
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 21) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, துணைக் கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹாசன் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இதனையடுத்து, வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாத்மன் இஸ்லாம் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். மோமினுல் ஹேக் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முஸ்பிகூர் ரஹீம் 55 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வங்கதேச அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 132 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.