இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் இன்று தொடங்குகிறது.
சென்னை டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதால் மிகுந்த நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் பெற்றுள்ள இந்திய அணி, இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியோ, முதல் போட்டியில் தோற்றதால், இந்தப் போட்டியில் வென்று சரிவிலிருந்து மீளும் கனவோடு களம் காண்கிறது.
கடந்த இங்கிலாந்து தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணி, அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்டு தொடரை இழந்தது. அதைப்போல் இந்த முறை ஆஸ்திரேலியாவை ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது என்பதில் இந்திய வீரர்கள் உறுதியாக உள்ளனர்.
கவலையளிக்கும் தொடக்கம்: இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் சேவாக், முரளி விஜய் ஆகியோரின் ஆட்டம் கவலையளிப்பதாக உள்ளது. சென்னை டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலுமே அவர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். எனினும் முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற அணியில் தோனி மாற்றம் செய்ய விரும்பமாட்டார் என்பதால் அவர்கள் இருவரும் 2-வது டெஸ்டில் விளையாட அதிக வாய்ப்புள்ளது.
பலமான மிடில் ஆர்டர்: மிடில் ஆர்டரில் கேப்டன் தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக தோனி அதிரடியாக விளையாடி இரட்டைச் சதம் அடித்ததோடு பல்வேறு சாதனைகளையும் முறியடித்தார். இதேபோல் விராட் கோலியும் சதமடித்தார்.
சச்சின் சதமடிக்காதபோதிலும், முதல் இன்னிங்ஸில் இக்கட்டான நேரத்தில் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் குவித்து இந்தியா சரிவிலிருந்து மீள்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். இவர்கள் அனைவரும் இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உள்ளூர் நாயகனான பிரக்யான் ஓஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த போட்டியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தனர். அஸ்வின் 12 விக்கெட்டுகளயும், ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹர்பஜன் சிங் முதல் இன்னிங்ஸில் ஜொலிக்காத போதிலும், 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர், மேத்யூ வேட் ஆகிய இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்.
ஏற்கெனவே இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா இருப்பதால், மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜாவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று தெரிகிறது. ஒருவேளை ஓஜாவுக்கு அணியில் இடம் கிடைக்கும்பட்சத்தில் ஹர்பஜன் நீக்கப்படலாம் அல்லது புவனேஸ்வர் குமாரை நீக்கிவிட்டு இந்திய அணி ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கலாம்.
கடந்த போட்டியில் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகிய இருவருமே ஒரு விக்கெட்கூட எடுக்கவில்லை. எனினும் புவனேஸ்வர் குமார் பேட்டிங்கில் 38 ரன்கள் எடுத்ததோடு, தோனியுடன் இணைந்து 9-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தார். ஆனாலும் ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்குவது என்று முடிவெடுத்தால், அனுபவத்தைக் கருத்தில் கொண்டு இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு: ஆஸ்திரேலிய அணிக்கு பேட்டிங்கில் ஒரே பலம் அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க்தான். அதற்கு அடுத்தபடியாக டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், எட் கோவனை நம்பியே அந்த அணி உள்ளது. அறிமுகப் போட்டியில் விளையாடிய மோய்சஸ் ஹென்ரிக்ஸ் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கண்டார். பின்வரிசையில் அவரைத் தவிர வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை.
மிடில் ஆர்டரில் அந்த அணியின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. கடந்த போட்டியில் 3-வது வீரராக களமிறங்கிய பில் ஹியூஸ், மொத்தம் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் வகையில் ஹியூûஸ நீக்கிவிட்டு, மற்றொரு ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு வழங்கலாமா என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் சிந்தித்து வருகிறது. பில் ஹியூஸ் நீக்கப்படும் பட்சத்தில் 3-வது வீரராக வாட்சன் களமிறங்குவார் என்று தெரிகிறது.
கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்: கடந்த போட்டியில் ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கியதால் தோல்வி கண்ட ஆஸ்திரேலியா, இந்த முறை கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே 2-வது சுழற்பந்து வீச்சாளராக சேவியர் டோஹெர்ட்டி களமிறக்கப்படலாம். அப்படி மாற்றம் செய்யப்பட்டால் பீட்டர் சிடில் அல்லது மிட்செல் ஸ்டார்க் ஆகியோரில் ஒருவர் அணியில் இருந்து நீக்கப்படலாம்.
முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி முன்னிலையை அதிகரிக்க கடுமையாகப் போராடும். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி, இந்த டெஸ்ட் போட்டியில் தோற்கும்பட்சத்தில் தொடரை இழப்பதிலிருந்து தப்புவது கடினம் என்பதால் எப்படியாவது இந்தப் போட்டியில் வெற்றிபெற முயற்சிக்கும்.
போட்டி நேரம்:
காலை 9.30
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் கிரிக்கெட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கலங்கரை விளக்கக் கப்பல்கள் இயக்குநரகத்தில் டெக்னீசியன் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ஈரான் உடன் அமைதிப்பேச்சு! பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!

பும்ரா, ஹேசில்வுட் பயமில்லை: கேக் வெட்ட நேரமில்லாமல் தூங்க சென்ற வைபவ் சூர்யவன்ஷி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


