மல்லுக்கட்ட காத்திருக்கும் இந்தியர்கள்!
ஒலிம்பிக்கில் மல்யுத்த விளையாட்டு இருந்தால், அதில் நிச்சயம் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்பதை கடந்த இரு ஒலிம்பிக்கிலும் நிரூபித்திருக்கிறார்கள் இந்திய மல்யுத்த வீரர்கள்.


ஒலிம்பிக்கில் மல்யுத்த விளையாட்டு இருந்தால், அதில் நிச்சயம் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்பதை கடந்த இரு ஒலிம்பிக்கிலும் நிரூபித்திருக்கிறார்கள் இந்திய மல்யுத்த வீரர்கள். இந்த முறையும் அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற களமிறங்குகிறது யோகேஷ்வர் தத் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் மல்லுக்கட்டுவதற்காக இந்தியாவின் சார்பில் 8 பேர் களமிறங்குகின்றனர். ஆடவர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சந்தீப் தோமர் (66 கிலோ எடைப் பிரிவு), யோகேஷ்வர் தத் (65 கிலோ), நர்சிங் யாதவ் (74 கிலோ) ஆகியோரும், கிரேக்கோ ரோமன் பிரிவில் ஹர்தீப் சிங் (85 கிலோ), ரவீந்திர கேத்ரி (98கிலோ) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மகளிர் பிரிவில் பபிதா குமாரி (53 கிலோ), சாக்ஷி மாலிக் (58 கிலோ), வினேஷ் போகத் (43 கிலோ) ஆகியோர் பங்கேற்கின்றனர்.
2004-இல் ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கிரேக்கோ ரோமன் பிரிவில் முதல்முறையாக இந்திய அணி களமிறங்குகிறது. இதேபோல் மல்யுத்தத்தின் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா களமிறங்குவது இதுவே முதல்முறையாகும். இந்திய வீரர், வீராங்கனைகளின் பதக்க வாய்ப்பைப் பற்றிய ஒரு தொகுப்பு:
ஒலிம்பிக்கில் 4-ஆது முறையாக பங்கேற்கும் இந்தியாவின் முதல் மல்யுத்த வீரர் என்ற பெருமையோடு களம் காணவிருக்கிறார் யோகேஷ்வர் தத். ஹரியாணா மாநிலம் சோன்பட் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், லண்டனில் நடைபெற்ற முந்தைய ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற 3-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
கடந்த முறை 60 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் பங்கேற்ற யோகேஷ்வர் தத், இந்த முறை 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் களம் காண்கிறார். 2014-இல் நடைபெற்ற காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றிருக்கும் யோகேஷ்வர் தத், ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக காயத்தால் அவதிப்பட்ட 33 வயதான யோகேஷ்வர் தத் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டி இது. எனவே இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெருமையோடு விடைபெற வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார்.
"எனது வாழ்க்கையில் இருக்கும் ஒரே குறிக்கோள், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வெல்ல வேண்டும் என்பதுதான். ரியோவில் தங்கப் பதக்கம் மட்டுமே இலக்கு. அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை' என சூளுரைத்திருக்கிறார் யோகேஷ்வர் தத்.
யோகேஷ்வர் தத்தின் தங்கக் கனவு நனவானால், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீரர், ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற 2-ஆவது இந்தியர் என்ற சாதனை அவர் வசமாகும்.
சந்தீப் தோமர்
உத்தரப் பிரேதச மாநிலம் மலாக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவரான சந்தீப் தோமர், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். 12 வயதில் மல்யுத்த வீரராக உருவெடுத்த தோமர், 2011-ல் நடைபெற்ற
தேசிய ஜூனியர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
2013, 2014-இல் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியிலும், 2014-இல் ராணுவ சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.
இந்த ஆண்டில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருக்கும் தோமர், இப்போது ரியோ ஒலிம்பிக்கில் களமிறங்கவுள்ளார். களத்தில் எதிராளிகளை அசாத்திய நம்பிக்கையோடு சந்திக்கும் ஆற்றல் கொண்டவரான தோமர், காலிறுதி வரை முன்னேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நர்சிங் யாதவ்
கடும் போராட்டத்துக்குப் பிறகு ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் நர்சிங் யாதவ். அவர் தகுதிச்சுற்றின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 74 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தாலும், அதே பிரிவில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரான சுஷீல்
குமார் அடம்பிடித்தார். இதனால் யாருக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்கும் என்ற குழப்பம் நிலவியது. இறுதியில் நீதிமன்ற படியேறிய இந்த விவகாரத்தில் நர்சிங் யாதவுக்கு பச்சை கொடி காட்டப்பட்டது.
பால் வியாபாரியின் மகனாக பிறந்து காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவரான நர்சிங் யாதவ், இந்த ஒலிம்பிக்கில் ஏதாவது ஒரு பதக்கம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மாறாக அவர் பதக்கம் வெல்லாமல் போனால், பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளி வென்றவரான சுஷீல் குமாருக்கு வாய்ப்பளித்திருந்தால், அவர் இந்த முறை தங்கம் வென்றிருப்பார் என எதிர்மறை விமர்சனங்கள் வரக்கூடும். நர்சிங் யாதவ், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கமாவது வெல்வார் என்ற எதிர்பார்ப்புள்ளது. அதை அவர் நிறைவேற்றுவாரா? விமர்சனங்களைத் தவிர்ப்பாரா என்பதற்கான விடை அடுத்த மாதம் தெரிந்துவிடும்.
ஹர்தீப் சிங்
கிரேக்கோ ரோமன் ஹெவிவெயிட் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கும் முதல் இந்தியரான ஹர்தீப் சிங், 2013 காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார். ஹர்தீப் சிங், அதிகபட்சமாக காலிறுதி வரை முன்னேறலாம்.
ரவீந்தர் கேத்ரி
கிரேக்கோ ரோமன் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கும் 2-ஆவது இந்தியரான ரவீந்தர் கேத்ரி, தேசிய அளவிலான போட்டிகளில் 15 முறையும், காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 4 முறையும் வாகை சூடியிருக்கிறார். 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் உக்ரைன் வீரர்கள், ரவீந்தர் கேத்ரிக்கு சவாலாக இருப்பார்கள். அவர்களை எப்படி சமாளிக்கிறார் என்பதைப் பொறுத்தே கேத்ரியின் பதக்க வாய்ப்பு அமையும். தந்தையின் ஆசைப்படி மல்யுத்த வீரராக உருவெடுத்த கேத்ரி, இந்த முறை தந்தைக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வாரா?
மகளிர் பிரிவு
மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், பபிதா குமாரி ஆகியோரில் அனுபவ வீராங்கனையான பபிதா குமாரி மட்டுமே பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...