/

ஐஎஸ்எல்: மோகன் பகானுக்கு 5-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது. 

News image
கோவாவின் மர்காவ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் - பெங்களூரு வீரர்கள்.
Updated On :22 டிசம்பர் 2020, 1:30 am

DIN

மர்காவ்: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது. 

இரு அணிகளும் இதுவரை தலா 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் பெங்களூருக்கு இது முதல் தோல்வி; மோகன் பகானுக்கு இது 5-ஆவது வெற்றி. 

கோவாவின் மர்காவ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சம பலத்துடன் மோதின. தொடக்கம் முதலே ஒன்றுக்கொன்று கோல் வாய்ப்புகளுக்கு முயற்சிக்க, பரஸ்பரம் அரண் போல் தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தின. இந்நிலையில், ஆட்டத்தின் 33-ஆவது நிமிடத்தில் மோகன் பகான் கோலடித்தது. 

அந்த நிமிடத்தில் மோகன் பகான் வீரர் கார்ல் மெக் ஹியூக் இடது பக்கத்திலிருந்து லாங் பாலாக ஷாட் அடிக்க, மிகச் சரியாக அதை தன் வசப்படுத்திக் கொண்ட அணியின் சக வீரர் டேவிட் வில்லியம்ஸ், தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொண்டார். தனது இலக்கிலிருந்து தவறாத அவர், பெங்களூரு வீரர் ஹர்மன்ஜோத் காப்ராவின் தடுப்பாட்டத்திலிருந்து லாகவமாக தப்பித்து, பந்தை கோல் போஸ்ட்டுக்குள்ளாகத் தள்ளினார். 

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 38-ஆவது நிமிடத்தில் பெங்களூருக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தும், அதை கோலாக மாற்றத் தவறியது. இவ்வாறாக முதல் பாதி ஆட்டத்தில் மோகன் பகான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. பிற்பாதி ஆட்டத்திலும் பெங்களூருக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, இறுதியில் மோகன் பகான் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.