
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டது. தொடர் அட்டவணையின் படி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய விளையாடவிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
வங்கதேசத்துக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்களுடன் புதிய தொடர் ஒன்றில் விளையாட கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், இந்திய அணிக்கு அடுத்ததாக எந்தப் போட்டியும் இல்லாததால், நேரடியாய செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடவிருக்கிறது.
இந்தத் தொடருக்கான அணி, ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணியின் ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் ஓய்வுபெற்ற நிலையில், இளம் வீரர்கள் பலருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவின் தலைமையில் இந்திய அணி மிக வலிமை வாய்ந்த அணியாகவும் மாறியுள்ளது.
கடந்தாண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஷுப்மன் கில் அதற்கு பின்னர் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், ஒருநாள், டெஸ்ட், ஐபிஎல் என அனைத்து வடிவங்களிலும் ஷுப்மன் கில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்கும் பட்சத்தில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோரின் இடம் கேள்விக் குறியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் 559 ரன்களும், ஷுப்மன் கில் 650 ரன்களும் குவித்திருந்தனர். அதேவேளையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் 759 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் தன்வசமாக்கியிருந்தார்.
தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.