ஆஸ்திரேலியா டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம் 182/3
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 52 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 52 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர்கள் முரளி விஜய் 10, சேவாக் 2 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், சச்சின் (71), விராட் கோலி (50) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இந்திய அணி இன்னும் 198 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 133 ஓவர்களில் 380 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 95 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கிளார்க் 103, பீட்டர் சிடில் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
கிளார்க் 130: இரண்டாவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மைக்கேல் கிளார்க்-பீட்டர் சிடில் ஜோடி இந்திய பெüலர்களை சோதித்தது. இவர்களை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் முயற்சி மேற்கொண்டபோதும், 25-வது ஓவரிலேயே இந்த ஜோடியைப் பிரிக்க முடிந்தது. ஜடேஜா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட கிளார்க் தூக்கியடித்தார். அதை ஆஃப் ஸ்ட்ரெய்ட் திசையில் நின்ற புவனேஸ்வர் குமார் அற்புதமாகக் கேட்ச் செய்ய கிளார்க்கின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கிளார்க் 246 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் குவித்தார்.
இதன்பிறகு ஆமை வேகத்தில் ஆடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திய சிடிலை ஹர்பஜன் சிங் வெளியேற்றினார். 94 பந்துகளைச் சந்தித்த சிடில் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்தார். 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹர்பஜன் சிங், இந்த இன்னிங்ஸில் வீழ்த்திய முதல் விக்கெட் இது. கடைசி விக்கெட்டாக நாதன் லியான் 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 380 ரன்களில் முடிவுக்கு வந்தது. ஜேம்ஸ் பட்டின்சன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சச்சின் 71: உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் இன்னிங்ûஸ விளையாடிய இந்திய அணியில் முரளி விஜய் 10 ரன்களில் பட்டின்சன் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுக்க, சேவாக்குடன் இணைந்தார் சேதேஷ்வர் புஜாரா. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சேவாக் 2 ரன்கள் எடுத்திருந்தபோது பட்டின்சன் வீசிய 6-வது ஓவரின் 2-வது பந்தில் எதிர்பாராதவிதமாக போல்டு ஆனார். அவர் தடுத்து ஆடிய அந்த பந்து துரதிருஷ்டவசமாக பெய்ல்ûஸ தகர்த்தது.
இதையடுத்து களம்புகுந்த சச்சின், பட்டின்சன் பந்தில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசி தனது இன்னிங்ûஸ அமர்க்களமாகத் தொடங்கினார். அந்த ஓவரின் கடைசிப் பந்திலும் அவர் பவுண்டரி அடித்தார். இதன்மூலம் தான் சந்தித்த முதல் 4 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாசினார் சச்சின். எனினும் இதன்பிறகு சச்சின் நிதானமாகவே விளையாடினார். அவருக்கு பக்கபலமாக புஜாராவும் விளையாட இந்திய அணி 27 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. இந்த நிலையில் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, 44 ரன்கள் எடுத்திருந்தபோது பட்டின்சன் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 76 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.
இதையடுத்து விராட் கோலி களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சச்சின் 80 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் 67-வது அரைசதம் ஆகும். இதன்பிறகு சச்சின் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தபோதிலும், மறுமுனையில் விராட் கோலி, நல்ல பந்துகளை வீணடிக்காமல் பவுண்டரிக்கு விரட்டினார்.
2-வது நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் கோலி அரைசதம் கண்டார். அவர் 84 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். 15-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோலிக்கு இது 6-வது அரைசதம் ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த 2-வது அரைசதம் இது. 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 52 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
சச்சின் 128 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்களும், விராட் கோலி 84 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியத் தரப்பில் ஜேம்ஸ் பட்டின்சன் 6 ஓவர்களில் 25 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3-வது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
சிங்கம் களமிறங்கிடுச்சு
சச்சின் பேட்டிங் செய்வதற்காக மைதானத்திற்கு வந்தபோது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது அங்குள்ள பிரதான ஸ்கோர் பலகையில், சிங்கம் களமிறங்கிடுச்சு என்ற வாசகம் இடம்பெற்றது. அது ரசிகர் ஒருவர், இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்துக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ். ஆகும்.
ரசிகர்களைக் கவர்ந்த கிளார்க்
கிரிக்இன்போ இணையதளத்துக்கு ரசிகர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.கள் மைதானத்தில் உள்ள ஸ்கோர் பலகையில் அவ்வப்போது இடம்பெற்றது.
இதனால் ஏராளமான ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சிக்ஸர், பவுண்டரிகளை அடிக்குமாறு கூறி வீரர்களை உற்சாகப்படுத்தினர். அப்போது அதைப்பார்த்த ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், கிரிக்கெட் மீதான இந்தியர்களின் ஆர்வத்துக்கும், கிரிக்கெட்டுக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். அதுவும் ஸ்கோர் பலகையில் இடம்பிடித்தது.
இதையடுத்து சில ரசிகர்கள், கிளார்க்கிடம் கேள்விகளை கேட்டு எஸ்.எம்.எஸ். செய்தனர். அதற்கும் கிளார்க் உற்சாகமாகப் பதிலளித்தார். இதேபோல் சச்சினின் ஆட்டத்தைப் பார்க்க யாரெல்லாம் ஞாயிற்றுக்கிழமை வருவீர்கள் என்ற கேள்விக்கு, மைதானத்தில் இருந்த கிளார்க் கையை உயர்த்தி தானும் வருவதாக தெரிவித்தார்.
அஸ்வின் பெஸ்ட்
2-வது நாளான சனிக்கிழமை ஆஸ்திரேலியாவின் நாதன் லியானை வீழ்த்தியதன் மூலம் 42 ஓவர்களில் 103 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். இதுதான் டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அவரின் சிறப்பான பந்துவீச்சு. முன்னதாக கடந்த ஆண்டு ஹைதராபாதில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது.
விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்
2-வது நாளில் இந்தியா பேட்டிங் செய்யும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும், சனிக்கிழமை என்பதாலும், ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்தனர். இதனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. இதனால் நிறைய ரசிகர்கள் ஏமாற்றறத்துடன் வீடு திரும்பினர். 3-வது நாளான ஞாயிற்றுக்கிழமை
சச்சின் சதமடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தொடரும் கிளார்க் சாதனைகள்
இந்த போட்டியில் 130 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய மண்ணில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் கிளார்க். முன்னதாக 2008-ல் பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் ரிக்கி பாண்டிங் 123 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் சர்வதேச அளவில் 39-வது இடத்துக்கும், ஆஸ்திரேலியர்கள் வரிசையில் 9-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளார் கிளார்க்.
சச்சின் 7,000
கடந்த சில மாதங்களாக தடுமாறி வந்த சச்சின், தற்போது ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் குவித்து மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். சென்னையில் இது அவர் அடித்த 2-வது அரைசதம். ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 67-வது அரைசதம். இந்தப் போட்டியில் அவர் 60 ரன்கள் எடுத்தபோது தாய்நாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்த 2-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 89-வது போட்டியில் சச்சின் இந்த சாதனையை எட்டியுள்ளார். இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார். சொந்த மண்ணில் 92 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7,578 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் இந்தப் போட்டியில் 62 ரன்கள் எடுத்தபோது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3,500 ரன்கள் (36 போட்டிகள்) எடுத்தார் சச்சின். சேப்பாக்கம் மைதானத்தில் 10-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் சச்சின் தற்போது வரை 947 ரன்கள் குவித்துள்ளார். அவர் இன்னும் 72 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் இங்கு அதிக ரன்கள் குவித்தவரான சுநீல் கவாஸ்கரின் சாதனையை முறியடித்து விடுவார்.
கடைசியாக 2008-ல் இங்கிலாந்துக்கு எதிராக இங்கு விளையாடிய சச்சின், 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார். அதனால் தற்போது 71 ரன்கள் எடுத்துள்ள சச்சின், இந்த முறையும் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. கடந்த 14 இன்னிங்ஸ்களில் சச்சின் அடித்த 2-வது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா-380 (கிளார்க் 130, ஹென்ரிக்ஸ் 68, அஸ்வின் 7வி/103, ஜடேஜா 2வி/71)
இந்தியா-182/3 (சச்சின் 71*, கோலி 50*, பட்டின்சன் 3வி/25)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...