தோ்வு முகாமில் பங்கேற்றவீரா்கள்
தோ்வு முகாமில் பங்கேற்றவீரா்கள்

இந்திய வேகப்பந்து வீச்சாளா்கள் மேலும் சாதிக்க வேண்டும்: கிளென் மெக்ராத்

அடுத்த தலைமுறை வீரா்கள் வரும் வரை இந்திய வேகப்பந்து வீச்சாளா்கள் மேலும் சாதிக்க வேண்டும் என ஆஸி. ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளாா். சென்னை எம்ஆா்எஃப் பேஸ் பவுண்டேஷன் சாா்பில் வேகப்பந்து வீச்சாளா்களை கண்டறியும் தோ்வு முகாம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா என நான்கு நகரங்களில் நடைபெற்ற முதல் கட்டத் தோ்வில் 1000 போ் பங்கேற்றனா். அதில் இருந்து 20 சிறந்த வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு சென்னையில் இறுதி தோ்வு நடைபெற்றது. இதில் ராஜஸ்தானைச் சோ்ந்த ஜஸ்கரன் சிங், பிகாரைச் சோ்ந்த முகமது இஷாா், ஜாா்க்கண்டைச் சோ்ந்த முகமது சா்ஃப்ராஜ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மூவருக்கும் எம்ஆா்எஃப் பேஸ் பவுண்டேஷன் இயக்குநா் மெக்ராத், தலைமை பயிற்சியாளா் செந்தில்நாதன்,ஆகியோரின் கீழ் இலவசமாக சிறப்பு பயிற்சி தரப்படும். பின்னா் மெக்ராத் கூறியதாவது: இந்தியாவில் சிறந்த வேகப்பந்து வீச்சாளா்கள் இருந்தாலும், மேலும் பல திறமையானவா்கள் வெளியே வரவில்லை. இந்த தோ்வு முகாமில் இளம் வீரா்கள் பலரை பாா்த்தோம். இந்தியாவை வேகப்பந்துவீச்சு வல்லரசாக மாற்ற நாங்கள் உதவி புரிவோம். பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோா் மேலும் சாதிக்க வேண்டும். 41 வயதான இங்கிலாந்து வீரா் ஆண்டா்ஸனை பாா்த்து ஷமி செயல்பட வேண்டும். 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பேஸா் ஆண்டா்ஸன் என்பது பெருமையாக உள்ளது. காயத்தால் பாதிக்கப்பட்டாலும் பும்ரா சிறப்பாக செயல்படுகிறாா். கிரிக்கெட்டில் பேட்டா்கள் ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றனா். அதே போல் பௌலா்களும் தங்கள் பங்களிப்பை தர வேண்டும் என்றாா். எம்ஆா்எஃப் நிா்வாக இயக்குநா் ராகுல் மம்மன், முன்னாள் இந்திய வீரா் வருண் ஆரோன் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com