மக்களுக்கே வெற்றி
சுதந்திர இந்தியாவில் 16ஆவது மக்களவைத் தேர்தல் பணிகளை படுதீவிரமாக தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது.


சுதந்திர இந்தியாவில் 16ஆவது மக்களவைத் தேர்தல் பணிகளை படுதீவிரமாக தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது. 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாகத் தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 9ஆவது கட்டமாக மே 12ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுடன் தேர்தல் முடிவடைகிறது. பல்வேறு தேசிய, மாநில அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் வெற்றியை நோக்கி களத்தில் இறங்கியுள்ளனர்.
ஆனால், தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்தி முடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தல் ஆணையமும் களத்தில் குதித்துள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது முதல் பாதுகாப்பு வரை அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளளப்பட்டு வருகின்றன.
தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, மதுபான விநியோகம், இலவசங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தடுப்பதற்கு தேர்தல் அலுவலக அதிகாரிகள், காவல் துறை, வருவாய்த் துறை, கலால் துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகளும் களத்தில் இரவு பகலாக கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். நியாயமாகவும், பாதுகாப்பாகவும் வெற்றிகரமான தேர்தலை முன்னோக்கியே இவர்களது பயணம் உள்ளது.
ஆனால், வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மக்களை ஏமாற்றி, குறுக்கு வழியில் பயண இலக்கை எட்டுவதற்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் களத்தில் பணியாற்றுவது கண்கூடு. சுதந்திரம் அடைந்து இதுவரை நடந்துள்ள 15 மக்களவைத் தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காமல் தவிப்பில் உள்ளதோ மக்கள்தான்.
இப்போது மீண்டும் அடுத்தடுத்த (இலவச) வாக்குறுதிகளை அறிவித்து பீடு நடைபோடத் தொடங்கிவிட்டன அரசியல் கட்சிகள். வாக்குறுதி அறிவிப்புகளில் வெற்றியும் கண்டு விடுகின்றன. பரஸ்பரம் வசைமாறி பொழிகின்றன. நாட்டில் நல்லாட்சியை நோக்கியா இவர்களது பயணம் உள்ளது? இல்லையே...!
வெளிநாடுகளில் மறைந்து கிடக்கும் கருப்புப் பணம் மீட்கப்பட்டதா? ஊழல் ஒழிக்கப்பட்டதா? தீண்டாமை முற்றிலும் நீங்கியதா? பயங்கரவாதம் மறைந்ததா? சுய நலத்துக்காக கட்சி மாறுவது தடுக்கப்பட்டதா? குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி கிடைத்ததா? அனைவருக்கும் சம நீதி கிடைத்ததா? ஏழைகள் பணக்காரர்கள் ஆனார்களா? இது போன்று பலப் பல...
ஆனால், இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதுதானே உண்மை. இது அனைவருக்கும் வெளிச்சம். ஆனால், மக்கள் இவற்றை மறந்துவிட்டு தேர்தலை சந்திக்கின்றனரா? இதற்கு வாக்குப்பதிவு முத்திரையின் மூலம் கண்டிப்பாக பதில் கிடைக்கும். பல்வேறு வேஷங்களில் காட்சிகள் மாறினாலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் மக்களின் பங்கு அளப்பரியது. இதில்தான் மக்களின் வெற்றியும் உள்ளது.
முதல் மக்களவைத் தேர்தலில் 17.32 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இப்போது நடைபெறவுள்ள 16ஆவது மக்களவைத் தேர்தலில் இது 81.46 கோடி பேராக அதாவது 4.7 மடங்கு உயர்ந்துள்ளது. இதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் ஆக்கப்பூர்வப் பணி விளங்கும். இதில் புகைப்பட அடையாள அட்டையுடன் உள்ள வாக்காளர்கள் விகிதம் சராசரியாக 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆண்-பெண் வாக்காளர்கள் "52.40 : 47.60' என்ற விகிதத்தில் நீடித்து வருகிறது. குறிப்பாக 1998க்குப் பிறகு இப்போது வரை வாக்காளர்கள் எண்ணிக்கை 34.50 சதவீதம் உயர்ந்துள்ளது. பல்வேறு கட்டங்களாகப் பிரித்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட்டு வாக்குப்பெட்டிகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு ஒரே நாளில் வாக்குகளை எண்ணி முடிவுகள் வெளியிடுப்படுகின்றன. இது தேர்தல் ஆணையத்துக்குக் கிடைக்கும் வெற்றி.
இக்கட்சிக்கு இவ்வளவு சீட்கள்... இது முந்துகிறது... அது முந்துகிறது... அந்த அலை, இந்த அலை என்று ஊடகங்களும் போட்டி மனப்பான்மையிலும் பணி ஆற்றி வருகின்றன. முடிவுகள் மாறாக வந்துவிட்டால் அமைதியாகிவிடுகின்றன. ஓரளவு சரியாக இருந்துவிட்டால் மார் தட்டிக் கொண்டு வெற்றியைப் பறைசாற்றுகின்றன. ஆனால், மக்களுக்கு என்ன பயன்?
அனைத்துக் கட்சிகளிலும் குற்றப் பின்னணியுள்ளவர்கள் ஏராளமானோர் களத்தில் உள்ளனர். குடிநீர், மின் கட்டணம் செலுத்தாத கோடீஸ்வரர்களும் போட்டியிடுகின்றனர். பயங்கரவாதிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் உதவியவர்களும், தாதாக்களும், ரெüடிகளும் களத்தில் இல்லாமல் இல்லையே...! எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானே வாக்காளர்கள் இருக்
கிறார்கள்.
சாதி, மதம், இனப் பாகுபாடின்றி, பாதுகாப்பாக வாழ்வதற்கும், ஊழல் இல்லா ஆட்சி நடப்பதற்கும், விலைவாசி உயர்வு என்ற புற்றுநோயைப் பெருக்க விடாமல் தடுப்பதற்கும் டாக்டர்கள் போல ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள் பல்வேறு முறைகளில் சிந்தித்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்யத்தான் செய்கிறார்கள். ஆனால், பலன் நிறைவாக இல்லாவிட்டாலும் அரசியல் கட்சிகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதில் முழு வெற்றி காண்கிறார்கள் என்பதுதான் உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...