விட்டல்ராவும் நானும் உரையாடிக் கொண்டிருந்தோம்

விட்டல்ராவும் நானும் உரையாடிக் கொண்டிருந்தோம்

விட்டல்ராவும் நானும் உரையாடிக் கொண்டிருந்தோம் - பாவண்ணன்,  பக். 250; ரூ. 250; சந்தியா பதிப்பகம்,  சென்னை - 600 083; 044 - 24896979. 

பெங்களூரில் 2009-ஆம் ஆண்டு முதல் வசிக்கும் எழுத்தாளர் விட்டல்ராவுடன், 12 ஆண்டுகளாகத் தனக்கு வாய்த்த உரையாடல்களைத் தொகுத்துள்ளார் பாவண்ணன். 27 கட்டுரைகளில் ஆளுமைகளைப் பற்றிய எண்ணற்ற விவரங்கள் பரந்துகிடக்கின்றன.

எப்படி எழுதத் தொடங்கினார் என்ற முதல் கட்டுரையிலேயே விட்டல்ராவுடன் ஜ.ரா. சுந்தரேசனும் அறிமுகமாகிறார்.  அடுத்தடுத்த கதைகள் பிரசுரமான விதம் பற்றிக் கூறும்போதே,  நா.பா., விக்கிரமன், அரு.  ராமநாதன், புனிதன், மீண்டும் ஜ.ரா.சு., எஸ்.ஏ.பி. அண்ணாமலை எல்லாம் வந்துவிடுகின்றனர்.

கார்ப்பரேஷன் அக்கவுண்டன்ட்டான ரங்கநாதன், எழுத்தாளர் மா. அரங்கநாதன் ஆனதைப் பற்றிய உரையாடலில், ஒரு புத்தகம் மட்டுமே எழுதிய அதிகம் அறிமுகமாகாத ஒருவரைக் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, சா. கந்தசாமி, ஞானக்கூத்தன், அசோகமித்திரன் என எல்லோரும் எப்படிக் கொண்டாடினார்கள் என்று விட்டல்ராவ் குதூகலிக்கிறார்.

தி.க.சி.யின் நட்பும் தூர்தர்ஷனின் நிலாமுற்றப்  படப்பிடிப்பு பற்றிய சித்தரிப்பும், விட்டல்ராவின் அப்பா பற்றிய,  அப்பாவின் இறுதிப் பயணம் பற்றிய சித்திரங்களும் மனக்கிடங்கில் ஊறிக் கிடந்தவை.

'மனிதன் மகத்தான ஒரு சல்லிப் பயல்'  என்றுதான் ஜி. நாகராஜன் சொன்னார்,  சல்லித்தனத்தோடு குரூரப் புத்தியும் அற்பத்தனமும் உடையவன் என்கிறார் விட்டல்ராவ்.   ரோசலின் என்ற லண்டன் பெண்ணின் கதையைச் சொல்லிக் கண்கலங்க வைக்கிறார் விட்டல்ராவ்.  விட்டல்ராவின் மனநிலையிலேயே வாசகர்களுக்கு அற்புதமாகக் கடத்தியிருக்கிறார் நூலாசிரியர்.  தன் வரலாறு எழுத முனைந்தாலும்கூட இவ்வளவு விரிவாகவும்  ஆழமாகவும் விஷயங்களை விவரிப்பாரா விட்டல்ராவ் என்று தெரியவில்லை. பாவண்ணன் மேலும் நிறைய எழுத வேண்டும். இருவருக்கும் பெருமை செய்யும் நூல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com