மகா சிவராத்திரியில் விரதமிருந்தால் இவ்வளவு பலன்களா?

சிவராத்திரி விரதம் கடைப்பிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.
மகா சிவராத்திரியில் விரதமிருந்தால் இவ்வளவு பலன்களா?


மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி. மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

'சிவ' என்ற சொல்லே 'மங்களம்' என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகா சிவராத்திரி விரதமே மிகப் பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு முறை கயிலையில் விளையாட்டாக, எம்பெருமானது திருவிழிகளைத் தம் திருக்கரங்கள் கொண்டு மூடினார் உமாதேவியார். அகில உலகமும் இருண்டது. இக்குற்றத்திற்குப் பிரயச்சித்தமாக, ஆகம விதிகளின் படி, சிவனாரை, உமாதேவியார் வழிபட்ட தினமே மஹா சிவராத்திரி.

தேவர்களும் அசுரர்க‌ளும், பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்க வேண்டி சிவனார் அருந்தினார். உடனே, அருகிருந்த உமாதேவியார், தம் திருக்கரத்தினால், சிவனாரின் கழுத்தைப் பிடித்து, விஷத்தை எம்பெருமானின் திருக்கழுத்திலேயே நிறுத்தினார். அகில உலகத்துக்கும் அன்னையான அம்பிகை, எம்பெருமானை மட்டும் காக்க வேண்டியா அவ்வாறு செய்தார்?, எம்பெருமான் இவ்வுலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர். ஈரேழு பதினாறு உலகங்களும் எம்பெருமானின் திருவுருவே. எம்பெருமானுக்குள்ளேயே அனைத்து ஜீவராசிகளும் வாசம் செய்கின்றன. ஆகவே ஆருயிர்களுக்கெல்லாம் அன்னையான அம்பிகை அவ்வாறு செய்தார். அதனாலேயே, எம்பெருமானுக்கு 'திருநீலகண்டன்' என்ற திருநாமம் உண்டாகியது. இந்த இறைலீலை நிகழ்ந்த தினமே சிவராத்திரி. அன்றைய தினத்தில் தேவாதி தேவர்களும் எம்பெருமானைப் பூஜித்து வழிபட்டனர்.

சிவராத்திரி தினத்தன்று, ஒரு வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு, இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து, வில்வ இலைகளைப் பறித்து, அந்த மரத்தின் கீழே போட்டுக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் அச்சமயம், சிவனாரும் உமையம்மையும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். குரங்கு அறியாமல் செய்த பூசனையை ஏற்று, சிவனார், மறுபிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார்.

தன்னை அறியாமல் செய்த பூசனைக்கு இவ்வளவு பலன் என்றால், நமக்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

சிவராத்திரி விரத முறையும் அதன் பலன்களும்..

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில் நிறைவேறப்  பிரார்த்திக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இறைச்சிந்தனையில் இருக்க வேண்டும்.

மாலையில் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால்  பூஜை செய்ய வேண்டும். இரவு நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோயிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ருத்ராபிஷேகம், என்பது சிவனாருக்கு செய்யப்படும் அபிஷேகம். மந்திர பூர்வமாகச் செய்யப்படும் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ருத்திராபிஷேகத்தைப் பற்றிய விவரங்கள் அறிந்து, இதை இல்லத்தில் செய்ய இயலாவிட்டால், ஆலயங்களில் செய்யலாம். சிவராத்திரி அன்று ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு.

மறுநாள் காலை தீபாரணை செய்து விரதம் நிறைவு செய்ய வேண்டும். இல்லத்தில் பூஜை செய்திருந்தால், புனர் பூஜை செய்து, சிவனாரை உத்யாபனம் செய்ய வேண்டும்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைப்பிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

அர்ஜூனன் சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் இட்டு, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே. சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றே.

ஓம் நமசிவாய.....ஓம் நமசிவாய.....ஓம் நமசிவாய.....!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com