பார்டர் - காவஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் வரிசையாக அவுட்டாகியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறி வருகின்றது.
பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
டாஸ் வென்ற பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கிய நிலையில், தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து களமிறங்கிய படிக்கலும் டக் அவுட்டானதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் விராட் கோலியும் 5 ரன்களில் ஹேசில்வுட பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
20 ஓவர்கள் முடிவில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறி வருகின்றது. தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுலும், ரிஷப் பந்தும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட் 2, மிட்சல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.