/

தடைகளைத் தாண்டி வந்திருக்கிறேன்!

காயம் உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் என்றார் திருச்சியைச் சேர்ந்த சகாய ராஜா பிரான்சிஸ்.

News image
Updated On :29 ஜூன் 2013, 6:45 pm

ஏ.வி. பெருமாள்

காயம் உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் என்றார் திருச்சியைச் சேர்ந்த சகாய ராஜா பிரான்சிஸ்.

20-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 3 முதல் 7 வரை புணேவில் நடைபெறுகிறது. அதில் ஆடவர் 800 மீ. ஓட்டத்தில் தமிழகத்தின் சகாய ராஜா பிரான்சிஸ் பங்கேற்கிறார்.

3-வது முறையாக ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கும் சகாய ராஜா, இந்த முறை பதக்கம் வெல்லாமல் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக குடும்பத்தைப் பிரிந்து உதகையை அடுத்த வெலிங்டனில் உள்ள எம்.ஆர்.சி. மைதானத்தில் 17 மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

திருச்சியில் உள்ள மத்திய உற்பத்தி வரித் துறையில் பணிபுரிந்து வரும் 31 வயதான சகாய ராஜா, ஆசிய தடகளப் போட்டி குறித்து கூறியதாவது:

காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்றதுதான் நான் பங்கேற்ற கடைசி சர்வதேசப் போட்டிகள். இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இரண்டரை ஆண்டுகால இடைவெளியில் காயம், தனிப்பட்ட பிரச்னை, அழுகை, ஏமாற்றம், சோர்வு என பல்வேறு பயங்கரமான தடைகளைக் கடந்து வந்திருக்கிறேன்.

எனது மனைவி, குழந்தைகளைப் பிரிந்து 17 மாத பயிற்சியை மேற்கொண்டதன் மூலம் ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

இந்த பயிற்சிக் காலத்தில் காயம், அதனால் ஏற்பட்ட வலிகள் என ஏராளமான சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன். சில நேரங்களில் பயிற்சியை முடித்துவிட்டு வரும்போது உணவுகூட கிடைக்காமல் பட்டினி கிடந்திருக்கிறேன். பயிற்சிக் காலத்தில் நான் அழுத நாள்கள்தான் அதிகம்.

காயம் காரணமாக எழுந்து நடக்க முடியாமலும், ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லாமலும் கஷ்டப்பட்டிருக்கிறேன். தொடர் சோதனைகள் காரணமாக ஒரு கட்டத்தில் நம்மால் சாதிக்க முடியுமா என்ற சந்தேகம்கூட எழுந்தது. ஆனாலும் என்னுடைய அப்பா, மனைவி இருவரும் அளித்த ஊக்கத்தின் காரணமாக இன்றைக்கு தடைகளைத் தாண்டி வந்திருக்கிறேன்.

இப்போது எனது உடல் எடையில் 9 கிலோவை குறைத்திருக்கிறேன். வலிகள் இன்றி வாழ்க்கையில் வெற்றி காண முடியாது என்பதை விளையாட்டு எனக்கு உணர்த்தியிருக்கிறது. விளையாட்டு கொடுத்த அனுபவத்தை நான் இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

எனவே புணேவில் நடைபெறவுள்ள ஆசிய தடகளப் போட்டி எனது வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டியாக இருக்கும். தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பிருந்தது. ஆனால் அரையிறுதியின்போது தவறி கீழே விழுந்ததால், பதக்கக் கனவு ஏமாற்றத்தில் முடிந்தது. சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் துரதிருஷ்டவசமாக தகுதிச்சுற்றோடே வெளியேறினேன்.

2005-ல் தென் கொரியாவிலும், 2007-ல் ஜோர்டானிலும் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். இதில் ஜோர்டான் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறினேன். தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விட்டு ஜோர்டான் சென்றதால், பயங்கர சோர்வு ஏற்பட்டது. அதனால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தேன்.

தற்போது 3-வது முறையாக ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கிறேன். இந்த முறை இந்தியாவில் போட்டி நடக்கிறது. எனவே பதக்கம் வெல்ல இதைவிட நல்ல வாய்ப்பு இனிமேல் கிடைக்காது.

தாய் நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் நடக்கவுள்ள இந்தப் போட்டியில் எனது முதல் இலக்கு, இறுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதுதான். நிச்சயம் அந்த இலக்கை எட்டிவிடுவேன். அதன்பிறகு பதக்கக் கனவை நோக்கி ஓடுவேன். எனினும் இறுதிச் சுற்று நடைபெறும் தினத்தில் நம்முடைய செயல்பாடு, உடற்தகுதி ஆகியவற்றைப் பொறுத்துதான் பதக்க வாய்ப்பு அமையும்.

800 மீ. ஓட்டத்தில் எனது "பெஸ்ட் டைமிங்' 1 நிமிடம், 46 விநாடிகள், 77 மைக்ரோ விநாடிகள் ஆகும். இதுதான் மாநில சாதனையாக (தமிழக அளவில்) உள்ளது. இந்திய அளவில் இது 3-வது "பெஸ்ட் டைமிங்' ஆகும்.

கடந்த காமன்வெல்த் போட்டியில் 800 மீ. ஓட்டத்தில் 1 நிமிடம், 46 விநாடிகள், 8 மைக்ரோ விநாடிகளில் இலக்கை எட்டியவர்தான் தங்கப் பதக்கம் வென்றார். 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடித்தவர்கள் 1 நிமிடம், 47 விநாடிகளில் இலக்கை எட்டியவர்களாகவே இருந்தனர்.

இந்த முறை நான் எனது "பெஸ்ட் டைமிங்கை' பதிவு செய்யும் பட்சத்தில் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும். 1:47 அல்லது 1:46 நிமிடங்களில் இலக்கை எட்டும்பட்சத்தில் பதக்கம் உறுதி என்றார்.

வென்ற பதக்கங்கள்: 1996 முதல் பள்ளிகள் அளவிலான போட்டியிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் கோலோச்சத் தொடங்கிய சகாய ராஜா, 2004 முதல் 2010 வரையிலான காலங்களில் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் 800 மீ. ஓட்டத்தில் ஏதாவது ஒரு பதக்கத்தை வென்று முத்திரை பதித்தவர்.

2006-ல் புணே, பாங்காக் (தாய்லாந்து), பெங்களூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஆசிய கிராண்ட்ப்ரீ போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களும், கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும் வென்றுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் வெண்கலம் வென்றார். இதில் மைக்ரோ விநாடிகளிலேயே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை இழந்தார்.

தென் கொரியா, ஜோர்டான், இலங்கை, சீனா போன்ற வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.

வலிகள் இன்றி வாழ்க்கையில் வெற்றி காண முடியாது என்பதை விளையாட்டு எனக்கு உணர்த்தியிருக்கிறது. விளையாட்டு கொடுத்த அனுபவத்தை நான் இப்போது ஏற்று கொண்டிருக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.