

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கார்டிப் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களைக் குவித்தது.
லோகேஷ் ராகுல், தோனி இணைந்து அபாரமாக ஆடி சதமடித்தனர். ராகுல் 108, தோனி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். 50 ஓவர்களில் வங்கதேச அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் இன்னிங்ஸில் 39-வது ஓவரில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
சபிர் ரஹ்மான் பந்துவீச வந்தபோது பாதியிலேயே அவரைத் தடுத்தார் தோனி. அவரும் பந்துவீசுவதை நிறுத்தி தோனியைப் பார்த்தார். தோனி தனக்கு இடப்பக்கம் உள்ள ஃபீல்டரை நோக்கிக் கையைக் காண்பித்தார். மிட் விக்கெட் பக்கம் நின்றுகொண்டிருந்த அந்த ஃபீல்டரை ஸ்கொயர் லெக் பக்கம் நிற்கவைக்கும்படி சைகை காண்பித்தார் தோனி. பந்துவீச்சாளரும் அதை ஏற்றுக்கொண்டு அந்த ஃபீல்டரை நகர்ந்து நிற்கச் சொன்னார். தோனி அறிவுறுத்தியபடி மிட் விக்கெட் பக்கமிருந்த அந்த ஃபீல்டர் ஸ்கொயர் லெக் பக்கம் சென்று நின்றுகொண்டார்.
கேப்டன் பதவியிலிருந்து விலகியபிறகும், இந்திய அணியின் திட்டமிடல்களில் தோனியின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது. முக்கியமாக, பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் அறிவுரை சொல்வார் தோனி. இதனால் தன்னுடைய வேலையைச் சுலபமாக்குகிறார் என்றுகூட கேப்டன் கோலி பேசியிருக்கிறார். இந்நிலையில் தற்போது எதிரணியின் ஃபீல்டிங்கிலும் தோனி தலையிட்டு அது அவர் சொன்னபடி நடந்திருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணியுள்ளது. பலரும் தோனியைப் பாராட்டி ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.