

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் வாழ்ந்தமையால் ராஜாதிராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்த்தியாக இருந்தமையால் செண்பகாரண்ய சத்திரம் எனவும், துவாரகையில் கண்ணன் செய்த லீலைகள் இங்கு நிகழ்த்திக் காட்டப்பட்டதால் தட்சிண துவாரகை என்றும், மன்னன் குலோத்துங்க சோழன் விண்ணகரம் என்றும், ராஜமன்னராகிய அருள்மிகு ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்குக் கோயில் அமைத்ததால் மன்னர் கோயில் என்றும் அழைக்கப்படும் மன்னார்குடியின் மையப் பகுதியில் 23 ஏக்கர் பரப்பளவில் 7 பிரகாரங்கள், 154 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்துடன் மொத்தம் 16 கோபுரங்கள், 24 சன்னதிகளுடன் அழகுமிக்க நீண்ட மதில்கள், கலைநயம் மிக்க ஆயிரம் கால் மண்டபம் ஆகியவற்றுடன் அமைந்துள்ளதுதான் ராஜகோபாலசுவாமி கோயில்.
இக்கோயிலுக்கு, கடந்த 15 ஆண்டுக்குப் பிறகு, கும்பாபிஷேகம் செய்வதற்காகத் தமிழக அரசு ரூ. 2.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததது. மேலும், பல்வேறு பெறும் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு நன்கொடை என மொத்தம் ரூ.15 கோடி நிதி திரட்டப்பட்டது. கடந்த 2024 ஜூலையில் இக்கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு கோயிலை முழுமையாகப் புதுப்பிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வந்த நிலையில், அனைத்துப்பணிகளும் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து ஜன. 28ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கோயில் வளாகத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக மூன்றடுக்கு யாகசாலை அமைக்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் யாகசாலையில் கால பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை, மூன்றாம் கால பூஜைக்குப் பின்னர் நடைபெற்ற நான்காம் கால பூஜை, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான, புதன்கிழமை ஐந்தாம் கால பூஜையுடன் தொடங்கி நித்யாராதனம், பெருமாள்- தாயார் புறப்பாடு, த்வார பூஜை, அக்னி சதுஸ்தான ஆராதனம், பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, யாக சாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், காலை 9.30 மணிக்கு, ராஜகோபுரம், பிரகார கோபுரங்கள், யோக நரசிம்மர் சன்னதி, தேர் நிலைகள், கருட ஸ்தம்பம், உடையவர், கூரத்தாழ்வான், வேதாந்த தேசிகர், மணவாளமாமுனிகள் ஆகிய விமானங்களுக்குத் தீட்சிதர்கள் புனித நீர் வார்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, பெருமாள் - தாயார் விமானங்கள், மூர்த்திகளின் விமானம், ராமர் சன்னதி,சேனை முதல்வர் சன்னதிக்கும் பின்னர், பெருமாள் தாயார் மூலவர்களுக்குத் தீட்சிதர்கள் புனித நீர் வார்த்து கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேகத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,மனைவி சர்மிளா ராஜா, தொழிலதிபர் ஜெ. சாய்பிரகாஷ், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சி. இளவரசன், உறுப்பினர்கள் கே.கே.பி. மனோகரன், லாத வெங்கடேசன், மு.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இன்று பிற்பகலில் வேத திவ்ய பிரபந்த சாற்று முறையும், மாலையில் நான்கு நிவ்வாஹ தீட்சிதர்களை பஹீமானத்துடன் கிரகத்திற்குக் கொண்டு விடுதல் நிகழ்ச்சியும், இரவு உற்சவர் பெருமாள் தங்கக் கருட வாகனத்திலும், தாயார் வெள்ளி சிம்ம வானத்திலும் உற்சவமும், நீதியரசர் எம். சொக்கலிங்கம் முன்னிலையில் ஆன்மிக சொற்பொழிவாளர் உ.வே. வேளுக்குடி கிருஷ்ணஸ்வாமியின் வண்துவராபதி மன்னன் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.