

திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய, ஸ்ரீவாணி தரிசனம் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜன.9ஆம் தேதி முதல் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக ஒரு மாத காலத்துக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 800 டிக்கெட்டுகள் இதுவரை நேரடி மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த தரிசனத்துக்கான முன்பதிவும் ஆன்லைனுடன் இணைக்கப்பட்டு விட்டது. ஆனால், திருப்பதி விமான நிலையத்தில் உள்ள மையத்திலிருந்து நாள்தோறும் வழங்கப்படும் 200 டிக்கெட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும்.
திருமலையில் உள்ள கோகுலம் விடுதி அருகே ஸ்ரீவாணி டிக்கெட் கவுன்ட்டர்களில் ஆஃப் லைனில் வழங்கப்பட்டுவந்த 800 டிக்கெட்டுகளை இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் அதிருப்தி அடைவதாகவும் அதனால் சோதனை முயற்சியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களிடையே கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இது தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்பதிவு நாள்தோறும் காலை 9 ம ணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை இருக்கும். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் செயல்படும். முன்பதிவு செய்தவர்கள் அன்று மாலை 4 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஸ்ரீவாணி தரிசனம்
நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவா்களுக்கு ஒரு விஐபி பிரேக் தரிசன அனுமதியை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
இணையதளம் வழியாகவும், திருமலைக்கு நேரடியாக வந்தும் நன்கொடை வழங்கும் வாய்ப்பை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.
நன்கொடை வழங்கிய பின்னர் பக்தா்கள் ஒரு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்று ஏழுமலையானை தரிசித்து செல்லும் வகையில் இந்த ஸ்ரீவாணி தரிசன முறை நடைமுறையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.