அக்னி பரீட்சையில் இந்திய அணி
மொஹாலியில் வியாழக்கிழமை தொடங்கவுள்ள இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட


மொஹாலியில் வியாழக்கிழமை தொடங்கவுள்ள இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெரும் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவிடம் டி20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரில் அதற்கு பதிலடி கொடுக்குமா என்ற ஏக்கம் இந்திய ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தோல்விப் பாதையில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்திலும் கோலி தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது.
நம்பர்-1 தென் ஆப்பிரிக்கா: ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் விளையாடவிருக்கும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால், இதில் வெற்றி பெற இந்திய அணி போராடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியுமா?
அனுபவம், இளமை என சமபலம் கொண்ட அணியாகத் திகழும் தென் ஆப்பிரிக்கா, கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர், ஒருநாள் தொடரையும் வென்று அசைக்க முடியாத அணியாக தனித்து நிற்கிறது. அதனால் அந்த அணி டெஸ்ட் தொடரில் மிகுந்த நம்பிக்கையோடு இந்தியாவை எதிர்கொள்ளும்.
தென் ஆப்பிரிக்க அணி கடந்த 9 ஆண்டுகளாக அன்னிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. கடைசியாக 2006-ல் இலங்கை மண்ணில் தோற்ற தென் ஆப்பிரிக்கா, டிவில்லியர்ஸ், டூபிளெஸ்ஸி போன்ற அதிரடி மன்னர்களின் வருகைக்கு பிறகு எதிரணிகளால் வீழ்த்த முடியாத அணியாக உருவெடுத்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லையென்றாலும், 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது.
மும்மூர்த்திகள்: தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது ஹசிம் ஆம்லா, டிவில்லியர்ஸ், டூபிளெஸ்ஸி ஆகிய மும்மூர்த்திகள்தான். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ஆம்லா வெறும் 89 ரன்கள்தான் குவித்தார். ஆனால் அதை வைத்து அவரை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் இந்திய மண்ணில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 823 ரன்கள் குவித்துள்ளார். அவருடைய சராசரி 102.87 ஆகும்.
டிவில்லியர்ஸ் இப்போது உலகின் எந்த அணியையும், எப்படிப்பட்ட பந்துவீச்சாளரையும் பந்தாடும் ஆற்றல் பெற்றவராக மிரட்டி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 சதங்களையும், பயிற்சிப் போட்டியில் ஒரு சதத்தையும் விளாசிய டிவில்லியர்ஸ்,உச்சகட்ட பார்மில் இருப்பதால் டெஸ்ட் தொடரிலும் இந்திய பவுலர்களை பதம்பார்ப்பார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. தனது அதிரடியால் இந்தியாவிலும் தனக்கென்று ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கும் டிவில்லியர்ஸ் இந்திய பவுலர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்.
டூபிளெஸ்ஸியும் முழு பார்மில் இருப்பது தென் ஆப்பிரிக்காவுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஆம்லா, டிவில்லியர்ஸ், டூபிளெஸ்ஸி ஆகிய மூன்று பேருமே சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடியவர்கள். டிவில்லியர்ஸ், டூபிளெஸ்ஸி ஆகியோர் ஐபிஎல் போட்டியில் ஆடி வருவதால் இங்குள்ள ஆடுகளங்களை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
மிரட்டும் தாஹிர்: இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவையாக இருக்கும் என்பதால் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் பெரும் தலைவலியாக இருப்பார். இந்திய ஆடுகளங்களில் பந்து வேகமாக சுழன்று திரும்பும்போது அதை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழக்க நேரிடும். தாஹிரின் பந்துவீச்சும் அதே போன்றதுதான்.
தாஹிர் பந்தை தாழ்வாக மிகத் துல்லியமாக பேட்ஸ்மேன்கள் நிற்கும் கிரீஸில் வீசும் ஆற்றல் பெற்றவர். அதனால் பேட்ஸ்மேன்கள் கால்களை முன்புறமோ அல்லது பின்பக்கமாகவோ நகர்த்தி ஆட முடியாமல் திணறுவதோடு விக்கெட்டையும் இழக்கக்கூடும்.
2012-ல் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களான கிரீம் ஸ்வான், மான்டி பனேசர் ஆகியோர் மேற்கண்ட பந்துவீச்சை கையாண்டுதான் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்தார்கள். அதில் கிரீம் ஸ்வான் 20 விக்கெட்டுகளும், பனேசர் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு...
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் விளையாடவிருக்கும் இந்திய அணி, இங்கு கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் (2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக) மட்டுமே தோற்றுள்ளது. 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை சமன் செய்துள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடியபோது சச்சின் டெண்டுல்கர், சேவாக், கம்பீர், ஜாகீர்கான் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இருந்தார்கள். ஆனால் இப்போது கம்பீரைத் தவிர மற்ற அனைவரும் ஓய்வுபெற்றுவிட்டனர். கம்பீரும் அணியில் இல்லை.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் அனுபவ வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால் விராட் கோலி, முரளி விஜய், அஸ்வினைத் தவிர்த்து வேறு யாரும் இல்லை. ஆனாலும் கோலி கேப்டனான பிறகு இந்திய அணியின் போராடும் குணம் வெகுவாக அதிகரித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்த கோலி, நிச்சயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் வெற்றி பெறுவதற்கு போராடுவார் என நம்பலாம்.
5 பவுலர்கள்: ஷிகர் தவன்-முரளி விஜய் கூட்டணி நல்ல தொடக்கம் ஏற்படுத்தித் தரும் பட்சத்தில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நெருக்கடியின்றி ஆட முடியும். மிடில் ஆர்டரில் புஜாரா, கேப்டன் கோலி ஆகியோர் சிறப்பாக ஆடுவது அவசியம். இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்குவது என முடிவெடுத்தால் 5-வது பேட்ஸ்மேன் இடத்தில் ரோஹித் சர்மா அல்லது ரஹானே ஆகியோரில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும். 6-வது பேட்ஸ்மேனாக விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா களமிறங்குவார்.
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் இஷாந்த் சர்மா ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதால் வருண் ஆரோனை நம்பியே இந்திய அணி உள்ளது. ஆல்ரவுண்டர் இடத்தில் ஸ்டூவர்ட் பின்னி இடம்பெறும்பட்சத்தில் மித வேகப்பந்து வீச்சாளாராக ஆரோனுக்கு பலம் சேர்ப்பார். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.
பதிலடி கொடுக்குமா?
தென் ஆப்பிரிக்காவோடு ஒப்பிடும்போது இந்திய அணி பலவீனமாக இருந்தாலும்கூட, ஆம்லா, டிவில்லியர்ஸ், டூபிளெஸ்ஸி ஆகியோரை விரைவாக வீழ்த்தும்பட்சத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோற்கும்போது அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சொந்த மண்ணில் தோற்கும்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களில் தோற்று கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணிக்கு, இந்த டெஸ்ட் தொடர் அக்னி பரீட்சைதான். கோலி படை வெல்லுமா, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
"இம்ரான் தாஹிர், பந்தை தாழ்வாக மிகத் துல்லியமாக பேட்ஸ்மேன்கள் நிற்கும் கிரீஸில் வீசும் ஆற்றல் பெற்றவர். அதனால் பேட்ஸ்மேன்கள் கால்களை முன்புறமோ அல்லது பின்பக்கமாகவோ நகர்த்தி ஆட முடியாமல் திணறுவதோடு விக்கெட்டையும் இழக்க நேரிடும்.'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...