விவசாயம், நீர்வளம் மேம்பட ஒரு ஆலயம் - தென்கரை மாந்துறை

தமிழ்நாட்டில் மாந்துறை என்ற பெயரில் இரண்டு பழமையான சிவஸ்தலங்கள இருக்கின்றன. அவை: வடகரை மாந்துறை, தென்கரை மாந்துறை.
Published on
Updated on
3 min read

தமிழ்நாட்டில் மாந்துறை என்ற பெயரில் இரண்டு பழமையான சிவஸ்தலங்கள இருக்கின்றன. அவை: வடகரை மாந்துறை, தென்கரை மாந்துறை. திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியிலுள்ள மாந்துறை, வடகரை மாந்துறை என்று அழைக்கப்படுகிறது. இது பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்கள் வரிசையில் 58-வது தலமாக உள்ளது.

மற்றொன்று, கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் வரும் ஆடுதுறை என்ற ஊரிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சூரியனார்கோவிலுக்கு அருகில் உள்ளது. இது தென்கரை மாந்துறை. இத்தலம் ஒரு தேவார வைப்புத் தலம். திருஞானசம்பந்தர் தனது தல யாத்திரையின்போது, கஞ்சனூர் தலத்தை தரிசித்துப் பின் திருமங்கலக்குடி செல்லும் வழியில் தென்கரை மாந்துறை என்ற இத்தலத்துக்கும் சென்று இத்தல இறைவனை தமிழ்மாலை சாற்றி வழிபட்டார் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

                   இறைவன் பெயர்: அட்சயநாதசுவாமி
                   இறைவி பெயர்: ஶ்ரீயோகநாயகி


ஆலய முகவரி

அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோவில்,
மாந்துறை, மணலூர் - அஞ்சல்,
துகிலி - வழி, திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 609 804.

இக்கோயில், காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இவ்வாலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. அதைக் கடந்து சென்றால், விசாலமான முற்றவெளியைக் காணலாம். அங்கு கொடிமர விநாயகர், பலிபீடம், கொடிமரம் உள்ளன. அதை அடுத்து ஆலயத்தின் 3 நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. கடந்து உள்ளே சென்றால், இறைவன் அட்சயநாதசுவாமி கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி தருகிறார். அம்பாள் ஶ்ரீயோகநாயகி தெற்கு நோக்கி தனி சந்நிதியில் அருட்காட்சி தருகிறாள்.

கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள விநாயகர் தனது மனைவியுடன் காட்சி அளிப்பது ஒரு சிறப்பம்சமாகும். உட்பிராகாரத்தில் நால்வர் சந்நிதியும் காணப்படுகிறது.

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம்பெறும் ஏழு தலங்களில் திருமாந்துறை என்கிற இத்தலமும் ஒன்றாகும். மற்றவை திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி.

தல வரலாறு

தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டதால், சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாகி அவரால் சபிக்கப்பட்ட சந்திரன் க்ஷயரோகத்தால் பீடிக்கப்படு வருந்தினான். தனது குருவிடம் சாபம் தீர வழி கேட்டான். குருவும், மாந்துறை என்ற இத்தலத்துக்குச் சென்று இறைவனை வழிபடும்படி கூறினார். சந்திரனும் அவ்வாறே இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றான். இன்றும், இத்தல இறைவனை நாள்தோறும் சந்திரன் வழிபடுவதாக ஐதீகம். ஆகையால், அட்சயநாதசுவாமியை வணங்குபவர்கள் தங்களது நோய் நீங்கப்பெறுவர். ஜாதக ரீதியாக சந்திரன், உச்சம், நீசம், சத்ரு மற்றும் ரோக ஸ்தானத்தில் இருக்கப்பெறுவர்கள் வணங்க வேண்டிய தலம் இது. ரோகிணி, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய தலம். கடக ராசிக்காரர்கள் எப்போதும் வணங்க வேண்டிய தலம்.

விவசாயம் மேம்பட வழிபாடு செய்ய வேண்டிய தலம்

சந்திர தோஷத்துக்குப் பரிகாரத் தலமாக விளங்கும் இத்தலம், விவசாயம், நீர்வளம் நன்கு சிறக்க வழிபட வேண்டிய தலமாகவும் இருக்கிறது. ஒருமுறை தேவலோகத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அதை நிவர்த்தி செய்ய இந்திரனும், வருணனும் இத்தல இறைவனை வந்து வழிபட்டு பூஜித்த சிறப்பு வாய்ந்த தலம். தேவலோகத்தின் பஞ்சத்தை நீக்கி அருளிய இத்தல இறைவனை பூஜித்து விவசாயம் செய்ய ஆரம்பித்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும், பஞ்சாங்கத்தில் குறிபிட்டுள்ள கீழ்நோக்கு நாள், வாஸ்து நாட்கள், ஏர், கலப்பை பிடிக்க வேண்டிய நாட்களிலும் இத்தல இறைவன் முன் கலப்பைக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, இறைவனுக்கு வழிபாடுகள் செய்து சுவாமியை வலம் வந்து பின் விவசாயம் தொடங்கினால், விவசாயம் பெருகும், நீர்வளம் அதிகரிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

சுக்கிரன் தலமான திருகஞ்சனூர், சூரியன் தலமான சூரியனார்கோவில், சந்திரன் தலமான தென்கரை மாந்துறை ஆகிய மூன்று தலங்களும் அருகருகே இருப்பதால், ஆடுதுறையில் இருந்து ஆட்டோ மூலம் எளிதில் சென்று வரலாம்.

Picture courtesy : www.shivatemples.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com