சித்திரம் பேசுதடி வாசகர் கவிதை இரண்டாம் பகுதி 2

சித்திரம் பேசுதடி வாசகர் கவிதை இரண்டாம் பகுதி 2

சித்திரம் பேசுதடி  

வான்கோ வரைந்த நட்சத்திர
ஓவியம்
வையகம் போற்றிடும் உன்னத ஓவியம்
நிலைத்து நிற்கும் நட்ச த்திரக்கூட்டம்
நீந்தி ஓடும் மஞ்சள் நிலா
வானம் முழுதும் நீலம்
வண்ணம் அடித்தாபோல்
காண மலைக்கிராம்போல் காட்சி
கண் கொள்ளாத மாட்சிகளிக்கின்றேன்
கண்ணணை மூடி திறப்பதற்குள்மீண்டும்
காணுகிறேன் நில முகத்தை
காதல் கொள்ளையிலேஎன் மனம்
காணாமல் போய்விட்டது.களவு போன
என் மனத்தைத் தேடுவேனா.
இல்லை காணாமல் போய்மீண்டும்
காட்சி தரும் உன் அழகைக்காணுவேனா.

- கவிஞர் அரங்க.கோவிந்தராசன், இராஜபாளையம்

**


'சிந்தையில் பதிந்த சித்திரமே
எனது மாபெரும் விந்தை நீ
தூரலை அணைக்கும்
மண் போல் மனமின்று
உன்னை வர்ணம் தீட்ட
வட்டமிடுகிறது
ஜீவனுள்ள உன் விழிகளில்
மேலும் உயிர்
தந்தது நான் தூவிய காதல் நிறமதை நினைந்து
ஆனந்த சாரல் மழையில் 
லயித்துக் கிடக்கிறேன்
எப்போதும் அழியாத
சித்திரமாய் நீ என் நெஞ்சில்'

- ரா. கமலா

**

உலகின் மிகச்சிறந்த
கருப்பு-வெள்ளை சித்திரம்
உன் விழிகள்தானடி
விழுந்த நான் மீளவே முடியவில்லை...

கரிசல் மண்ணும் சிவந்துபோனதடி
உன் பாதவிரல்கள் - பூமியில்
தீட்டிய சித்திரத்தில்....

உனது கன்னக்குழி சித்திரத்திலும் -
உனது இடை அசைவுகளின் சித்திரத்திலும்
என் இதயமே நொறுங்கிப்போனதடி

உடைக்கேற்றபடி வண்ணம்மாறும்
உன் இதழ்களின் வண்ணச் சித்திரத்தில்
கையொப்பம் இடவே - என்
இதழ்களே எழுதுகோலாய் மாறிப்போனதடி...

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**
 
ஓவியர் வின்ஸ்சென்ட் வான் கோவின்
ஒய்யார ஓவியம் நட்சத்திர இரவு
காணக் களிப்படைந்து மலரும் கவிதை இது! 
வான் கோவின் வீட்டு சாளரம் வழியாக
காணக் கிடைத்த வான விருந்து , அவர்
நினைவில் வைத்து வரைந்த ஓவியம் இது
நீலவான் ஆடையில் நட்சத்திர புள்ளிகள்
மஞ்சள் நிலா முகம் காட்டி மறையும்
வான வேடிக்கை காணும் மனிதர்க்கெல்லாம்
கானம் பாடும், காவியமாகும் ! சித்திரம் பேசுதடி!

- கவிஞர்  சூடாமணி

**
இருள் துவங்கும் அந்திவேளை 
ஒளியை விழுங்க,
பறவைகளோடு வீடு திரும்பும்
சாமந்திப்பூ வேளையில்
அந்தி மந்தாரை என அவள் எங்கோ நிற்க 
ஆகாயம் ஆர்ப்பரித்து தழுவியது
நிசப்தத்தை கலைக்கும் புள்ளினங்களை
கிளைகள் தாங்க, உலகமும் தூங்க,
நீயும் - நானும் பேசிய நினைவுகள் 
மனதில் ரவிவர்மா ஓவியமென பதிந்திருக்க  
நீ அனுப்பிய மண ஓலைச் சித்திரத்தில்  
நீ சிரித்தபடி இருக்கிறாய்,
என் உறக்கத்தை விழுங்கிய 
அந்திப் பொழுதாய்  
உயிர் வாழ்வதற்காக புலர்கிறது  
மறுதினம் நீ என்னோடு இன்றி 

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**                           
சித்திரம் பேசுதடி
உள்ளுக்குள் சித்திரமாய்
உடலுக்குள்  உணர்வுகளாய்
கல்லுக்குள் ஈரம்போல்
கனிக்குள்ளே சுவையேபோல்
மண்ணுக்குள் உரமேபோல்
மரத்துக்குள் உறுதியேபோல்
நிற்கின்றாய் நீயென்றும்
நினைவுகளில் பேரொளியாய்!

நட்பென்றால் என்னவென்று
நயமாக உணர்த்திய நீ
காதலென்பது எதுவென்று
கனிவுபடத் தெரிவித்தாய்!
இதயத்தில் இருக்கும் நீ
இரவுகளின் சங்கமத்தில்
உடலெல்லாம் வியாபித்து
ஓலமிட்டுக் கொஞ்சிடுவாய்!

- ரெ.ஆத்மநாதன்,காட்டிகன்,சுவிட்சர்லாந்து

**

நீல வண்ண சித்திரம் என்னை 
விண்ணிலிருந்து  பார்த்து ரசிக்கும் 
மனிதா நீ மண்ணில் என்னை சிதைப்பது 
என்ன நியாயம் ? 
உன் பூமித்தாய் கேட்கிறேன் உன்னை 
உரிமையுடன் ! நீ இருக்கும் சோலைவனம் 
விட்டு வேற்று கிரகத்துக்கு செல்கிறேன் 
என்கிறாயே ! உன் விண்வெளி போட்டியிலும் 
பூமி நான் சரித்திரம் படைப்பேன்  மனிதா !
ஏன் தெரியுமா ...சித்திரம் நான் உனக்கு 
மட்டும் சொந்தம் இல்லை ... உன் பிள்ளைகளுக்கும் 
நான் சொந்தம் ! புரிந்து நடந்து கொள் மனிதா !

- K.நடராஜன் 

**

சித்திரம்  போன்ற அவள் பேசினாள்
சித்திரம் பேசுதடி பாடல் வந்தது !

சித்திரமும்  பேசும் உற்று கவனித்தால் 
சித்திரம் வரைந்தவரின் உணர்வினைக் கூறும் !

கருத்து எதுவும் எழுதாத சித்திரம் கூட 
கருத்துக்கள் பல கூறும்  விந்தை உண்டு !

ஓவியரின் வரையும் ஆற்றலைப் பார்த்தவுடன் 
ஓவியம் நமக்குப் பறை சாற்றி விடும் !

மோனாலிசா ஓவியம் இன்றும் பேசுகின்றது 
மோகனைப் புன்னகை எப்போதும் வீசுகின்றது !

உதடுகள் அசைத்து அவள் பேசுவது 
ஓவியம் பேசுவது போலவே இருக்கும் !

எல்லோரா ஓவியத்தை சென்று பாருங்கள் 
எல்லோருடனும் எப்போதும் பேசுவது உண்மை !

சித்தன்னவாசல் சென்று  பாருங்கள் நம்மோடு 
சித்திரங்கள் மனதோடு பேசுவதை அறியலாம் !

- கவிஞர் இரா .இரவி

**

ரவி வர்மா வரைந்த வண்ண ஓவியமோ
புவி மீது வந்துதித்த பொற் சித்திரமோ
கவிதைச் சந்தங்கள் நிறைந்த காவியமோ
நவின்றாலும் விளங்கிடாத புதிர் மந்திரமோ

இமைகளின் இன்ப அசைவில் நளின நடனம்
அமைதிப் பூபாள இசை அரங்கேற்றத்தோடு
சுமையான புருவம் மேலும் கீழும் ஆடும்
உமையாளாய் வணங்கத் தோன்றும் வடிவம்

இடையாட நடை பயிலும் நடன நாயகியாய்
விடை தெரியாத வில்லாய் வளையும் நாணலாய்
தடையேதுமில்லா உயிர் நதியாய் சலசலக்கும்
மடை திறந்த வெள்ளமென அழகை வாரியிறைத்து

சித்திரம் ஒன்று சிணுங்கியே சிறகடிக்கும் நிலை
உத்திரவின்றி உள்ளே வரத் துடிக்குதடி இதயம்
முத்திரை இரவிலும் ஒளியை வீசியடிக்குதடி
இத்தரைமீது இறங்கிய சித்திரமும் பேசுதடியோ

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

காலத்தை வென்றுநிற்கும் மல்லப் பாடி
----கற்பாறை குகையொளிரும் சித்தி ரங்கள்
ஞாலத்தின் மூத்தகுடி தமிழர் என்னும்
----ஞாயத்தைப் பேசுகின்ற ஆவ ணங்கள்
கோலத்தைக் கண்டின்றும் வியந்து போகக்
----கொலுவிருக்கும் பல்லவர்தம் மாமண் டூரும்
சீலமுடன் மாமல்ல புரத்தி ருக்கும்
----சித்திரமும் தமிழ்க்கலையின் பெருமை பேசும் !
பனைமலையின் கோவில்தம் சுவரில் காணும்
----பசும்வண்ணக் கந்தர்வர் சித்தி ரங்கள்
வனைந்திருக்கும் காஞ்சிக்கை லாச நாதர்
----வாழ்கோயில் சோமாசின் சித்தி ரங்கள்
நினைவிருந்தே அகலாமல் கண்ணுக் குள்ளே
----நிற்குதஞ்சை பெருங்கோயில் சித்தி ரங்கள்
புனைந்திருக்கும் மதுரைமீ னாட்சி கோயில்
---புகழோவி யங்கள்நம் கலையைப் பேசும் !
சித்தன்ன வாசல்தம் சித்தி ரங்கள்
----சித்தத்தை மயக்குகின்ற அற்பு தங்கள்
வித்தையினைக் குளமாக்கி எருமை யானை
----விளையாட அன்னங்கள் பறந்து செல்லச்
சத்தத்தைக் கேளாமல் துறவி மூவர்
----சாய்ந்துமலர் பறிக்கின்ற காட்சி யெல்லாம்
இத்தரையில் தமிழர்தம் கலைமேன் மையை
----இயம்புகின்ற பலவண்ண சொற்க ளன்றோ !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

(மல்லப்பாடி - தொன்மையான பாறை ஓவியங்கள் உள்ள இடம்.
விழுப்புரத்தின் அருகில் உள்ள ஊர் பனைமலை)

**

நிலை மண்டில ஆசிரியப்பா..!

சித்திரம் ஓவியம் செந்தமிழ் இவையில்
முத்திரை பதித்தே முன்னோர் வாழ்ந்தனர்.!
நடுகல் சிற்பம்.. நாட்டியச் சித்திரம்
விடுபடா எண்ணமாய் விரவிய மரபும்.!
மணிகளைக் கோத்து மனதைக் கவரவே
துணியில் தைத்ததும் துல்லிய சித்திரம்.!
நெஞ்சை அள்ளவே நீண்டு வாழ்ந்தது
தஞ்சை ஓவியம் தரணியில் சிறந்தது.!
எண்ணை ஓவியம் எழில்பெறும் மனதிலே
வண்ணக் கோலும் வளர்த்தது கலையை.!
கண்ணாடி ஓவியம் கருத்தைச் சிதைக்க
கண்ணுள் தெரிந்தது கேலிச் சித்திரம்.!
சித்தன் னவாசலின் சிதையாச் சித்திரம்
எத்தனை காலமும் அழியா அஜந்தா .!
எட்டுத் திக்கும் ஏற்றமாய்க் கலைகளுள்
வட்டிகைச் செய்தி வாழ்கென வாழ்த்தினென்.!

பொருள்::

(வட்டிகைச் செய்தி = ஓவியத்தொழில்)

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
தூரிகை வரைந்த காரிகையே-தேன்
……….துளிசுமந்த பூக்களின் தேவதையே
தூரத்தில் வாழ்கின்ற நிலவே-என்
……….தூக்கத்தில் விழிக்கிறது உன்நினைவே
உன்சித்திரத்தை நானும் வரைந்தேன்-உயிராய்
……….உனக்குள்ளே நானும் தொலைந்தேன்
உன்அழகை வடிக்கும் ஓவியனானேன்-இங்கு
……….உன்னால் நானும் கவிஞஞானேன்
காதல்காற்று என்பக்கம் வீசுதடி-உன்
……….கவிதைசித்திரம் மௌனமாய் பேசுதடி
காதல்வானில் கற்பனையும் மிதந்ததடி-என்
……….கனவுகளும் உனக்குள் தொலைந்ததடி
சித்தன்னவாசல் சித்திரம் நீதானே-உன்னால்
……….சிறகடித்துப் பறக்கிறேன் நானே
சித்திரஅழகே உன்னோடு கலந்தேனே-உன்னில் 
……….சிலகாலம் நானும் வாழ்ந்தேனே

- கவிஞர் நா. நடராஜ், கோவை

**

வண்ணம் குழைத்தெடுத்த தூரிகையில் 
எண்ணம் முழுதும் குவித்து வைத்தேன் !
கன்னம்  நிறைத்த பூக்கள் காண 
திண்ணைப் படிகளோடு காத்திருந்தேன் !

தெருமுனைக்கு நாள்தோறும் விருந்திட்டு  
வருகைப்பதிவு நாளேட்டில் எழுதி வைத்தேன் !
அறியாத இதயத்தில் பாட்டெழுதி 
தெரியாத இராகத்தைப்  படையலிட்டேன் !

சுவரெங்கும் ஓவியங்கள் தீட்டிவைக்க 
சத்தியமாய் சொல்லுகிறேன் மறுக்கவில்லை !
இத்தரையில் இவள்போன்ற உருவமதை 
எத்திசையும் காணவில்லை உண்மையிது !

கிளிமொழியாள் பகன்றதை யாரறிவார் 
அணிசேர்க்கும் நற்கவிதைக் கற்கண்டு !
சிந்தைக்கு நல்மருந்து நீயென்று என்னிடத்தில்  
சித்திரம் பேசுதடி நாள்தோறும் தப்பாமல் !

- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை  

**

திரையில் எழுந்தருளிய
திருமகள்
கொட்டுகிறாள்
கூடமெங்கும் பொற்காசுகளை...
இன்று அமாவாசைதான்
என் அறைக்குள்
பூரண நிலவு
தண்ணீர்ப் பஞ்சம் நாடெங்கும்
அருவி
ஆரத் தழுவுகிறது என்னை
புன்னகைக்கிறாள்
பூவிழி சிமிட்டுகிறாள்
கவிதை வாசிக்கிறாள்
கண்ணாடி வேலியை ஊடுருவி
சிந்திய வண்ணத் திட்டுகளைத்
தொட்டேன்
சிறகு விரித்துப் பறந்தன
கிளையில் அமர்ந்து
கிளிகள் பேசுகின்றன
உயிர்கொடுத்த
ஓவியனைப் புகழ்ந்தபடி...

- கோ. மன்றவாணன்

**

தமிழர் தம் கலைத்திறன்
அமிழ்தினும் இனிய சிற்ப வடிவங்களில் 
எழில் கொஞ்சும் தூரிகை சித்திரத்தில் 
பொழில் நிறை கலைக் கூடங்கள் 
கலைத் திறனை கண்டவர் மகிழும் 
நிலையான நுட்பத் திறனதை 
சித்திரம் பேசுதடி 
குலுங்கும் இடையதன் நெளிவை 
சிலிர்க்கும் கண்ணசைவை 
எங்கு நோக்கினும் பார்வைத்தடவலை 
தங்க ஆபரணங்கள் நெளியும் அழகை 
மைதீட்டிய இமையழகை 
சித்திரம் பேசிப் பகிருதடி...... 

- பாலா கார்த்திகேயன் 

**
முழுமதியாய் முகத்தைக் கண்டேன்
  முத்தெல்லாம் பல்லாய்க் கண்டேன்!
விழுந்தாடும் பின்னல் கண்டேன் 
  வியந்தழகில் வீழ்ந்தேன் யானே!

கண்களில் கனிவைக் கண்டேன் 
  கருத்தினில் துணிவைக் கண்டேன்!
எண்ணங்கள் பறக்கக் கண்டேன் இனியவளில் இழந்தேன் என்னை!

செவ்விதழ் சிரிக்கக் கண்டேன்  
  செவ்வாயில் உலகம் கண்டேன்! மல்லிகையே மலராய்க் கண்டேன்!
   மலையிரண்டால் மலைத்தேன் மானே!

இடையது கொடியாய்க் கண்டேன்   
   இருகண்கள் இடியாய்க்  கண்டேன்!
நடையதில் நளினம் கண்டேன் 
   நல்லழகால் நலிந்தேன் யானே!

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு

**

வானம்கொண்ட சோலையிலே வசந்தநிலாப் பூத்திருக்கு
வண்ணவிழித் தோகைமயில் வந்துவிடு – உன்
வசீகர நெஞ்சமதைத் தந்துவிடு – கொஞ்சும்
நாணம்கொண்ட பேரழகி நானுமுந்தன் பேரழகில்
நலிந்துவிட்டேன் பார்த்துவிடு பண்போடு - அடி
நாயகியே கண்ணோடு பண்பாடு! (1)

ஜாலக்குயில் பாட்டாக ஜாடைக்காதல் சொல்லுகின்ற
ஜன்னலுக்குப் பின்னிருக்கும் சித்திரமே – ஜடைப்
பின்னலிலே எனைப்பின்னும் சித்திரையே - நீலக்
கோலவிழிப் பார்வையிலே கோயில்கொண்ட பாவைநீ
கொல்லும்போதை மன்மதனின் முத்திரையே – என்னைக்
கூறுபோட்டுக் கூளமாக்கும் நித்திலமே! (2)

பேசாமல் பேசுகின்ற பேராற்றல் நெற்றியதன்
பிறைநிலா ஒளியில்கண் கூசுதடி – உன்
பெருமூச்சில் பூந்தென்றல் வீசுதடி – பித்துப்

பாசாங்கு முகத்தினிலே பால்போல வழிகின்ற
பனிமலர்க் கண்ணிமைகள் ஆடுதடி – அடடா!
பார்த்துவிட்டேன் சித்திரமே பேசுதடி!

- கவிஞர் மஹாரதி

**

வானத்தை தூரத்துப் பார்வையாக வரைந்தாள் என் மகள்.
அந்தி வானம் ஆரேழு பறவைகள் - குச்சி குச்சி மரங்கள்,
விண்ணையும் மண்ணையும் இணைக்கும் தென்னங்கீத்து,
ஒடத்தில் ஒருவன்
ஆரஞ்சு நிற அலைகள்
ஆர்ப்பரிக்கும் காற்று
கருப்புச் சூரியன்
வரம்பில்லா கடல் - என தெரிந்ததை வரைந்திருந்தாள்,
இப்படித்தான் - கடவுளும் அமர்ந்திருக்கக் கூடும் - பொறுமையாய் - சிருஷ்டிக்கும் முன்

- கவிதாவாணி - மைசூர் 

**

உன்னைத் தேடி நான் வந்த போது 
நீ அங்கில்லை.
சில வண்ணத்துப்பூச்சிகள் 
பூக்களிலிருந்து புறப்பட்டு படபடத்தன.
பூங்காவின் காவலர் 
கைவிளக்கும், கைத்தடியும் கொண்டு
உலா வந்து கொண்டிருந்தார்.
உன் துப்பட்டா வாசனை
காற்றில் நீர்த்துப் போய்க்கொண்டிருந்தது.
நீ சில நொடிகளுக்கு முன் தான்
நகர்ந்திருக்க வேண்டும்.
வேகமாய் உன் துப்பட்டா வாசம் தொடர்ந்தேன்.
விரக்தியின் விளிம்பில் நீ
வெளியேறும் வழியைத் தேடினாய்.
பின்தொடர்ந்து விரல் பிடித்தேன்
பயந்து போய் திகைத்த நொடியில்
உனக்கு எப்படியிருந்தது எனத் தெரியவில்லை
உன் விரல்களில் நான் பதித்த முதல் முத்தம்.

- மகாலிங்கம் இரெத்தினவேலு, மதுரை

**

உன் சித்திரம் பேசுதடி.!

புருவமிடைத் திலகம்
புத்தொளி பாச்சுது.

கருவிழிப் பார்வை
நெஞ்சை கசக்கி விட்டது.

காதணி ஓசையால் 
களைப்பு தட்டுது.

மூக்குத்தியின் மின்னலால் 
பல இன்னல் விளையுது.

உதட்டின் சிரிப்போ
ஊமையாக்கியது.

கண்ணத்து மச்சமோ
உச்சம் என்றது.

இம்புட்டு அழகா..! 
வரஞ்சது யாருனு பாத்தா?
என் மாமனாரும் மாமியாவும்

- முத்துபாண்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com