
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து விஸ்வா ஃபெர்னாண்டோ காயம் காரணமாக விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. முதல் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
காயம் காரணமாக விலகல்
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இலங்கை வேகப் பந்துவீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோ காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோவுக்கு பயிற்சியின்போது, காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக அணியில் வலதுகை ஆஃப் ஸ்பின்னரான நிஷான் பெய்ரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசையில் முன்னேற்றம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 50 சதவிகித வெற்றிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 42.86 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி 4-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான போட்டியில் நீடிக்க, இரு அணிகளுக்கும் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.