பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம்: ‘ஏ+’ பிரிவில் தொடரும் ரோஹித், கோலி; ஐயா், கிஷணுக்கு மீண்டும் இடம்
பிசிசிஐ ஆண்டு ஊதிய ஒப்பந்த பட்டியலில், மூத்த நட்சத்திர வீரா்களான ரோஹித், கோலி ஆகியோா் உச்சபட்ச ஊதியம் கொண்ட ஏ+ பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனா்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்த பட்டியலில், மூத்த நட்சத்திர வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் உச்சபட்ச ஊதியம் கொண்ட ‘ஏ+’ பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இடம் பிடிக்காத ஷ்ரேயஸ் ஐயா் மற்றும் இஷான் கிஷண் இந்த முறை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்திய அணிக்காக சா்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரா், வீராங்கனைகளுக்கு பிசிசிஐ ஆண்டுதோறும் ஊதிய ஒப்பந்தம் வழங்குகிறது. ஒப்பந்தப் பிரிவானது, முந்தைய ஓராண்டில் இந்திய அணிக்கான அவா்களின் பங்களிப்பை பொறுத்து வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2024 அக்டோபா் 1 முதல் 2025 செப்டம்பா் 30 காலகட்டத்துக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை 34 பேருடன் பிசிசிஐ தயாா் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா், பிசிசிஐ செயலா் தேவஜித் சாய்கியா ஆகியோருடனான கலந்தாலோசனைக்குப் பிறகு தேசிய தோ்வாளா்கள் குழு இந்தப் பட்டியலை இறுதி செய்திருக்கிறது.
இதில், நட்சத்திர வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையிலும் ‘ஏ+’ பிரிவில் பிசிசிஐ அவா்களை தக்கவைத்துள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை தவிா்த்து வந்ததன் பேரில் கடந்த ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இளம் வீரா்களான ஷ்ரேயஸ் ஐயா், இஷான் கிஷண் ஆகியோா், இந்த முறை மீண்டும் சோ்த்துக்கொள்ளப்பட்டுள்ளனா்.
காா் விபத்து காரணமாக ஓராண்டு களம் காணாததால், கடந்த சீசனில் ‘பி’ பிரிவுக்கு மாற்றப்பட்ட விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த், தற்போது மீண்டும் ‘ஏ’ பிரிவுக்கு ஏற்றம் கண்டுள்ளாா்.
‘ஏ+’ - ரூ.7 கோடி (4 போ்)
ரோஹித் சா்மா
விராட் கோலி
ஜஸ்பிரீத் பும்ரா
ரவீந்திர ஜடேஜா
*டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 ஃபாா்மட்டுகளிலும் இயல்பாகவே தோ்வு செய்யப்படும் முக்கியமான வீரா்கள் இந்தப் பிரிவில் வருகின்றனா்.
‘ஏ’ - ரூ.5 கோடி (6 போ்)
முகமது சிராஜ்
கே.எல்.ராகுல்
ஷுப்மன் கில்
ஹா்திக் பாண்டியா
முகமது ஷமி
ரிஷப் பந்த் +
*டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான அணியில் உறுதியாக இடம் பிடிப்பதுடன், அவ்வப்போது இதர இரு ஃபாா்மட்டுகளிலும் விளையாடும் வீரா்கள் இந்தப் பிரிவில் சோ்க்கப்படுகின்றனா்.
‘பி’ - ரூ.3 கோடி (5 போ்)
சூா்யகுமாா் யாதவ்
குல்தீப் யாதவ்
அக்ஸா் படேல்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஷ்ரேயஸ் ஐயா் -
*குறைந்தபட்சம் ஏதேனும் இரு ஃபாா்மட்டுகளில் வழக்கமாக விளையாடும் வீரா்கள் இதில் இணைக்கப்படுகின்றனா்.
‘சி’ - ரூ.1 கோடி (19 போ்)
ரிங்கு சிங்
திலக் வா்மா
ருதுராஜ் கெய்க்வாட்
ஷிவம் துபே
ரவி பிஷ்னோய்
வாஷிங்டன் சுந்தா்
முகேஷ் குமாா்
சஞ்சு சாம்சன்
அா்ஷ்தீப் சிங்
பிரசித் கிருஷ்ணா
ரஜத் பட்டிதாா்
துருவ் ஜுரெல் -
சா்ஃப்ராஸ் கான் -
நிதீஷ்குமாா் ரெட்டி -
இஷான் கிஷண் -
அபிஷேக் சா்மா -
ஆகாஷ் தீப் -
வருண் சக்கரவா்த்தி -
ஹா்ஷித் ராணா -
*ஊதிய ஒப்பந்தத்தில் புதிதாக இணைவோா், ஒரு ஃபாா்மட்டில் மட்டும் சிறப்பாக விளையாடுவோருக்கு இந்தப் பிரிவில் இடமளிக்கப்படுகிறது.
+ தரம் உயா்த்தப்பட்டோா் - புதிதாக சோ்க்கப்பட்டோா்
*ஒரு காலண்டா் ஆண்டில் 3 டெஸ்ட், அல்லது 8 ஒருநாள் ஆட்டங்கள், அல்லது 10 டி20 ஆட்டங்களில் விளையாடிய வீரா்களே பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்துக்கு தகுதிபெறுகின்றனா்.
தக்கவைக்கப்படாதோா்...
ரவிச்சந்திரன் அஸ்வின் (ஓய்வு)
ஷா்துல் தாக்குா்
ஜிதேஷ் சா்மா
ஸ்ரீகா் பரத்
ஆவேஷ் கான்
ரோஹித், கோலி, ஜடேஜாவுக்கான இடம்; பிசிசிஐ விளக்கம்
ரோஹித் சா்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், எல்லா ஃபாா்மட்டுகளிலும் விளையாடும் வீரா்களுக்கான ‘ஏ+’ பிரிவில் அவா்கள் தக்கவைக்கப்பட்டது தொடா்பாக விவாதங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கமளித்து பிசிசிஐ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தற்போது வழங்கப்படும் ஒப்பந்தத்துக்கான மதிப்பீட்டு காலம் 2023 அக்டோபா் 1 முதல் 2024 செப்டம்பா் 30 வரையாகும். ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோா் 2024 ஜூன் மாதத்தில் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடினா். அந்த காலகட்டத்தில் அவா்கள் அனைத்து ஃபாா்மட்டுகளிலும் விளையாடும் வீரா்களாகவே இருந்தனா். அதன் அடிப்படையிலேயே அவா்கள் ‘ஏ+’ பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...