/

பாகிஸ்தான் கிரிக்கெட்டும், பயிற்சியாளரும்...

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சந்தித்த படுதோல்வியின் எதிரொலியாக பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதியை தொடர்ந்து,

News image
Updated On :7 ஏப்ரல் 2016, 8:27 pm

ஏ.வி. பெருமாள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சந்தித்த படுதோல்வியின் எதிரொலியாக பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதியை தொடர்ந்து, பயிற்சியாளர் வக்கார் யூனிஸும் கழற்றிவிடப்பட்டுள்ளார்.
 இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே வலுக்கட்டாயமாக வக்கார் யூனிஸிடம் இருந்து ராஜிநாமா கடிதத்தை பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், புதிய பயிற்சியாளரை தேட ஆரம்பித்திருக்கிறது.
 அப்ரிதியைப் போலவே வக்கார் யூனிஸின் செயல்பாடும் மெச்சும்படியில்லை என்பது வெட்ட வெளிச்சமானபோதிலும் பதவியை விட்டு விலக மனமில்லாமல் போராடிய வக்கார் யூனிஸ், தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி விமர்சனத்துக்கு உள்ளானார்.
 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு ஒரு பயிற்சியாளராக நானும் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என அவர் கூறியிருந்தால் கெளரவமாக இருந்திருக்கும். ஆனால் வக்கார் யூனிúஸா, நியூஸிலாந்து தொடர், ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை தோல்விகளுக்கு கேப்டன் அப்ரிதியே காரணம் என குற்றம்சாட்டினார். அப்ரிதி கேப்டன் பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை என இப்போது கூறும் வக்கார் யூனிஸ், அது தொடர்பாக ஏன் முன்னதாகவே அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை? ஒரு தொடர் என்றால் பரவாயில்லை. 3 தொடர்களில் தோற்கும் வரை ஏன் பொறுமை காத்தார்?
 பதவியில் நீடித்தது ஏன்?
 தோல்வியிலிருந்து அணியை மீட்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காத வக்கார் யூனிஸ், தனது பதவிக்கு பங்கம் வந்ததும் அப்ரிதியை பலிகடா ஆக்குகிறார். இது ஒரு பயிற்சியாளராக அவர் தோல்வி அடைந்து விட்டதையே காட்டுகிறது என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
 தான் அளித்த பரிந்துரைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தவில்லை என இப்போது சாடுகிறார் வக்கார் யூனிஸ். அப்படியென்றால் அவர் ஏன் இவ்வளவு நாள்கள் பயிற்சியாளர் பதவியில் தொடர்ந்தார்? ஓர் அணியின் வெற்றியில் பயிற்சியாளரின் பங்கு முக்கியமானது. அவர் நல்ல திட்டங்களை கூறும்போது, அதை அணி நிர்வாகம் புறக்கணிக்குமானால், தனது பதவியை ராஜிநாமா செய்வதுதான் ஒரு நல்ல பயிற்சியாளருக்கு அழகு. அதை ஏன் வக்கார் யூனிஸ் செய்யவில்லை?
 பயிற்சியாளராக தோல்வி
 இரண்டு முறை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தபோதிலும், வக்கார் யூனிஸால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்த முடியவில்லை. பாகிஸ்தானின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான வக்கார் யூனிஸால் ஒரு பயிற்சியாளராக சாதிக்க முடியவில்லை. அவர் தோல்வியைத் தழுவினார் என்பது தான் உண்மை. ஒரு நல்ல வீரர், நல்ல பயிற்சியாளராக இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எது எப்படியோ வக்கார் யூனிஸின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது.
 இனி சரியான, பொருத்தமான பயிற்சியாளரை தேர்வு செய்வதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால். புதிய கேப்டனை நியமித்தால் மட்டும் போதாது. புதிய பயிற்சியாளர் சரியான நபராக இருந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியை பலப்படுத்த முடியும்.
 பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஏனெனில் பாகிஸ்தான் தோற்கும்போதெல்லாம் பயிற்சியாளருக்கு கடும் நெருக்கடி ஏற்படும். சில நேரங்களில் மிரட்டலை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே புதிய பயிற்சியாளர் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது, மன திடம் கொண்டவராகவும் இருப்பது அவசியம்.
 முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் பாகிஸ்தானின் பயிற்சியாளர் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார். பாகிஸ்தானின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான அக்ரமால், நிச்சயம் சிறந்த பயிற்சியாளராக செயல்பட முடியும்.
 யாரை பயிற்சியாளராக நியமித்தாலும், பரிசோதனை அடிப்படையிலாவது பயிற்சியாளருக்கு முழு சுதந்திரமும், கால அவகாசமும் அளிப்பது அவசியம். பயிற்சியாளர் விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான முடிவெடுக்குமா?
 "தனது பரிந்துரைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தவில்லை என சாடுகிறார் வக்கார் யூனிஸ். நல்ல திட்டங்களை கூறும்போது, அதை அணி நிர்வாகம் புறக்கணிக்குமானால், தனது பதவியை ராஜிநாமா செய்வதுதான் ஒரு நல்ல பயிற்சியாளருக்கு அழகு. அதை ஏன் வக்கார் யூனிஸ் செய்யவில்லை?'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.