குத்துச்சண்டையில் கோலோச்சுமா இந்தியா?
இந்தியாவில் பண்டைக்காலம் தொட்டே குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்று வந்தாலும், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்ற பிறகுதான் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது.


இந்தியாவில் பண்டைக்காலம் தொட்டே குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்று வந்தாலும், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்ற பிறகுதான் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது.
அதன் எதிரொலியாக 2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் மேரி கோம் உள்ளிட்ட 8 பேர் குத்துச்சண்டையில் களமிறங்கினார்கள். இந்திய அணி நிச்சயம் 4 பதக்கங்கள் வரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடுவர்களின் பாரபட்சமான தீர்ப்பால் விகாஸ் கிரிஷன் உள்ளிட்டோர் ஆரம்ப சுற்றுகளோடு வெளியேற்றப்பட, மேரி கோம் மட்டும் வெண்கலப் பதக்கத்தோடு நாடு திரும்பினார்.
இதன்பிறகு இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் கோஷ்டி பூசல்களால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெறவில்லை. இதனால் இந்திய குத்துச்சண்டை விளையாட்டில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டது.
குத்துச்சண்டை சம்மேளனத்தின் துணையின்றி சர்வதேச குத்துச்சண்டை களத்தில் போராடிய வீரர்களும் ஒரு கட்டத்தில் சோர்வடைந்து போனார்கள். அதன் விளைவு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சிவ தாபா, விகாஸ் கிரிஷன், மனோஜ் குமார் ஆகியோர் 3 பேர் மட்டுமே தகுதி பெற்றிருக்கிறார்கள். இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் செயல்பாடுகள் ஒருபுறம் வேதனையளித்தாலும், இந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 3 பேருமே பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பது ஆறுதல் அளிக்கிறது. ரியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீரர்களின் பதக்க வாய்ப்பைப் பற்றிய ஒரு தொகுப்பு:
சிவ தாபா: குத்துச்சண்டை வீரனாவதற்காகவே பிறந்தேன்... இதுதான் 22 வயது சிவ தாபாவின் தாரக மந்திரம். அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பிறந்தவரான சிவ தாபா, ஆரம்பத்தில் கராத்தே, தடகளம், வடகிழக்கு மாநிலங்களின் பிரதான விளையாட்டான கால்பந்து ஆகியவற்றில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார்.
ஏதேச்சையாக தொலைக்காட்சியில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனின் ஆட்டத்தை சிவா தாபா பார்க்க, அது அவருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டது. அதன்பிறகு குத்துச்சண்டையில் காலடி எடுத்துவைத்த சிவ தாபாவுக்கு ஏறுமுகம்தான்.
18 வயதில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றபோது குத்துச்சண்டை உலகை திரும்பிப் பார்க்க வைத்தார் சிவ தாபா. இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளம் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமை அவர் வசமானது. அந்த ஒலிம்பிக்கில் ஆரம்ப சுற்றோடு வெளியேறினாலும், அதன் பிறகு அவரின் வேகமோ, ஆக்ரோஷமோ குறையவில்லை.
பல்வேறு சர்வதேச போட்டிகளில் நடப்பு சாம்பியன்களை தனது "பவர்ஃபுல் பஞ்ச்' மூலம் சாய்த்த சிவ தாபா, ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றின் மூலம் இந்தியாவிலிருந்து முதல் நபராக ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்க தகுதி பெற்றார்.
சர்வதேச குத்துச்சண்டை களத்தில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்திருக்கும் சிவ தாபா, ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பதக்கத்தோடுதான் அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விகாஸ் கிரிஷன்: 75 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் விகாஸ் கிரிஷனுக்கு இது 2-ஆவது ஒலிம்பிக். 2011-இல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும், 2010, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றிருக்கிறார்.
சர்வதேச தரவரிசையில் முன்னிலையில் இருப்பதால், "டிரா' அவருக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெனிசுலாவில் தலைசிறந்த வீரர்களுடன் சண்டையிட்டு தன்னை வலுப்படுத்திக் கொண்டு ஒலிம்பிக்கில் களமிறங்கும் கிரிஷன், குறைந்தபட்சம் வெண்கலமாவது வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வெல்ல முடியும் என்ற உணர்வு தனக்குள் ஏற்பட்டிருப்பதாக கிரிஷனும் கூறியிருக்கிறார். ரியோ ஒலிம்பிக்கே தனக்கு கடைசி ஒலிம்பிக்காக இருக்கும் என்பதால் பதக்கத்தோடு நாடு திரும்ப வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் கிரிஷன்.
மனோஜ் குமார்: ரியோ ஒலிம்பிக்கில் 64 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் மனோஜ் குமார். 2010-இல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கமும், 2007, 2013-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் வென்றுள்ளார். இந்த ஆண்டு குவாஹாட்டியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ள மனோஜ் குமார், உலக தகுதிச்சுற்றின் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.
தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர் சிங் கலக்கி வரும் நிலையில், மனோஜ் குமாரோ, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பிறகே தொழில்முறை குத்துச்சண்டையில் களமிறங்குவேன் என தெரிவித்திருக்கிறார். ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் ஜொலிக்க முடியாது. எனவே அவர் விரைவாக தொழில்முறை போட்டியில் களமிறங்குவதற்காக ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நிச்சயம் அவருக்கு ஏதாவது ஒரு பதக்கம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரகாசமான வாய்ப்பு
ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு குறித்து 1992-இல் பார்சிலோனா ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரருமான வெங்கடேஷ் தேவராஜன் கூறியதாவது:
சிவ தாபா, மனோஜ் குமார், விகாஸ் கிரிஷன் ஆகிய 3 பேருமே இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. நான் குத்துச்சண்டை வீரராக இருந்த காலத்தில், ஒலிம்பிக்கில் பங்கேற்றாலே போதும் என்று
நினைத்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையோடு வீரர்கள் இருக்கிறார்கள்.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதால், ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களுக்கு எதிராக நடுவரின் தீர்ப்பு அமையுமானால் அவர்களுக்காக போராடுவதற்கு ஆள் கிடையாது. இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கும் தவறை தட்டி கேட்கும் திராணியில்லை.
லண்டன் ஒலிம்பிக்கில் விகாஸ் கிரிஷன் வென்றபோதும்கூட, அவரை தோற்றதாக நடுவர் அறிவித்தார். அப்போது இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் செயல்பாட்டில் இருந்தபோதும்கூட, நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஆசிய விளையாட்டின்போது சரிதா தேவிக்கு எதிராக நடுவர் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியபோதுகூட, நடுவரின் தீர்ப்பை ஆய்வு செய்வதற்கு அவருடைய கணவர்தான் பணம் கட்டினார். நடுவரின் தவறை மறைத்துவிட்டு பதக்கத்தைப் புறக்கணித்ததற்காக சரிதா தேவிக்கு ஓர் ஆண்டு தடை விதித்தார்கள்.
ரியோ ஒலிம்பிக்கில் நடுவர்கள் நியாயமாக நடந்து கொண்டால் நிச்சயம் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும். வெற்றியும்,தோல்வியும் விளையாட்டில் சகஜம். உலக ஒற்றுமையை பேணி காக்கும் வகையில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நடுவர்கள் ஏமாற்றுவதை அவமானமாகக் கருதுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...