ஜாதகர்களுக்கு, களத்திர ஸ்தான அதிபன் புதன், லக்கினத்தில் நீச்ச நிலை அடைவதால், இவரும் தனது வரப்போகும் துணையைத் தேடி போவார். தனது  துணைக்காக எதையும் செய்வார். செய்தவர்கள் இவரின் தகுதிக்குக் குறைவாகக் கூட இருக்கலாம். இந்த ஜாதகர், தந்தையின் உறவினர்களில் ஒருவரை திருமணம் செய்ய  வாய்ப்பு. அப்படி இல்லை எனில் இவரின் குடும்பத்திற்கு மிகவும் தெரிந்த நபராகக் கூட இருக்கலாம். அப்படிப்பட்ட நபர், ஒரு ஆசிரியரின் குடும்பத்தைச் சேர்ந்தவராக  இருக்கவும், இந்த ஜாதகரை தேடி பெண்வீட்டார், இவருக்குத் திருமணம் செய்து கொடுக்கும் நிலையும் ஏற்பட வாய்ப்பு. ஆனால், அப்படி அமையும் வரன் / பெண் இந்த  ஜாதகருக்குத் தகுதிக்குக் குறைவாக அமையும்.

சந்திரன், ராகு அல்லது சந்திரன் கேது சேர்க்கை கொண்டு ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் கொண்டிருப்பார்களே ஆனால், அவர்கள் தங்களது ஆசிரியர்களையே  காதலிக்கின்றனர் அல்லது ஆசிரியருக்குச் சமமான அறிவை உடையவர்களைக் காதலிக்கின்றனர். டியூஷன் போன இடத்தில், படிக்கப் போன இடத்தில், பயிற்சிக்குப் போன  இடத்தில் அங்குள்ள அறிவார்ந்த நபர்களைக் காதலிக்கின்றனர். இது ஒரு பூர்வஜென்ம கர்மாவாகும். 

மேற்சொன்ன அமைப்பைக் கொண்ட ஜாதகர்களின் ஜனன கால ஜாதகத்தில் புதன் வலிமைப் பெற்று நல்ல நிலையில் இருந்தாலோ அல்லது சுப சாரம் பெறுகிறபோது சில  மாறுதலை அடைந்து பலன்கள் வேறு விதமாக மாற வாய்ப்பு உண்டு. 

காதலுக்கு முக்கிய பாவங்கள்

கற்பனையில் வாழ்ந்து, கனவுகளில் வாழ்க்கையை நடக்க வைக்கும் பாவகம், 5-ம் பாவம் ஆகும். மனத்தைக் குறிக்கும் பாவம், இங்கு நிற்கும் தீய கிரகங்கள் கூட, காதலை  ஏற்படுத்தும். சுபக் கிரகங்கள், நல்லவிதமான காதலையும், தீய கிரகங்கள் தகுதிக்குறைவான காதலையும், பெயரைக் கெடுக்கும் காதலையும் உருவாக்கும். இந்த 5-ஆம்  பாவதிபதி இரண்டில் அமரும்போது காதலித்த பெண்ணையே குடும்பத்துக்குள் சேர்க்கும் நிலைக்கு கொண்டு செல்லும். 2 (குடும்பம் அமைதல்), 5 (காதல் ஏற்படுதல்), 7  (திருமணம் அமைதல்), 11 (ஆசை நிறைவேறுதல்) போன்ற பாவங்கள் தொடர்பு பெறும்போது ஒரு ஜாதகர், காதல் திருமணத்திற்குத் தள்ளப்படுகிறார். 
                      
காதலுக்குத் தடை ஏற்படும் நிலை

மேலே சொன்ன 2, 5, 7, 11 பாவங்கள் தொடர்பு பெறும்போது ஒரு ஜாதகர், காதல் திருமணத்திற்குத் தள்ளப்பட்டாலும், அதே சமயம் இந்த தொடர்பில், 8ஆம் பாவம்  சம்பந்தப்படும்போது, பெரிய அளவிலான பாதிப்பையும், 12ஆம் பாவம் சம்பந்தப்படும்போது காதலோடே நின்றுவிட வாய்ப்பும் உள்ளது. சந்திரன் அல்லது செவ்வாய் அல்லது  புதன் இவைகளுக்கு திரிகோணத்தில் (1, 5, 7) பாதிக்கக்கூடிய அமைப்பாக ராகு  அமையும் போது காதல் தடை ஏற்படுகிறது. 

கட்டுரையின் நோக்கம்

இது போன்ற ஜோதிட அமைப்புகளை வெளிப்படுத்துவதன் நோக்கம் யாதெனில், திருமணப் பொருத்தம் பார்க்க ஆரம்பிக்கும் போதே ஒருவரின், ஜாதகத்தில் இருக்கும்  பிரச்னைகளை எச்சரிக்கை செய்வது ஒரு ஜோதிடரின் முக்கிய கடமை ஆகிறது. இப்படி ஒரு காதல் அமைப்பு இருந்து அதனை ஒரு ஜோதிடர் எச்சரிக்கை செய்யாமல்  இருந்து விட்டால், திருமண காலத்தில், காதல் மூலம் அந்த ஜாதகரின் குடும்பத்தில் அவமானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுவதோடு, அப்படிப்பட்ட ஜாதகத்தைப் பார்த்த  ஜோதிடருக்கும் அவமானம் மட்டும் அல்லாது அதனால் ஏற்படும் கர்ம வினையையும் ஏற்க வேண்டி வர வாய்ப்பு உள்ளது. 

சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com