அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழகம்-குஜராத் ரஞ்சி கிரிக்கெட் போட்டி: முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

திருநெல்வேலியில் நடைபெறும் தமிழகம்-குஜராத் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் திங்கள்கிழமை மழையால் பாதிக்கப்பட்டது.

News image
Updated On :23 நவம்பர் 2015, 9:01 am

முத்துக்குமார்

திருநெல்வேலியில் நடைபெறும் தமிழகம்-குஜராத் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் திங்கள்கிழமை மழையால் பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மைதானத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டி திங்கள்கிழமை தொடங்கும் எனவும், தமிழகம்-குஜராத் அணிகள் மோதும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அணியில் அபிநவ் முகுந்த் (கேப்டன்), பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ராமசுவாமி பிரசன்னா, மலோலன் ரங்கராஜன், அஸ்வின் கிறிஸ்ட், இந்திரஜித், சந்திரசேகர், ஜெகன்னாதன் கெளஷிக், முகமது, விஜய் சங்கர், ஜெகதீசன் கெளஷிக், உமாசங்கர் சுஷில், பரத் சங்கர், கெளஷிக் காந்தி, ராஹில் ஷா, லட்சுமி நாராயணன் விக்னேஷ், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், ராஜகோபால் சதீஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குஜராத் அணியில் சமித் படேல், பிரியங்க் பன்சால், பார்கவ் மீராய், பார்திவ் படேல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், மன்பிரீத் ஜுனேஜா, ஹார்திக் படேல், ருஜுல் பட், ரஷ் கேலரியா, ஜேஸ்பிரித் பூம்ரா, ஆர்.பி.சிங், சமித் கோயல், ரோஹித் தாஹியா, மேஹுல் படேல், நீரஜ் படேல், வேணுகோபால் ராவ், ஜேசல் கரியா, ரமேஷ் பவார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 பி' பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. குஜராத் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 22 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. திருநெல்வேலியில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் தமிழக அணி உள்ளதால், வீரர்கள் தங்களது முழுத்திறமையையும் வெளிக்காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை காலையில் வீரர்கள் அனைவரும் மைதானத்துக்கு வந்து சேர்ந்தனர். ஆனால், அதிகாலையில் பெய்த மழையின் காரணமாக மைதானத்தில் மழைநீர் தேங்கி ஈரப்பதம் நிலவியதால் அறிவிக்கப்பட்டபடி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நடுவர்கள் முற்பகல் 11.30 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்தனர். அப்போது, பிற்பகலில் ஆய்வு செய்துவிட்டு போட்டியைத் தொடங்கலாம் என தெரிவித்தனர். அதனால் பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

மைதானத்தின் பணியாளர்கள் ஈரப்பதத்தைக் குறைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். பகல் 1.30 மணிக்கு நடுவர்கள் மீண்டும் மைதானத்தை ஆய்வு செய்தனர். அப்போது போட்டிக்கு தகுந்த சூழல் இல்லாததால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

10 ஆண்டுகளுக்கு பின்பு திருநெல்வேலியில் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி போட்டி நடப்பதைக் கேள்விப்பட்ட திருநெல்வேலி மாவட்ட ரசிகர்கள் பலர் மைதானத்தில் திரண்டிருந்தனர். போட்டி நடைபெறாவிட்டாலும் காலை முதல் பிற்பகல் வரை மைதானத்தில் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தோடு கலைந்து சென்றனர். 2 ஆம் நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.24) காலை 9.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.