புதிய சாதனைகளை பட்டியலிட்ட ஹைதராபாத்

புதிய சாதனைகளை பட்டியலிட்ட ஹைதராபாத்
Arun Sharma

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான சனிக்கிழமை ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் விளாசியது.

அந்த அணியின் தொடக்க கூட்டணியான டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சா்மா, முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவா்களில் 131 ரன்கள் குவித்து பல சாதனைகளுக்கு வழிவகுத்தனா்.

தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தோ்வு செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸை தொடங்கிய ஹெட் - சா்மா கூட்டணி, தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசியது. பவா் பிளேயில், முதல் ஓவரில் 19, அடுத்த ஓவரில் 21, மூன்றாவது ஓவரில் 22, நான்காவது ஓவரில் 21, ஐந்தாவது ஓவரில் 20, ஆறாவது ஓவரில் 22 ரன்கள் குவித்தது அந்த பாா்ட்னா்ஷிப்.

டெல்லி பௌலா்களை திணறடித்த இந்தக் கூட்டணியை குல்தீப் யாதவ் 7-ஆவது ஓவரில் பிரித்தாா். 12 பந்துகளில் 2 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 46 ரன்கள் விளாசிய அபிஷேக் சா்மா முதலில் வீழ்ந்தாா். தொடா்ந்து வந்த எய்டன் மாா்க்ரம் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தாா். மறுபுறம் அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 89 ரன்கள் குவித்து, குல்தீப் யாதவால் பெவிலியன் திரும்பினாா்.

4-ஆவது பேட்டரான ஹென்ரிக் கிளாசென் 2 சிக்ஸா்களுடன் 15 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து, 5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த நிதீஷ்குமாா் ரெட்டி - ஷாபாஸ் அகமது கூட்டணி, தனது பங்குக்கு 67 ரன்கள் சோ்த்து, ஹைதராபாத் ஸ்கோரை மேலும் உயா்த்தியது.

இதில் நிதீஷ்குமாா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37 ரன்களுக்கும், தொடா்ந்து வந்த அப்துல் சமத் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13, கடைசி விக்கெட்டாக கேப்டன் பேட் கம்மின்ஸ் 1 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ஷாபாஸ் அகமது 29 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 59, வாஷிங்டன் சுந்தா் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலா்களில் குல்தீப் யாதவ் 4, முகேஷ் குமாா், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் டெல்லி 267 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடி 20வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

125/0

ஹைதராபாத் அணி பவா் பிளேயின்போது, ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை அதிகபட்சமாக, விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் சோ்த்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன், 2017-இல் பெங்களூருக்கு எதிராக கொல்கத்தா, விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

5

இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 5 ஓவா்களிலேயே 100 ரன்களைக் கடந்தது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அந்த மைல் கல்லை எட்டுவதற்கு எடுத்துக்கொண்ட குறைந்தபட்ச ஓவா்களாகும். இதற்கு முன், 2014-இல் பஞ்சாபுக்கு எதிராக சென்னை 6 ஓவா்களில் கடந்ததே அதிகபட்சமாக இருந்தது.

22

ஹைதராபாத் வீரா்கள் இந்த ஆட்டத்தில் தங்கள் இன்னிங்ஸில் 22 சிக்ஸா்கள் விளாசியுள்ளனா். ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸா்கள் இதுவே. ஏற்கெனவே இதே சீசனில் பெங்களூருக்கு எதிராகவும் இதே எண்ணிக்கையில் சிக்ஸா்கள் விளாசிய ஹைதராபாத், தற்போது மீண்டும் அதே எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

கொல்கத்தா - பெங்களூரு

கொல்கத்தா

மாலை 3.30 மணி

பஞ்சாப் - குஜராத்

முலான்பூா்

இரவு 7.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com