/

சர்ஃப்ராஸ் அஹமது சரியான தேர்வு

20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி கண்டதன் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்கள்

News image
Updated On :6 ஏப்ரல் 2016, 7:47 pm

ஏ.வி. பெருமாள்

20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி கண்டதன் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன. அங்கு மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலும், காட்சிகள் மட்டும் மாறியதே இல்லை. ஆனால் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் காட்சிகள் மாறுவதற்கான வாய்ப்புகள் தென்படுவதைப் பார்க்க முடிகிறது.
 உலகக் கோப்பையில் சந்தித்த படுதோல்வியின் காரணமாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட கேப்டன் ஷாகித் அப்ரிதி, வேறு வழியின்றி சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜிநாமா செய்தார். பாகிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டன் யார் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் எழுந்த நிலையில், புதிய கேப்டனாக சர்ஃப்ராஸ் அஹமது நியமிக்கப்பட்டுள்ளார்.
 சரியான தேர்வு: மூத்த வீரர்கள் பலர் இருந்தபோதிலும், சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் அனுபவம் இல்லாதவரான சர்ஃப்ராஸ் அஹமது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனினும் அவர் நிச்சயம் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர், தகுதியானவர் என்பதை மறுக்க முடியாது.
 தற்போதைய பாகிஸ்தான் அணியில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் ஆடும் திறமை கொண்ட சிலர் மட்டுமே உள்ளனர்.
 அவர்களில் சர்ஃப்ராஸும் ஒருவர். தலைசிறந்த பேட்ஸ்மேன், அற்புதமான விக்கெட் கீப்பர் என பன்முகத் திறமை கொண்டவர்.
 2006-ஆம் ஆண்டு 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றபோது அதன் கேப்டனாக இருந்தவர் சர்ஃப்ராஸ்தான். பாகிஸ்தான் சூப்பர் லீகில் கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
 அதில் கிளாடியேட்டர்ஸ் அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது. பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தற்போதைய துணை கேப்டனாகவும் இருக்கிறார். எனவே எல்லா வகையிலும் அவர் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர். எனவே டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு தலைமை வகிப்பதில் அவருக்கு நிச்சயம் பிரச்னை இருக்காது.
 ஆனால் அவருக்கு சகவீரர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கிறது. இல்லையெனில் ஒரு நல்ல கேப்டனை மீண்டும் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
 கோஷ்டி பூசல்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் திறமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. இன்றளவிலும் அந்த அணியை "கணிக்க முடியாத அணி' என்றே எல்லோரும் வர்ணிக்கிறார்கள். மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பிரச்னையே வீரர்களிடம் ஒற்றுமையில்லாததுதான். கோஷ்டி பூசல் காரணமாக வீரர்கள் சிதறி கிடக்கிறார்கள். அதுதான் அந்த அணியின் வெற்றியை தடுக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அந்த அணிக்குள் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருக்கிறது. அதை சரி செய்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் இன்றளவிலும் முடியவில்லை.
 பாகிஸ்தான் அணியில் கோஷ்டி பூசல் தலை விரித்தாடுகிறது என்பதற்கு மூத்த வீரரான ஷோயிப் மாலிக்கின் பேட்டியே நல்ல உதாரணம்.
 "2009 உலகக் கோப்பையின்போது அணியில் இடம்பெற்றிருந்த 6 வீரர்கள் பேசிக்கொள்ளமாட்டோம். ஆனாலும் நாங்கள் கோப்பையை வென்றோம்' என இந்த உலகக் கோப்பையின்போது மாலிக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 கேப்டனுடன் மோதல், பயிற்சியாளருடன் மோதல், வீரர்களிடையே கை கலப்பு, வீரர்களிடையிலான வறட்டு கெளரவம் என சர்ச்சைகளோடே பாகிஸ்தான் கிரிக்கெட் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டுக்காக ஆடுகிறோம் என்ற உணர்வு இல்லாமல், வீரர்கள் தங்களின் சொந்த மோதல்களுக்கு முன்னுரிமை கொடுத்ததன் விளைவே தொடர் தோல்விக்கு காரணம்.
 புதிய அத்தியாயம்: ஆனால் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான ஒருவரை கேப்டனாக நியமித்திருக்கிறது. சர்ஃப்ராஸ் அஹமதுவுக்கு சகவீரர்களிடையே பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என தெரிகிறது. அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதை அனைவரும் வரவேற்றிருக்கிறார்கள். விரைவில் புதிய பயிற்சியாளரும், புதிய தேர்வுக்குழுவினரும் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறது. எனினும் பாகிஸ்தான் வீரர்களிடையே பிளவு ஏற்படாமல் இருந்தால் மட்டுமே அவர்களால் சர்வதேச போட்டிகளில் சாதிக்க முடியும். வரும் நாள்களில் சர்ஃப்ராஸ் அஹமதுவுக்கு எஞ்சிய வீரர்கள் போதிய ஆதரவு அளிக்க வேண்டும். நீயா?, நானா? மோதல்களை மறந்துவிட்டு நாட்டுக்காக ஆடுகிறோம் என்ற உணர்வோடு ஆட வேண்டும்.
 இதற்கு முன்னர் சில நேரங்களில் செல்வாக்குமிக்க வீரர்கள், கிரிக்கெட் வாரிய தலைவருக்கு வேண்டப்பட்ட வீரர்கள் பாகிஸ்தான் கேப்டனாக நியமிக்கப்பட்ட வரலாறும் உண்டு. இதேபோல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாற்காலிக தீர்வாக சிலரை கேப்டனாக நியமித்ததும் உண்டு.
 ஆனால் இப்போது சர்ஃப்ராஸுக்கு கேப்டன் பதவியை வழங்கியிருப்பதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொலைநோக்கு பார்வையோடும், தங்கள் நாட்டு கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் கொண்டும் செயல்பட்டிருப்பதை உணர முடிகிறது. பாகிஸ்தான் அணி பலம் பெறுமா? சர்ஃப்ராஸ் கான், சர்ச்சைகளை தாண்டி கேப்டனாக சாதிப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
 மூத்த வீரர்கள் பலர் இருந்தபோதிலும், சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் அனுபவம் இல்லாதவரான சர்ஃப்ராஸ் அஹமது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனினும் அவர் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர், தகுதியானவர் என்பதை மறுக்க முடியாது.
 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.