/

சாதிக்குமா சாய்னா படை?

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சார்பில் 7 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது. கடந்த ஒலிம்பிக்கில் 5 பேர் பங்கேற்ற நிலையில், இந்த முறை 7 பேர் பங்கேற்பதன் மூலம் இந்திய பாட்மிண்டன் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர முடிகிறது.

News image
Updated On :22 ஜூலை 2016, 9:32 pm

ஏ.வி. பெருமாள்

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சார்பில் 7 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது. கடந்த ஒலிம்பிக்கில் 5 பேர் பங்கேற்ற நிலையில், இந்த முறை 7 பேர் பங்கேற்பதன் மூலம் இந்திய பாட்மிண்டன் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர முடிகிறது.

ரியோ ஒலிம்பிக்கைப் பொறுத்தவரையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையான சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோரும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்தும், மகளிர் இரட்டையர் பிரிவில்

ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடியும், ஆடவர் இரட்டையர் பிரிவில் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடியும் களம் காணவிருக்கின்றன. இவர்களின் பதக்க வாய்ப்பு குறித்த ஒரு தொகுப்பு:

சாய்னா நெவால்

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாய்னா, சர்வதேச தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த சீசனின் ஆரம்பத்தில் தடுமாறியபோதும், ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் உச்சகட்ட ஃபார்முக்கு வந்திருக்கிறார். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா, இந்த முறை தங்கமோ அல்லது வெள்ளியோ வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சாய்னா, தங்கப் பதக்கம் வெல்வதற்கு ரியோ ஒலிம்பிக் போட்டியே கடைசி வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் அடுத்த ஒலிம்பிக் போட்டியின்போது அவர் 30 வயதை எட்டியிருப்பார். தற்போதுள்ள ஃபார்மை இன்னும் 4 ஆண்டுகளுக்கு தக்கவைப்பது கடினம். அவருடைய ஆட்டத்தில் வேகம் குறைந்திருக்கும். லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது சீன வீராங்கனைகள் மட்டுமே. ஆனால் இந்த முறை ஸ்பெயினின் கரோலினா மரினும் சாய்னாவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறார்.

சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கரோலினா மரின், 2-ஆவது இடத்தில் உள்ள சீனாவின் வாங் இகன், 3-ஆவது இடத்தில் இருக்கும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லீ ஸியூரூய், 4-ஆவது இடத்தில் இருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனன் ஆகியோரின் சவாலை சாய்னா எப்படி சமாளிக்கிறார் என்பதைப் பொறுத்தே அவருடைய பதக்க வாய்ப்பு அமையும். குறிப்பாக கரோலினா மரின், லீ ஸியூரூய் ஆகியோர் சாய்னாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். எனினும் சாய்னாவின் வெற்றியில் டிராவும் முக்கியப் பங்கு வகிக்கும். சாய்னா நிச்சயம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.வி.சிந்து

இந்திய பாட்மிண்டனில் சாய்னாவுக்கு அடுத்தபடியான நம்பிக்கைக்குரிய வீராங்கனை என்றால் அது பி.வி.சிந்துதான். உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இரு வெண்கலம் வென்றவரான சிந்து, முதல்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.

சர்வதேச அளவிலான போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தவரான சிந்து, நிச்சயம் இந்த ஒலிம்பிக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் பதக்கம் வெல்வாரா என்பது சந்தேகமே. டிராவைப் பொறுத்து அவர் அரையிறுதி வரை முன்னேற வாய்ப்புள்ளது. மிகச்சிறப்பாக ஆடும்பட்சத்தில் வெண்கலப் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

ஸ்ரீகாந்த்

ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் இளம் வீரரான ஸ்ரீகாந்த், அறிமுக ஒலிம்பிக்கில் களமிறங்குகிறார். 2014-இல் நடைபெற்ற சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான சீனாவின் லின் டானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றபோது பாட்மிண்டன் உலகின் புதிய அவதாரமாக உருவெடுத்தார் ஸ்ரீகாந்த். அவர் சூப்பர் சீரிஸ் பிரீமியர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.

ஹைதராபாதில் பிறந்தவரான ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் சீன ஓபன் போட்டி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் பதக்கம் வென்றிருக்கும் ஸ்ரீகாந்த், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்துக்கு முதல் சுற்றே கடினமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்பட்சத்தில் ஸ்ரீகாந்த் அரையிறுதி வரை முன்னேற வாய்ப்புள்ளது.

ஜூவாலா-அஸ்வினி ஜோடி

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 2-ஆவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது. கடந்த ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறிய இந்த ஜோடி, அதன்பிறகு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் வென்றுள்ளது. சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது இந்த ஜோடியின் பலவீனமாகும். இந்த ஜோடி காலிறுதி வரை முன்னேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி

ஆடவர் இரட்டையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் முதல் இந்திய ஜோடி என்ற பெருமை மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடிக்கு கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து ஆடி வரும் இந்த ஜோடி மெக்ஸிகோ, கனடா ஓபன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. போதிய அனுபவம் இல்லாத இந்த ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றை தாண்டினால் அது பெரிய விஷயமாக இருக்கும்.

1972 மூனிச் ஒலிம்பிக்

20-ஆவது ஒலிம்பிக் போட்டி 1972-இல் மேற்கு ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்றது. ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கில் 12 நாடுகளில் இருந்து 7170 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

சோவியத் யூனியன் 50 தங்கம், 27 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா 33 தங்கம், 31 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 94 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தையும், கிழக்கு ஜெர்மனி 20 தங்கம், 23 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்தையும் பிடித்தன.

கறுப்பு செப்டம்பர்: ஒலிம்பிக் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தபோது, ஒலிம்பிக் கிராமத்துக்குள் புகுந்த பாலஸ்தீன பயங்கரவாதிகள் 8 பேர், இஸ்ரேலைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என 9 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டுமென்று அவர்கள் கோரினர்.

அதைத்தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த இரு பிûணைக் கைதிகளை முதலில் சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள், எஞ்சிய கைதிகளை பாலஸ்தீனத்துக்கு கடத்தும் முயற்சி தோல்வியடைந்ததால் அவர்களை சுட்டுக்கொன்றனர். பின்னர் ஜெர்மனி போலீஸாருடன் நடந்த மோதலில் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இதில் ஜெர்மனி போலீஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார். சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம், கறுப்பு செப்டம்பர் என்று வரலாற்றில் நினைவுகூரப்படுகிறது.

பதக்கத்தைப் புறக்கணித்த அமெரிக்கா

கூடைப்பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்ற அமெரிக்கா வெள்ளிப் பதக்கத்தை பெற மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இறுதி ஆட்டத்தில் ரஷியா - அமெரிக்கா அணிகள் மோதின. அமெரிக்கா 50-49 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

ஆனால் கடைசி கட்டத்தில் ரஷியா மேலும் 2 புள்ளிகளைப் பெற்று வென்றது. ஆனால் அதற்கு முன்னரே ஆட்டநேரம் முடிந்துவிட்டதாக கூறி அமெரிக்கா சர்ச்சையை கிளப்பியது.

இதனால் அமெரிக்கா வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. கூடைப்பந்து வரலாற்றில் இது ஒரு மோசமான நிகழ்வாக இப்போதும் கருதப்படுகிறது.

இந்தியாவுக்கு வெண்கலம்

இந்த ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 1920-ஆம் ஆண்டுக்குப்பின் வில்வித்தைப் போட்டி இந்த ஒலிம்பிக்கில் மீண்டும் இடம்பெற்றது.

7 தங்கம் மூனிச் ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீரர்

மார்க் ஸ்பிட்ஸ் 7 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒரு ஒலிம்பிக் போட்டியில் தனி வீரர் ஒருவர் வென்ற அதிகபட்ச பதக்கம் இதுவாகும். 2008-இல் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கின்போது அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கம் வென்று மார்க் ஸ்பிட்ஸின் சாதனையை முறியடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.